ஞானம் பிறக்க வழிபட வேண்டிய கோயில்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில், திண்டிவனத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் பெருமுக்கல் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள மலைக்கோயிலில் முக்யாசலேஸ்வரர் ஆலயமும், தாழக்கோயிலில் காமாட்சியம்மன் ஆலயமும் அமைந்துள்ளன.
ஆலயத்தின் வரலாறு:
இக்கோயில் சோழர், பாண்டியர், காடவராயர், சம்புவரையர், விஜயநகர மன்னர்கள் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. இவற்றில் பழைமையானதாக விளங்குவது விக்கிரமச் சோழன் காலத்துக் கல்வெட்டாகும். இவனது காலத்தில்தான் மலை மீதுள்ள திருவான்மிகை ஈசுவரம் உடையார் கோயில் கற்கோயிலாக எழுப்பப்பட்டது. இதற்குச் சான்றாக கருவறையின் தென்சுவரிலுள்ள விக்கிரமச் சோழனின் மூன்றாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு விளங்குகின்றது. தற்போது காணப்படும் கோயிலை செங்கல் ஆலயமாக எழுப்பியது முதலாம் குலோத்துங்கச் சோழனின் காலமாகும்.
தற்போது காணப்படும் கருங்கற்கோயிலைக் கட்டுவதற்குப் பொருள் உதவி புரிந்த காக்குநாயகனின் உருவமும், இக்கோயிலைக் கட்டிய சிறு தொண்டனது உருவமும், கோயில் சைவாச்சாரியான் திருச்சிற்றம்பலமுடையான் அன்பர்க்கரசுப்பட்டனது உருவமும் சிற்பங்களாகக் காணப்படுவது ஓர் அரிய சிறப்பாகும்.
அக்காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ஓய்மாநாடான விஜயராஜேந்திர வளநாட்டுப் பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூர் என இன்றைய பெருமுக்கல் வழங்கப்பட்டது. இம்மலையின் கல்வெட்டுகள் மூலமாக நிலவிற்பனை, நில அளவை, தெய்வ உருவங்கள் வீதி உலா சென்ற விவரம், அதில் நான்முகன், பெருமாள் வீதிஉலாச் சென்றது போன்ற விவரங்கள் தெரியவருகிறது.
அர்த்தமண்டபத்தின் கல்வெட்டு:
இக்காலத்தில் தன் கட்சித் தலைவனுக்காக உயிர்த்தியாகம் செய்யும் தொண்டர்களைப் போல, அக்காலத்தில் இராஜராஜ சம்புவராயனுக்கு ஏற்பட்ட நோய் தீர வேண்டுமென தன் உயிரை மாய்த்துக்கொண்ட ஒரு பெண் பற்றிய குறிப்பும், அந்தப் பெண்ணுக்குத் திருமலை அடிப்பகுதியில் உள்ள சிவகாம சுந்தரி வளாகத்தைச் சேர்ந்த நிலத்தைத் தேவதானமாகத் தந்து அதில் வரும் வருவாயை அம்மனுக்கு அமுதுபடைக்க ஆணையிட்ட செய்தி கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இக்கல்வெட்டு கி.பி. 1191ஆம் ஆண்டைச் சார்ந்தது. இது மூன்றாம் குலோத்துங்கச்சோழனின் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு முக்யாசலேசுவரர் கோயில் அர்த்தமண்டபக் கிழக்குச் சுவரில் காணப்படுகிறது.
ஆலயத்தின் அமைப்பு:
உயர்ந்த, பசுமையான மலையாக பெருமுக்கல் மலை விளங்குகிறது. இம்மலையில் ஏறுவதற்கு, முன்புறமும் பின்புறமும் படிக்கட்டு வசதிகள் உள்ளன. ஆலயம் கிழக்கு நோக்கியவண்ணம் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம், திருச்சுற்று, வெளி மண்டபம், திருக்குளம், மலைச்சுவர் முதலியவற்றைக் கொண்டு விளங்குகின்றது.
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் ஏதுமில்லை. ஆலயக் கருவறையினுள் நுழையும் முன்பாக, இடதுபுறம் விநாயகப்பெருமான் காட்சிதருகின்றார். அவரை ஒட்டியுள்ள சுவாமியின் கருவறை சதுரவடிவ அமைப்பில் உள்ளது. கருவறையில் கிழக்கு முகமாக பழங்காலத்தில் திருவான்மீகை ஈசுவரம் உடையார் என்றும், திருமலை மேல்உடையார் என்றும் திருவான்மீசுவரமுடையான் என்றும் கல்வெட்டுகளில் அழைக்கப்பட்ட இறைவன் இன்று முக்யாசலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
சமஸ்கிருதத்தில் முக்கல் என்ற பெயரை முக்யா என்றும், மலை என்பதை அசலம் என்றும் சேர்த்து முக்யாசலேஸ்வரர் என்ற பெயர்மாற்றம் பெற்றுள்ளது. இறைவன் இன்றும் கம்பீரமாக எழிலோடு காட்சி தருகின்றார். லிங்கத்தின் ஆவுடையார் வட்டவடிவமாக உள்ளது. ருத்திர பாகத்தில் பிரம்மசூத்திரம் காணப்படுகிறது.
