ஆக்ரா டில்லி இரு ஊர்களுக்கும் இடையில் அமைந்துள்ளது கிருஷ்ணர் பிறந்த மதுரா நகரம். மிக அழகான நகரமாக காட்சியளிக்கிறது இவ்வூர். எங்கு பார்த்தாலும் பசுக்கள், கன்றுகள் என கிருஷ்ணர் பிறந்த ஊர் என மெய்ப்பிக்கிறது.
இந்த அழகிய மதுரா நகரம். கிருஷ்ணர் பிறந்த ஊர் என்பதால் இங்கு கிருஷ்ணருக்கு கோவில் உள்ளது. இங்கு கோயிலை ஒட்டி ஒரு குளம் உள்ளது. தேவகிக்குப் பிறந்த மற்ற ஆறு குழந்தைகளும் இந்த குலத்தின் சுவரில்தான் கம்சனால் அடித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்த குளத்தை எட்டிப் பார்ப்பதே பாவம் என்கிற நம்பிக்கை இக்கோவிலில் நிலவுகிறது. அதனால் இக்குளத்தை யாரும் நின்று பார்ப்பதில்லை.
கோயிலில் சூடம் காட்டுவதோ, குங்குமம் போன்றவையோ தருவதோ இல்லை. ஆரத்தி என்கிற ஆராதனை ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே செய்வார்கள். அப்போது தான் தீபாராதனை காட்டுவார்கள். கண்ணன் பிறந்த ‘மதுரா’, வளர்ந்த ‘பிருந்தாவன்’ இரண்டும் ‘வ்ரஜபூமி ‘ என்று அழைக்கப்படுகிறது.
கண்ணன் விரும்பி சாப்பிடும் பால், பால் ஸ்வீட், வெண்ணெய் என்று மதுரா நகர் கடைவீதிகளில் ஒரே பால்மயம்தான். இந்த கோயிலின் உருவச் சிலை ஒரே சாளக்கிராம கல்லில் செதுக்கப்பட்டதாகும்.
அருகிலேயே மரத்தால் செய்யப்பட்ட ‘ஹோகி’ என்ற இருக்கையும், ஒரு சால்வையும் உள்ளது. இது சைதன்ய மகாபிரபு என்பவர் இந்த கோயிலுக்கு அளித்ததாக கூறப்படுகிறது.
கோயிலுக்கு அருகிலேயே இருக்கிற கிருஷ்ணன் வளர்ந்த இடமான பிருந்தாவனத்தை புனித பூமியாக கருதுவதோடு, அங்கு வசிப்பவர்கள் தங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் கிருஷ்ணனின் மறுபிறவி என்று நம்புகிறார்கள்.
இப்பகுதியில் உள்ள மக்கள் பசுமாடுகளை வீடுகளில் குழந்தைகள் போல உலவவிடுகிறார்கள். வெண்ணெயை கடைந்து வேண்டுமென்றே ஒளித்து வைத்துவிடுகிறார்கள். குழந்தைகள் தெரியாமல் கிருஷ்ணன் போலவே வெண்ணெயை திருடி சாப்பிடுகிறார்கள்.
ராதையின் உருவச் சிலைக்குப் பதிலாக! கோயிலுக்கு எதிரில் கிருஷ்ணன் சிலை உள்ளது. அதன் அருகில் ராதையின் சிலை இல்லை. அதற்கு பதிலாக அழகிய கிரீடத்தை ராதையாக பாவித்து ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அருகில் வைத்துள்ளார்கள்.
மதுராவின் ஒரு சிறை அறையில் கிருஷ்ணர் பிறந்ததால், அவர் பிறந்தது போன்று உள்ள இடம் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பாண்டவர்களின் பிரச்சினையையே தீர்த்து வைத்த கிருஷ்ணன், குழந்தைப்பேறு இல்லாத பலருக்கு குழந்தைப்பேற்றை வழங்குவதாக இப்பகுதி மக்களின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது.
குழந்தைப்பேறு வேண்டி பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கிருஷ்ணரை தரிசிக்க வருகிறார்கள் என்பது சிறப்பு.
ஸ்தல வரலாறு
கம்சன் எனும் அரக்ககுணம் படைத்த அரசனை அளிக்கப் பிறந்தவன் கண்ணன். கம்சனின் சகோதரி தேவகிக்கும், அவளுடைய கணவர் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் கம்சனை அளிக்கப் போகிறான் எனும் தகவல் தேவகியின் திருமணத்தன்றே கம்சனுக்கு அசரிரீயாக ஒலிக்கிறது.
