Saturday, October 21, 2023
HomeAanmeega Thagavalgalகுதிரை முகத்துடன் காட்சியளிக்கும் நந்தி!

குதிரை முகத்துடன் காட்சியளிக்கும் நந்தி!

குதிரை முகத்துடன் காட்சியளிக்கும் நந்தி – கைலாசநாதர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் திருநெல்வேலி- தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது முறப்பநாடு. இந்த முறப்பநாட்டில் அமைந்துள்ளது கைலாசநாதர் ஆலயம். இவ்வாலயத்தின் புராணக் கதை பற்றி இப்பதிவில் பார்ப்போம் காணலாம்.

ஆலயத்தின் சிறப்பு:

நவ கைலாய ஸ்தலங்களில் ஐந்தாம் தலமான முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில் இடம் பெற்றுள்ளது. இக்கோவில் மூலவர் கைலாசநாதர் என்றும், அம்பிகை சிவகாமி அம்மை என்ற திருநாமம் கொண்டவர். இக்கோவில் தல விருட்சமாக பலா மரம் உள்ளது. தீர்த்தம் தாமிரபரணி தீர்க்கும் ஆகும்.

புராணக் கதை:

உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஐந்தாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் முறப்பநாடு ஆகும். உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வணங்கிய இந்தக் கைலாசநாதரை பிற்காலத்தில் மிருகண்டு மகரிஷி, மார்க்கண்டேயன் மற்றும் காஞ்சனமாலை ஆகியோர் வழிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குதிரை முகம் நீங்கிய வரலாறு:

முற்காலத்தில் வாழ்ந்த சேரநாட்டு மன்னன் ஒருவனுக்கு முன்வினை பயனால் குதிரையின் முகம் கொண்ட பெண் குழந்தை பிறந்தது. தனது மகளின் அந்த நிலைமையைக் கண்டு வருந்திய மன்னன் பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அவனுடைய தூய பக்திக்கு இறங்கி அருள் செய்யத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அவனது கனவில் தோன்றி இந்த முறப்பநாடு ஸ்தலத்திற்கு சென்று இங்குள்ள தாமிரபரணியில் நீராடித் தன்னை வணங்கிடுமாறு கூறினார்.

அதன் படியே மன்னனும் தன் மகளை அழைத்துக்கொண்டு இங்கு வந்து தாமிரபரணியில் நீராடி எழ, மன்னரின் மகளுக்கு இருந்த குதிரை முகம் மறைந்து, சுய முகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் மகிழ்ந்த மன்னன் இங்குள்ள கைலாசநாதரை வணங்கிப் பல காணிக்கைகளை செலுத்தி மகிழ்ந்தாராம். மேலும் மன்னர் மகளின் குதிரை முகத்தை இந்தக் கோவிலில் உள்ள நந்தி ஏற்றுக் கொண்டதாகவும், அதனால் தான் இங்குள்ள நந்தி இன்றளவும் குதிரை முகத்துடன் காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.

முறப்பநாடு பெயர் காரணம்:

முற்காலத்தில் சூரபத்மனின் தலைமை ஏற்ற அசுரப்படையினர் முனிவர்களையும், தவயோகிகளையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர். இந்த துன்பத்தைப் போக்க வேண்டி முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் நின்று இறைவனிடம் அசுரர்களின் கொடுமைபற்றி முறையிட்டனராம். அவ்வாறு அவர்கள் ஒன்றாக நின்று முறையிட்ட இடம் என்பதால் முறையிட்ட நாடு என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் அது முறப்பநாடு என மறுவியதாகவும், முறம்பு என்ற தடித்த கல்வகைகள் நிறைந்த மேடான பகுதியாக இருந்ததால் முறம்ப நாடு என அழைக்கப்பட்டு பின்னர் முறப்பநாடாகத் திரிந்ததாகவும், முற்காலத்தில் இங்கு வாழ்ந்த பெண்ணொருத்தி தன் வீட்டு முற்றத்திற்கு வந்த புலியை, முறத்தால் அடித்து விரட்டியதால் முறப்பநாடு என்ற பெயர் வந்ததாகவும், மூன்று வகை காரணங்கள் கூறப்படுகின்றன.

சுவாமி கைலாசநாதர் சிவகாமியம்மை:

கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி கைலாசநாதர், லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். இவரை உரோமசர், மார்க்கண்டேயர், காஞ்சனமாலை ஆகியோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்திய படியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும், நின்ற கோலத்தில், புன்சிரிப்புடன் காட்சித்தருகிறாள்.

குதிரை முக நந்தி:

இங்குச் சுவாமிக்கு எதிராக வீற்றிருக்கும் நந்தியெம்பெருமான், வழக்கத்திற்கு மாறாகக் குதிரை முகத்துடன் காட்சித் தருகிறார்.

ஆலயத்தின் அமைப்பு:

தாமிரபரணி ஆற்றின் கரையில் பச்சைப்பசேல் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது இந்த முறப்பநாடு கைலாசநாதர் கோவில். உள்ளே நுழைந்தவுடன் பத்து தூண்களை கொண்ட பந்தல் மண்டபம் நம்ம வரவேற்கிறது. அங்குக் கொடிமரம், பலிப்படம், நந்தி ஆகியவை காட்சியளிக்கின்றன. அதனை தாண்டி உள்ளே போனால் நேராக அர்த்தமண்டபமும், அதனை தாண்டிக் கிழக்கு நோக்கிய சுவாமி கைலாசநாதர் கருவறையையும் நான் கண்டு தரிசிக்கலாம்.

வெளியே தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை காட்சி தருகிறாள். கோவிலின் உள்சுற்று பிரகாரத்தில் முறையே அதிகார நந்தி, சூரியன், ஜுர தேவர் நால்வர், அறுபத்து மூவர்கள், தெற்கு திசை நோக்கிய தக்ஷிணாமூர்த்தி, கன்னிமூலை கணபதி, பஞ்சலிங்கங்கள், வள்ளி – தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், கஜலக்ஷ்மி, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமி அம்மை, சந்திர பகவான் மற்றும் பைரவர்கள் ஆகியோர் பரிவார மூர்த்திகளாகக் காட்சித் தருகின்றார்கள்.

திருவிழாக்கள்:

மாசி மாத சிவராத்திரி, மாதாந்திர பிரதோஷ வழிபாடுகள், மார்கழி திருவாதிரை, கார்த்திகை சோமவார வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. இது தவிர இங்குக் குரு பெயர்ச்சி விழா வெகுசிறப்பாக நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 11 =

Most Popular