கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு யமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவித்து கொள் என்றார். கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்.
தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார். குரு விளக்குகிறார் ” கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்”.
ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன்.
குரு விளக்குகிறார் ” கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது. ”
கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார்.
கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறார். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.
யமன் நகர்ந்து கொண்டே சொல்கிறார். மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்.
கர்ணன் ” யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்.”
யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்.
” யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.
பித்ரு வழிபாடு தகவல்கள் ..!
1. ஒரு வருடம் நாம் பித்ருபூஜை செய்யாவிட்டாலும் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
2. தர்ப்பணங்களை எப்போதும் காலை 7 மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது.
3. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து அதிகாலைக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.
4. எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாக கருதப்படுகிறது.
5. பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.
6. நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம்.
7. புண்ணிய நதிகளின் கரைகளில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு எப்போதுமே சக்தி அதிகமாகும்.
8. நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும்.
9. தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்தால், அவர்களது ஆசிகளும் கிடைக்கும்.
10. அமாவாசை, சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு.
11. அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டியது மிக, மிக முக்கியமாகும்.
12. மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும்.
13. தர்ப்பணத்தை சரியான நேரத்தில் உரிய முறைப்படி செய்தால் நம் வாழ்வில் கஷ்டங்கள் என்பதே வராது.
14. பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது.
15. கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.
16. தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாக பிறப்பான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
17. ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.
18. புண்ணிய ஆத்மாக்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம் அவர்கள் மேலும் இறையருள் பெற உதவும்.
19. தர்ப்பணம், சிரார்த்தும் செய்யாவிட்டாலும், நம் பித்ருக்கள், நமக்கு உதவுவார்கள். ஆனால் தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் முழுமையான ஆசி கிடைக்கும்.
20. பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது.
இப்படி நம்மால் எந்த வகையில் செய்ய முடியுமோ ,அந்த வகையில் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தாம் தவறாமல் செய்ய வேண்டும். இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் மட்டும் போதாது, நம் முன்னோர்களின் அருளும் ஆசியும் வேண்டும். அந்த ஆசியை நாம் அனைவரும் பெறுவோம்!