எழில்மிகு தட்சிணாமூர்த்தி:
கருவறையின் சுற்றுச்சுவரில் காணப்படும் ஒரே தெய்வமாக தென்திசையில் எழில்மிகு தட்சிணா மூர்த்தி திருவுருவம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த உருவம் அன்றைய சிற்பக்கலைக்கு மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இவரின் அருகில் சனகாதி முனிவர் இருவரின் உருவங்கள் காணப்படுகின்றன. ஒன்று முதுமைக் கோலத்திலும், மற்றொன்று இளமைக் கோலத்திலும் காணப்படுகின்றன.
தட்சிணாமூர்த்தியின் தேவகோட்டத்தின் மேல் அசோக வனத்தில் சீதை துயரத்தோடு அமர்ந்துள்ள காட்சி குறிப்பிடத்தக்கதாகும். சீதையைச் சுற்றி பெருத்த வயிறுடன் அரக்கி இருப்பதும், மேற்குத் திசையில் குரங்கு முகம் கொண்ட வானரப்பெண் உருவம் ஒன்று குட்டிக் குரங்கைத் தழுவி நிற்பதும், மற்றொரு பெண் பூதகணம் தழுவக் காத்து நிற்பதும் குறிப்பிடத் தக்க அம்சங்களாகும்.
ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி:
சிவன்கோயிலின் பின்புறம் ஆஞ்சநேயருக்கென பழைமையான தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஆஞ்சநேயர் ஒரு சிறிய கல்லில் புடைப்புச் சிற்பமாக காட்சிதருகின்றார். அதன் கீழே திருக்குளம் அமைந்துள்ளது. திருக்குளத்தின் அருகே இயற்கையாகத் தோன்றிய பெரிய பாம்புப்புற்று காணப்படுகிறது.
இயற்கையாக உருவான குகை:
திருக்குளத்தை அடுத்து ஒரு பெரிய பள்ளம் காணப்படுகிறது. அந்தப் பள்ளம் உள்ள பகுதியில் குன்றுகளால் உருவான இயற்கை குகை காணப் படுகிறது. அந்தக் குகைக்குள் கீறல் உருவங்கள் அமைந்துள்ளன. இதில் துறவியர் அல்லது சித்தர்கள் வாழ்ந்திருக்கக்கூடும். என்றாலும், இந்தக் குகையில் சீதை தங்கியிருந்து, லவன் குசனை ஈன்றதாகவும் அதனால், இது சீதைக் குகை என்றும் இப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர்.
ஆலய விழாக்கள்:
இவ்வாலயத்தில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நந்திதேவருக்கும் சிவபெருமானுக்கும் பெரிய அளவில் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. மாத சிவராத்திரியும் சிறப்பாக நடத்தப் படுகிறது. மாசி மகத்தன்று இவ்வூரைச் சுற்றியுள்ள கீழ்சிவிரி, பழமுக்கல், பெருமுக்கல், நல்லாளம் முதலிய ஊர்களைச் சேர்ந்த உற்சவமூர்த்திகள் மலையேறி முக்யாசலேசுவரரைச் சந்தித்து, பின் மலையிறங்குவது வழக்கமாக நடைபெறுகின்றது. மகாசிவராத்திரியன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கார்த்திகை தீபத்தன்று இம்மலை மீதுள்ள கருங்கல் தீப மேடையில் பெரிய தீபம் ஏற்றப்படுகின்றது.
தாழக் கோயில்:
மலைக்கோயிலின் பின்புறம் மலையடிவாரத்தில் கலைநயம் மிக்க விஜயநகர காலத்து சிவபெருமான் ஆலயம் தாழக்கோயிலாக அமைந்துள்ளது. இது மலையிலிருந்து பார்ப்பதற்கு எழிலான கோலத்தில் காட்சி தருகின்றது. இக்கோயிலின் இன்றைய பெயர் காமாட்சி அம்மன் கோயிலாகும். இந்த அம்மன் மன்னர் காலத்தில் சிவகாமசுந்தரி என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
சிற்பங்களும் கட்டிடக்கலைகளிலும் சிறந்து விளங்கும் இக்கோயில் இன்று சிதலமடைந்து உள்ளே நுழைய முடியாத அளவில் உள்ளது. உலகிற்கே ஒளியூட்டும் இறைவியின் ஆலயம் தீபமேற்றக்கூட ஆளின்றி பழுதடைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு அடியார்கள் மனது வைத்தால் இக்கோயில் புதுப்பொலிவு பெறும். தொன்மையான வரலாற்று பொக்கிஷமும் பாதுகாக்கப்படும்.
ஞானம் தரும் மலை:
இம்மலையில் பல்வேறு ஞானிகளும் முனிவர்களும் சித்தர்களும் தவம் இருந்து பேறுபெற்றதை வரலாறு எடுத்துரைக்கிறது. மயிலம் பொம்மபுர ஆதீனத்து பாலசித்தர், பாலய சுவாமிகள் போன்ற மகான்கள் இம்மலையில் தவமிருந்து அருள்பெற்றுள்ளனர். இன்றும் இம்மலையில் முனிவர்களும் சித்தர்களும் அருவமாய்த் தவமிருந்து வருவதாக நம்பப்படுகிறது. எனவே, ஞானமும் அருளும் வேண்டுவோர் வழிபட வேண்டிய தலமாகப் பெருமுக்கல் திகழ்கின்றது.