உடனே கோபத்தில் தங்கையையே வெட்டிச் சாய்க்க முயன்றவனை ‘எட்டாவது பிள்ளையால்தானே உனக்கு அழிவு. அதை மட்டும் கொன்றுவிட்டு. உன் சகோதரியை கொன்ற பாவம் உனக்கு வேண்டாம்’ என்று வசுதேவர் அறிவுறுத்துகிறார். உடனே தம்பதியரை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறான் கம்சன்.
அடுத்தடுத்து தேவகிக்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் குளத்தில் அடித்துக் கொன்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஏழாவது கரு தேவகியின் வயிற்றில் கலைக்கப் பட்டு வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோஹினியின் வயிற்றில் திருமாலின் அருளால் பலராமனாக அவதரிக்கிறது.
தேவகி கம்சனிடம் தன் ஏழாவது குழந்தை கலைந்துவிட்டதாக கூறுகிறாள். எட்டாவது குழந்தைக்காக கம்சன் காத்திருந்த போதுதான் திருமாலின் கருணைப்படி உருவாக்கப்பட்ட யோகமாயா வேறொரு இடத்திலிருந்த நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் பெண்ணாகப் பிறக்கவும் ஆவன செய்யப்படுகிறது.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி, ரோகினி நட்சத்திரத்தில் சிறையினில் நள்ளிரவில் எட்டாவது மகனாகப் பிறக்கிறான் ஆலிலை நாயகன் கண்ணன். கம்சனிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வேண்டுமே. வசுதேவரும்,தேவகியும் துடிக்கிறார்கள், தவிக்கிறார்கள்.
வரலாறு காணாத மழை என்பதுபோல் புராணம் காணாத மழை கொட்டித்தீர்க்கிறது. ‘யசோதையிடம் கொண்டுபோய் இந்த தெய்வக்குழந்தையை சேர்ப்பி’ என்றுகூறி அசரிரீ வசுதேவருக்கு வழிகாட்ட வசுதேவர் தன குழந்தையை கூடையில் சுமந்து செல்கிறார். ஆதிஷேசன் குடைபிடிக்க, வெள்ளம் புரண்டோடும் யமுனை நதி வசுதேவருக்கு வழி விடுகிறது.
அக்கரையை அடைந்து நந்தகோபன் அரண்மனையில் யசோதையிடம் குழந்தையை சேர்க்கிறார் வசுதேவர்.
அத்துடன் யசோதைக்குப் பிறந்த யோகமாயாவை தூக்கிக் கொண்டு சிறை வந்து சேர்கிறார் வசுதேவர். குழந்தை பிறந்த செய்தி அறிந்து ஆவேசமாக வருகிறான் கம்சன். பின் பெண்குழந்தையா? என்று ஏமாற்றமடைகிறான். என்றாலும் அந்த குழந்தையை உயிரோடுவிட மனமின்றி குழந்தையை குலத்துச் சுவரில் அடிக்க முற்படுகையில்தான்
குழந்தை விண் நோக்கிப் பறக்கிறது.
அவள்தான் திருமால் அனுப்பிய யோகமாயா எனப்படுகிறாள். ‘கம்சா, எட்டாவதாகப் பிறந்தவன் மறைந்து வளர்கிறான். கண்டிப்பாக உன்னைக் கொள்ளவருவான் ‘ என கூறி மறைகிறாள் யோகமாயா.
கோகுலம் எனும் பிருந்தாவனத்தில் கண்ணன் குறும்புடன் சுட்டிக் குழந்தையாக வளர்ந்து, ராதையின் மணாளன் ஆனதும், கம்சனை வதைத்ததும் வரலாறு. அதன் நினைவாக இக்கோவில் எழுப்பபட்டு இன்று இந்திய அளவில் மிகப்பெரும் கோவிலாக வானளாவ உயர்ந்து நிற்கிறது.
கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளை யாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.
கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த விரஜ பூமி சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.
இதை வலமாகக் சுற்றி வருவது, விரஜ பரிக்ரமா எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.
பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், பரிக்ரமாவை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.
கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் விரஜ பூமியில் உள்ளன. பிருந்தா என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.
பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன. கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!
பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.
இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.
மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.
ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் மதுரா நகரம் அமைந்துள்ளது. அங்குதான் இந்த கோவில் அமைந்துள்ளது.
இது ஆன்மீக பூமி,சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,
மகரிஷிகளும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.
ஓம் ஶ்ரீ கிருஷ்ணாய நமஹ.
