வளர்பிறை சதுர்த்தி, கிருத்திகை நட்சத்திரம், விரதம் இருப்பது எப்படி?

51

வளர்பிறை சதுர்த்தி, கிருத்திகை நட்சத்திரம், விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். வாழ்வில் நமக்கு விதிக்கப்பட்ட வினையெல்லாம் தீர வேண்டுமென்றால் முருகப்பெருமானின் கிருத்திகை நட்சத்திர விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி தனித்தனி நாளில் வழிப்பட்டாலே சிறப்பு என்றால், இரண்டும் சேர்ந்து வந்தால் இன்னும் சிறப்புதான். இன்று கிருத்திகை மற்றும் சதுர்த்தி இரண்டும் சேர்ந்து வருகிறது. இதில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

இன்னல்கள் இல்லாத இனிமையான வாழ்க்கை அமைய முருகப்பெருமானின் கிருத்திகை விரதம் நமக்கு கைகொடுக்கும். மேலும் தெய்வீக மாதமாக இருக்கும் பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியிலும், கிருத்திகை நட்சத்திரத்திலும் விநாயகப் பெருமான் மற்றும் முருகரை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.
அந்த வகையில் பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில், கிருத்திகை நட்சத்திரத்தில் விநாயகரையும், முருகரையும் வழிபடும் முறைகள் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

கிருத்திகை விரதம்:

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொண்டால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். முருகனின் அருளாற்றல் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபடவும். கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்தும் முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்தும் வணங்க வேண்டும்.

சதுர்த்தி விரத முறைகள்:

  1. சதுர்த்தியன்று அதிகாலை நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
  2. முழுநேரமும் விரதம் இருக்க முடியாதாவர்கள் பால் மற்றும் பழத்தை சாப்பிடலாம்.
    சதுர்த்தியன்று மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.
  3. அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து விரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

பலன்கள்:

விநாயக பெருமான் மற்றும் முருகரை வழிபடுவதால், நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்கும். கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். சேமிப்பு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இருக்கும் மந்த புத்தி நீங்கி, அறிவுக்கூர்மை உண்டாகி கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.