குல தெய்வம் அறிய செய்ய வேண்டிய பூஜை

154

குல தெய்வ அருள் இருந்தால் தான் மற்ற தெய்வங்களின் அருள் கை கூடும். சுபிட்சம் ஏற்படும்.
நமது (கும்பகோணம், திருவிசநல்லூர், சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்) ஆலயத்திற்கு வருகின்ற சிலர் எங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை. முன்னோர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாக கும்பிட்டார்கள் என்று தெரியவில்லை. தற்போது இருக்கின்ற பெரியவர்களுக்கும் கூட தெரியவில்லை என்று சொல்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் பூஜை அறையில் ஒரு காமாட்சி விளக்கையோ அல்லது குத்து விளக்கையோ ஏற்றி வைத்து கொண்டு நல்ல வாசனை ஊதுபத்தி ஏற்றி கிழக்கு முகமாக ஒரு செம்பு அல்லது பித்தளை கலசத்தில் கலசத்தை சுற்றி நூல் சுற்ற தெரிந்தால் நூல் சுற்றியோ அல்லது ஒரு பட்டு துணியை சுற்றி (அது சிவப்போ, பச்சையோ, மஞ்சளோ இருக்கலாம்). கலசத்தினுள் தண்ணீர் ஊற்றி (புனித கங்கை நீராக நினைத்து) கொஞ்சம் விபூதி, குங்குமம், மஞ்சள் தூள், சந்தனதூள்,3 கிராம்பு, 3 ஏலக்காய், 1ஜாதிக்காய், 1மாசிக்காய், கொஞ்சம் ஜாதிப்பத்திரி, கொஞ்சம் பச்சை கற்பூரம், சிறிது வெட்டிவேரில் ஜவ்வாது, புனுகு, அரகஜா, கோரோசனை, போன்ற பொருட்களை தடவி அதையு உள்ளே போட்டு சந்தன அத்தர் 3 சொட்டு விட்டு கலசத்தினுள் மாவிலை சொருகி அதன் மேல் மஞ்சள் தூள் தடவிய தேங்காயை வைத்து தேங்காயின் மீது சந்தன குங்கும பொட்டு வைத்து அதே போல் கலசத்தை சுற்றி மூன்று இடத்தில் சந்தன குங்கும பொட்டு வைத்து பின் ஒரு தாம்பாளத்தில் அல்லது நுனி வாழை இலையில் பச்சரி பரப்பி அதன் மீது அந்த கலசத்தை தூக்கி வைத்து வடக்கு பார்த்து அமர்ந்து குல தெய்வம் தெரிய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு மஞ்சள் அல்லது பசுஞ்சாணியில் பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையாரை வேண்டிக் கொண்டு பின் அந்த கலசத்தை குல தெய்வமாக பாவித்து “ஓம் குல தேவ தேவதாய நமஹ” என்று ஒரு 108 முறை சொல்லி நல்ல வாசனை கொண்ட பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து சாம்பிராணி தூப, கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இது போல் 48 நாட்கள் தொடர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். அதற்குள் ஏதாவது ஒரு வகையில் கனவு மூலமாகவோ, அல்லது எவர் மூலமாவது குல தெய்வம் தெரிய வரும் அல்லது தெரியும் வரை பூஜையை தொடர்ந்து செய்து வரவும்.
நைவேத்தியம்: முதல் நாள் ஆரம்பிக்கும் போது அவல், பொரி, கடலை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பால் பாயசம், வேறு சில பழங்கள் போன்றவற்றை படைக்கவும். அடுத்தடுத்த நாட்களுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், கல்கண்டு, பேரிச்சை, முந்திரி, பாதாம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கவும். பூஜையை முடிக்கும் போது முதல் நாள் செய்ததை பொல் செய்யவும்.
இந்த பூஜையை பௌர்ணமி அன்று ராஹு, எமகண்ட நேரம் தவிர்த்து குளிகை நேரத்தில் ஆரம்பிக்க நல்லது.