அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்டங்களுக்கு ஒரே தாயாரான ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளை “ஆப்ரஹ்மகீட ஜனனி” எனகிறது ஸஹஸ்ரநாமம். ப்ரஹ்மாவிலிருந்து புழு வரை அனைத்திற்கும் தாயாராய் விளங்குபவள் பராசக்தி.
பரப்ரஹ்மத்தினை ஆண் வடிவில் வழிபடுவதைக் காட்டிலும் பெண் வடிவில் வழிபடும் போது ஸௌலப்யம் ஜாஸ்தி. “அம்மா!!” என்ற உரிமையும், பற்றுதலும் அம்பாளிடமே அதிகம் ஏற்படுகிறது. கல்யாண குணங்களுக்கெல்லாம் உறைவிடமாகவும், கருணையே வடிவானவளாகவும் விளங்குபவள் பரதேவதை.
ஸஹஸ்ரநாமம் “அவ்யாஜ கருணாமூர்த்தி” என்கிறது அம்பாளை!! வ்யாஜம் என்றால் காரணம் என்று பொருள்!! எவ்விதமான வ்யாஜமும் இல்லாது காரணமில்லாத கருணை பொழிவதாலே அம்பிகை அவ்யாஜ கருணாமூர்த்தி!!
“லலிதம்” என்ற சொல்லுக்கு விளையாட்டு, ம்ருது, ச்ருங்காரம், நளினம், கருணை என நிறைய பொருள் உண்டு!! இவை அனைத்தும் பூரணமாக விளங்குவதால் அம்பாள் “லலிதாம்பிகை” ஆகிறாள்!! அதுவும் ஸஹஸ்ரநாமம் “லலிதா” என்று கூறாமல் “லலிதாம்பிகா” என்றே கூறுகிறது. லலிதையாகிற தாயார் என்று அம்பாளைத் தாயாராகவே தான் ஸஹஸ்ரநாமம் காட்டுகிறது!!
ஶ்ரீமாதா என்று அம்மாவிடம் தொடங்கி, லலிதாம்பிகா என்று அம்மாவிடமே முடிந்து விடுகிறது. ஸகல உலகங்களையும் கண்ணசைவினாலேயே ச்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், த்ரோதானம், அனுக்ரஹம் ஆகியவற்றைப் புரியும் மஹாத்ரிபுரஸுந்தரியை ஸஹஸ்ரநாமம் “அம்மா” வாகவே கூறுகிறது.
அம்பிகை மட்டுமல்ல, அவளின் உபாஸனையான ஶ்ரீவித்யையும் கூட சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம் எனும் ஐந்து தர்சனங்களுக்கும் தாயாராக விளங்குவது ஆஸ்சர்யமே. ஶ்ரீசக்ர நவாவரண பூஜையில் ஒவ்வொரு ஆவரணத்திலும் ஒவ்வொரு தர்சனம் ஐக்யத்தை அடைவதைக் காணலாம். முக்யமாக ஏழாவது ஆவரணத்தில் சைவமும், எட்டாவது ஆவரணத்தில் சாக்தமும் ஐக்யத்தை அடைகிறது!!
ஒன்பதாவது ஆவரணம் சாம்பவ தர்சனமாக சிவசக்தி ஸம்மேளன ஸ்வரூபத்தைக் கூறுகிறது. சிவசக்தி ஸம்மேளன வடிவமே “லலிதா” எனும் நிர்குண பரவஸ்து.
“ஶ்ரீமாதா” எனும் பதத்திற்கு “சிறப்புடைய அன்னை” என்று பொருள்!! சிறப்புடைய அன்னை என்றால் இவ்வுலகின்கண் விளங்கும் அனைத்து பந்தங்களிலும் அன்னையொருத்தியே சிறந்தவள்!! அவளன்றி சிறந்தவர் இல்லை!! அவ்வன்னையோ இந்த ஜனனத்திற்கு மட்டுமே உரித்தானவள்!!
சென்ற பிறவியில் யார் அன்னை? அறியோம்!!? இனி வரும் பிறவிகளில் யார் அன்னை!? தெரியோம்!!? ஆயின் என்பத்துநாலு லக்ஷம் ஜீவராசிகளுக்கும் அத்தனை ஜனனத்திலும் ஒரேயன்னை உண்டு எனில் அவள் ஸாக்ஷாத் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ராஜராஜேச்வரி பராபட்டாரிகை தான்!! ஆனதினாலே இவள் ஶ்ரீமாதா
ஶ்ரீகாமேச்வரன் தொடங்கி, காரணேச்வரர்களான ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈச்வரன், ஸதாசிவன் முதற்கொண்ட ஈச்வரர்களுக்கும், வாணி, ரமா, உமா, மஹேச்வரி, மனோன்மனி எனப்படும் சக்திக்கூட்டங்களுக்கும் முதற்கொண்டு ஸாதாரண மனுஷ்யனிலிருந்து, புழு வரை அத்தனை பேர்களுக்கு அன்னையாக, ஜனனியாக விளங்குபவள் ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேச்வரி.
இவளது தாய்மையைத் தான் ஸஹஸ்ரநாமம் மறுபடி மறுபடியும் கூறகிறது
1) ஶ்ரீமாதா — சிறப்பு மிகுந்த அன்னை
2) ஜனனி — கருப்பையில் உயிர் கொடுத்தவள்
3) விதாத்ரி — கர்ப்பத்தில் தாங்குபவள்
4) ப்ரஸவித்ரி — ஜீவகோடிகளை கர்ப்பத்திலிருந்து ப்ரஸவிப்பவள்
5) மாதா — குழந்தையை போஷிப்பவள்
6) அம்பா, அம்பிகா — குழந்தைக்கு யாதொரு தீங்கும் நேராத வண்ணம் அணைத்துக் காப்பாற்றும் தாய்
7) அயி — ஆயா — குழந்தைக்கு மலமூத்ராதிகளையும் அறுவருப்பு பார்க்காமால் சுத்தம் செய்யம் தாய்!!
8) லலிதாம்பிகா — ஸமஸ்த ப்ரபஞ்சங்களுக்கும் ஒரே தாயாரான ஶ்ரீலலிதாம்பாள்.
ஶ்ரீவித்யோபாஸனையில் பல மந்த்ர ஸூக்ஷ்மங்களைக் கூறும் அதே ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தான், அம்பாளின் எளிமையையும் ஆஸ்சர்யமாக கூறுகிறது.
இவளை விட தாயார் இந்த உலகத்தில் யார் உண்டு!! ஶ்ரீவித்யோபாஸனையை விட தெய்வத்தை, தாயாரை, தாய்மையை கொண்டாடும் உபாஸனை வையத்தில் ஏது!! காமாக்ஷியை விட கருணா ஸாகரி யார்!!?
சரணமடைவதற்கு ஒரு தெய்வம் உண்டெனில் அவள் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியே!!
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
சித்திரத்தில் : ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் அதிஸூக்ஷ்ம வடிவினளும், ச்ருஷ்டி யோஜனை புரிபவளும், ஶ்ரீமாதா எனும் நாமத்திற்கு ப்ரத்யக்ஷ பொருளானவளுமான ஶ்ரீகாமகலா கமலாம்பிகை!! பராசக்திபுரமான திருவாரூர் நாயகி!!
