சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் எட்டாம் பதிகத்தில், ஆழ்வார், ஸ்ரீராமரின் தாயாகிய கௌஸல்யாவாக, சிறுவயது இராமனிடம் தான் பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவு கூறுகிறார்.
“மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே”, என்று, முதல் பாடல் முதல் வரியில் ஸ்ரீ ராமபிரான் அவதரித்ததை சொன்ன ஆழ்வார் இரண்டாம் வரியினில் “தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்” என்று இராவணணின் பத்து தலைகள் சிதறியதை, ஸ்ரீ ராமர் பிறப்பினால் ஏற்பட்ட நன்மை என்று விவரித்தார்.
இரண்டாம் பாடலில், ராட்சசியாகிய தாடகையின் மார்பினை துளைக்கும்படியாக அம்புகள் எய்தவன் என்று சொன்ன ஆழ்வார், “கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து என் கருமணியே” என்று ராமனின் அழகினை தரிசித்தவர்கள் தாங்களாகவே தங்கள் இதயங்களை ராமனின் திருவடிகளில் சமர்பித்து விடுவார்கள் என்று சொல்கிறார்.
மூன்றாம் பாசுரத்தில், கௌசல்யாவின் சிறந்த மகனே என்றும், ஜனக மஹாராஜாவின் மாப்பிள்ளை என்றும் பாடியவர் “எங்கள் குலத்தின் இன்னமுதே” என்று சொல்லும் போது ஸ்ரீ ராமரும், குலசேகர ஆழ்வாரும் ராஜ வம்சம் என்பதையும் ஸ்ரீவைஷ்ணவ குலம் என்பதையும் சேர்த்து குறிப்பிடுகின்றார்.
நான்காம் பாசுரத்தில், ” தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே, தசரதன் தன் மாமதலாய்” என்றும் சொல்லும் போது ஆழ்வார் தன்னுடைய நாபிக்கமலத்தில், படைக்கும் கடவுளாகிய பிரமனை படைத்தவனே என்று முதல் வரியில் சொல்லி, இருந்தாலும் நீ தசரதனுக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்து அவருக்கு தந்தை என்ற பெருமையைக் கொடுத்தாயே என்று இரண்டாவது வரியில் சொல்லி வியக்கிறார். இதே பாசுரத்தில் “ஏ மருவு சிலை வலவா ” என்று சொல்லும் போது பெரியாழ்வார் சொன்ன “சார்ங்கம் என்னும் வில் ஆண்டான்” என்ற பொருளிலேயே வில்லை அடக்கி ஆளுகின்றவன் என்றார்.
அடுத்த பாசுரத்தில் “ஆரா அன்பு இளையவனோடு அரு கானம் அடைந்தவனே ” என்று சொல்லும் போது ஆரா அன்பு என்பது கைங்கர்யம் செய்ய கூட வருவேன் என்று பிடிவாதமாக வந்த இலக்குவனைக் குறிக்கும். இங்கு நாம் நம்மாழ்வார் கைங்கர்யம் வேண்டும் என்ற “ஓழிவில் காலமெல்லாம்” (திருவாய்மொழி 3.3.1) என்ற பாசுரத்தை நினைவில் கொள்ளலாம். இதில் நம்மாழ்வார், பரதன் நாட்டிற்கு சென்று ராமனுக்காக செய்த கைங்கர்யங்களையும், இலக்குவன் ராமனுடன் காட்டிற்கு சென்று செய்த கைங்கர்யங்களையும் சேர்த்து, தான் ஒருவராக இனி வரும் காலங்களில் ஒரு நொடிகூட விடாமல் கைங்கர்யம் செய்ய வேண்டுகிறார்.
ஆறாம் பாசுரத்தில் “சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே” என்று ஆழ்வார் சொல்வதும் வால்மீகி இராமாயணத்தில் நாட்டின் குடிமக்கள் எல்லோரும் சென்றதாக சொல்வதும், சிறிது வேறுபட்டு இருப்பதை, நம் ஆச்சார்யர்கள், “எல்லோரும் செய்யும் தொண்டுகளை இலக்குவன் ஒருவனே செய்ததால் அதுவே சுற்றம் எல்லாம் சென்றார்கள் என்பதுபோல் ஆயிற்று என்பார்கள். அதே பாசுரத்தில் “அற்றவர்கட்கு அருமருந்தே! ” என்று சொன்னது, காட்டில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத இருந்த முனிவர்களை, இராமன் அரக்கர்களிடம் இருந்தும் விலங்குகளிடம் இருந்தும் காத்து அருளியதைக் குறிக்கும்.
ஏழாம் பாசுரத்தில், இராமனுக்கு தாலாட்டு பாடும், குலசேகரப் பெருமாள், ஆல் இலையில் குழந்தையாய், உலகங்களை எல்லாம் வயிற்றில் அடக்கியவனே, வாலியைக் கொன்று அவன் தம்பி சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை அரசைக் கொடுத்தவனே என்று பாடுகிறார். “ஆலிநகர்க் கதிபதியே” என்று சொல்லும்போது, ஒரு வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அரசை கொடுத்து சுக்ரீவனை, தனக்கு துணையாகக் கொண்டவனே என்று கூறுகிறார்.
எட்டாம் பாடலும் ஒன்பதாம் பாடலும், யுத்த காண்டத்தை தொடுகின்றன. ஒன்பதாம் பாசுரத்தில், “இளையவர்க்கு அருள் உடையாய்” என்ற சொற்தொடர் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இராமன் இளையவர்களுக்கு கருணையுடன் இருந்ததை, இளையவனான சுக்ரீவனுக்கு, வாலியை கொன்று, அரசாட்சி கொடுத்து அருள் புரிந்ததையும், மூத்தவனான இராவணனைக் கொன்று, இளையவனான வீபீஷணருக்கு ஆட்சி கொடுத்தையும் ஆழ்வார் குறிப்பிடுகின்றார்.
பத்தாம் பாசுரத்தில் உள்ள, “அரங்க நகர் துயின்றவனே” என்பது அரங்கநாதனை குறிக்கும். “யாவரும் வந்து அடி வணங்க“, என்பது மீண்டும் அயோத்தி வந்து முடிசூட்டிக் கொண்ட பட்டாபிஷேக இராமரைக் குறிப்பிட்டது போல் உள்ளது. ஸ்ரீரங்கத்தில் உள்ள காவேரி நினைவிற்கு வர, “காவேரி நல் நதி பாயும் கண்ணபுரத்து என் கண்மணியே” என்று காவேரி நதியை, ஆழ்வார் திருக்கண்ணபுரத்திற்கே கொண்டு வந்து விட்டார்.
இந்த பதிகத்தின் இறுதி பாடல், இந்த பதிகத்தைப் படிப்பவர்களுக்கு வரும் பயன்களை கூறுகின்றது. இராமனின் திருத்தாயாரான கௌஸல்யா, இராமருடைய சிறு வயது அனுபவங்களை அனுபவித்து மகிழ்ந்ததை போல், குலசேகர ஆழ்வார் பக்தராய் இருந்து அனுபவித்தாற்போல், இந்த பதிகத்தைப் படிப்பவர்களும், கேட்பவர்களும், சிறந்த பக்திமான்களாக இருப்பார்கள் என்று கூறி ஆழ்வார் நிறைவு செய்கிறார்.
நன்றி- r.venkatesan.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
