சுக்கிரன் வழிபட்ட மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்!
நமது சென்னை யில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் பற்றி இப்பதிவில் பார்ப்போம்…
ஆலயத்தின் சிறப்பு:
முன்னொரு காலத்தில் நெல்வயல்களுக்கு மத்தியில் பசுஞ்சோலைவனத்தில் அமைந்திருந்த கோயில் இன்று கான்கிரீட் காடுகளால் சூழப்பட்டு இருக்கிறது. காலமாற்றங்கள் எது நடந்தாலும் நெருப்பின் மீது நின்ற நிலையில் தவமிருக்கும் காமாட்சி அன்னை, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தவமாய் தவமிருந்து வரம் வழங்கி வருகிறார்.
வரலாற்று கதை:
பனி படர்ந்து கிடக்கும் கயிலாலய மலையில் உலக நன்மையை நினைத்திருந்த ஈசனின் கண்களை உமையவள் தன் செந்தாமரைக் கரங்களால் பொத்தி மகிழ்ந்தாள். ஒரு விநாடிதான். ஆனால், இறைவனின் இரண்டு கண்களும் சூரியன், சந்திரன் ஆயிற்றே! மூவுலகின் உயிர்களெல்லாம் இருள் சூழ்ந்த உலகில் தடுமாறிப் போயின. ஈசனுக்கு ஒரு விநாடி நமக்கு பல ஆண்டுகளாயிற்றே.
நெருப்பின் மீது நின்று தவம் புரிந்த அம்மன்:
உலகத்து உயிர்களெல்லாம் படும் துயர் கண்டு பொறுக்காத ஈசன் கோபம் கொண்டார். அவரது வெம்மையைத் தாளாத தேவி பூவுலகில், மாஞ்சோலைகள் நிறைந்திருந்த இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்து நெருப்பின் மீது நின்ற நிலையில் தவமிருந்து ஈசனை அடைந்தார். என்பதே கோயிலின் தல வரலாறு. மாஞ்சோலைகள் நிறைந்த பகுதியாக இருந்ததால், இந்த இடம் மாங்காடு என்றும், அம்மனை மாங்காடு காமாட்சி அம்மன் என்றும் அழைத்தனர்.
அம்பாள் காமாட்சியாக தியான நிலையில் மோனத்தவம் புரிவதை கோயிலில் காட்சியாகக் காணலாம்.தேவியின் தவத்தால் உண்டான வெப்பம் அந்தப் பகுதி முழுவதையுமே வறட்சியான பகுதியாக்கியது. இந்த நிலையில் ஆதிசங்கரர் தேவியின் உக்கிரத்தைக் குறைக்க, ஶ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்யவே மீண்டும் செழுமை பெற்று மாஞ்சோலையும் பூஞ்சோலையும் உள்ள பகுதியானது.
காஞ்சி காமாட்சி அம்மன் காஞ்சிபுரம் செல்வதற்கு முன் இங்கு சிலகாலம் தங்கி தவம் இயற்றியதாக ஐதீகம். இங்குள்ள அம்பாள் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகின்றார். சப்தக்கன்னிகள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகன்என பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
சுக்கிரன் வழிபட்ட ஸ்தலம்:
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் இந்தக் கோயிலில் விசேஷ நாட்கள் ஆகும். பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம்.
பலன்கள்:
இந்த மாங்காடு காமாட்சி அம்மனுக்கு ஆறுவாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அம்பாளுக்கு புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.
திருவிழாக்கள்:
அம்பாளின் ஆலயத்தில் எல்லா நாளும் நல்ல நாள் என்றாலும் ஆடி மாதம் பிறந்து விட்டால் சென்னை மக்களுக்கு இங்கு திருவிழாக் கோலம்தான். ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி, வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதி மாதம் பௌர்ணமி நாளில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
ஆலய அமைவிடம்:
சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து நாம் போரூரைத் தாண்டி பயணித்து குமணன்சாவடி என்ற இடத்தில் இருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் திரும்பினால் வருகிறது மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் .