திருமணத் தடை நீக்கும் கோயில்கள்!
ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் – புதன் ஸ்தலம்
மயிலாப்பூர் கடைவீதி காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் – சுக்கிர ஸ்தலம்
மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக அமைந்துள்ளது. மகாபலி யாகத்தின் போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்க வேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.
வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் தல வரலாறு. எனவே, ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.
அருள்மிகு கோலவிழி அம்மன் – கேது ஸ்தலம்
காரணீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள்.
இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.
ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் – குரு ஸ்தலம்
மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்து ஈசன் நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.
