ராகு கேது தோஷத்தை நீக்கும் கோயில்!

100

ராகு கேது தோஷத்தை நீக்கும் கோயில்!

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் நடக்கும் மூலமந்திர ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்வில் சகலவிதமான கஷ்டங்கள் நீங்கி பரிபூர்ண நிலை உண்டாகும்.

கீழ்ப்பாவூர் நரசிம்மர் கோவில்திருநெல்வேலி-தென்காசி சாலையில் திருநெல்வேலியில் இருந்து மேற்காக 44 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கி.மீ. தூரத்திலும் உள்ளது பாவூர்சத்திரம் என்னும் ஊர். இங்கிருந்து 2 கி.மீ. அருகில் சுரண்டை என்னும் ஊருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது கீழப்பாவூர். இங்கு வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, சுவாதி நட்சத்திர நாள், பிரதோஷம் ஆகிய நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

கடன் பிரச்சனை தீரவும், தடைபட்ட திருமணம் நடக்கவும் இந்தக் கோயிலில் வழிபாடு செயகின்றனர். தமிழகத்தில் இங்கு மட்டும் 16 திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்க நிலையில் அபூர்வ வடிவச் சிறப்புடன் அவர் காட்சி தருகிறார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க வெண்கொற்றக் குடையுடன் தியானித்தபடி கம்பீரமாக வீற்றிக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தன்று பிரதோஷ வேளையில் பூஜை இங்கு நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து இதில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்வில் சகலவிதமான கஷ்டங்கள் நீங்கி பரிபூர்ண நிலை உண்டாகும். கல்யாணத் தடை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய், ஆகியவற்றிற்காகவும் இங்கு பரிகாரம் செய்து பலன் பெறலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகார தலமாக விளங்குகிறது.

பொதுவாக ஒவ்வொரு கோயிலுக்கும் ஈசான்ய மூலையில் தான் தீர்த்தம் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் சற்று வித்தியாசமாக நரசிம்மர் சன்னதி முன்பாக தீர்த்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திரப்படி இந்த தீர்த்தம் நர்மதை என்றும், தேவப்ராசிப்படி கங்கையாக விளங்குவதும் இந்த நரசிம்மர் தீர்த்தத்தின் மகிமை ஆகும். மாதந்தோறும் சுவாதி, திருவோணம், வளர்பிறை சதுர்தசி நாட்களில் கோயிலோடு சேர்த்து தீர்த்தம் வலம் வருதல் உற்சவமும் இங்கு நடக்கிறது.

நரசிம்மருடைய சுவாதி நட்சத்திர நாளன்று நரசிம்மருக்கு பால், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் வரும் சுவாதி நட்சத்திர நாளன்று நரசிம்மரை வழிபட்டு வந்தால் கடன் நீங்கி செல்வம் அதிகரிக்கும். ராகு கேது தோஷ பாதிப்பு நீங்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும் என்பது ஐதீகம்.