நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் !

381

நாராயணனின் அவதாரங்களுள் சிறப்பாகப் பேசப்படுபவை இராமவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மட்டுமே.

காண்போர் கண்டு ரசிக்கும் அழகிய முகமுடையவன் இராமன்.

வடுவூர்இராமனின்_முக அழகில் கண் பதித்தோர், தன் கண்ணை வேறிடுத்துச்செலுத்துதல்_மிகக்_கடினம்.

கல்யாண ராமன், தசரத ராமன், கோசல ராமன், சீதா ராமன், கோதண்டராமன் என பல பெயர்கள் உண்டு அவனுக்கு.

ஆயினும் அவன் முகத்தழகைக் கொண்டு அவனை அழகிய_ராமன் என்று அழைப்போர் ஒருவருமில்லை.

காரணம் இதுவே. வனவாசம் முடிந்து நந்திகிராமம் நோக்கிப் பயணிக்கிறான் இராமன்.

வனவாசம் முடிந்து இராமன் வராது ஒருநாள் தாமதித்தாலும் உயிரை மாய்த்துக் கொள்வான் பரதன்.

இதை அறிந்திருந்தாலும், பரத்வாஜ முனிவர் இராமனை தன் ஆசிரமத்திற்கு வந்து உணவருந்திச் செல்லுமாறு அழைத்த போது, சற்றும் தாமதியாது சம்மதித்தான்.

தாம் வருவதில் தாமதம் ஏற்பட்டாலும், வர வேண்டிய தருணத்தில் வந்துவிடுவேன் எனும் தகவலை அனுமன் மூலம் சொல்லியனுப்பினான்.

அது ஒரு புறம் இருந்தாலும், தன் பொருட்டு துறவறம் பூண்டு, தன் பாதுகையை அரியாசணையில் வைத்து அரசாளும் தம்பியின் உயிரைக் காட்டிலும் முனிவரிடம் நல்ல பெயர் வாங்கும் எண்ணமே மிகுந்திருந்தது.

முகம் அழகாய் இருந்தாலும், அகத்தே அடியாரைக் காக்கும் குணத்தில் குறை இருந்தது.

கிருஷ்ணாவதாரமும் அங்கனமே. நடந்தவை, நடப்பவை, நடக்கப் போவனவை யாவையும் அறிந்தவன் கண்ணன்.

மஹாபாரதத்தில் ஒரு கட்டம். சுபத்திரை கருவுற்றிருந்த காலம். கருவிலே வளரும் அபிமன்யு பெரும் வீரனாய் திகழவேண்டும் என்ற அவா சுபத்திரைக்கு.

போர்க்காலத்தில் போடப்படும் சக்ரவியூகத்தை உடைத்து அதனுள்ளே சென்று பகைவரை அழித்து பின் வெளியே வரும் போர்க்கலையை சுபத்திரையிடம் அர்ச்சுணன் சொல்லிக் கொண்டிருந்த சமயம்.

சக்ரவியூகத்தை உடைத்து உள்ளே சென்று போரிட்டு பகை வரை அழித்து வெளியே வரும் லாவகத்தை சொல்லமுற்படும் நேரத்து கண்ணன் இடைமறித்து அர்ச்சுணனைத் தன்னோடு அழைத்துச் சென்று விட்டான்.

கருவிலே உள்ள குழந்தை உள்ளே_செல்லும் வழியினை அறிந்து கொண்டது.

வெளியே_செல்லும்_வழி அறிய முடியாதபடி செய்தவன்_கண்ணன். காரணம் பின்னால் நடக்கவிருப்பதை இந்நாளிலேயே_அறிந்ததால்.

தானறிந்திட்ட_ரகசியம் அர்ச்சுணனுக்குத் தெரியாவண்ணம் பார்த்துக்-கொண்டான். போரிலும் ஸாரதியாய் பார்த்தனை வேறு பக்கம் செல்லுமாறு பணித்து அபிமன்யுவின் மரணத்திற்கு வழிவகுத்தான்.

இம்மாதிரி பலதருணங்கள் மஹாபாரதத்தில். முகத்திலே அழகிருந்தாலும் அகத்திலே கள்ளம் உடையவனாகவே கண்ணன் இருந்தான். தர்மம்_வெல்லும் பொருட்டே இதைச் செய்திருந்தாலும்
கள்ளம்_கள்ளமே.

அதன் பொருட்டே அழகிய கண்ணன் என்று அழைக்கும் அடைமொழிக்குச் சொந்தக்காரன் ஆகும் தகுதி_இழந்தான்.

நரசிம்மன் இவர்கள் இருவரிலும் மேம்பட்டவன்.
தெளிந்த_உள்ளத்தான். அதனாலேயே தெள்ளியஸிங்கன்.

நினைத்ததும்_அடியவர் துயர்_துடைப்பவன்.

தன்_மேற்பார்வையில் எழுப்பட்ட தூணிலே ஹரி இருக்கச் சாத்தியமில்லை என்ற எண்ணத்தில் இரண்யகசிபு அந்தியும் சந்தியும் சந்திக்கும் வேளையில் சற்றும் சிந்திக்காது
தன்_அந்திம_காலத்துக்கு அழைப்புவிடும்_விதமாய் தூண்_பிளந்தான்.

பேறுகாலம் ஏதுமின்றி, பகைவன் வீட்டுத்தூணாக இருந்த போதும் பக்தனைக் காத்தல் ஒன்றே தன் கடன் என்ற நோக்கோடு
மனித உடலோடு சிம்மமுகம் கொண்டு பிரகலாதன் துயர் களைந்தான்.

பாற்கடல் கடைகையிலே கண்டெடுத்த மஹாலக்ஷ்மி பரந்தாமன் மார்பினில் தஞ்சம் புகுந்தாள்.

நரசிம்மனின் அகத்தழகிலே
தன்சிந்தையைத்_தொலைத்திட்ட பிராட்டியோ, அவன் மடிதனில் அமர்ந்து ஒரு கண்ணால் அகம் பிரதிபலிக்கும் அவன் முகத்தழகையும், மறு கண்ணால் அவன் கனிந்த பார்வையால் காக்கும் பக்தர்களையும்
காணத்_தலைப்பட்டாள்.

அழுக்காறில்லா அகம் காரணமாக பிராட்டி அவன் மடிதனில் அமிர்ந்தாள். சிங்கமுகம் ஆயினும் தன்
சிந்தை_தொலைந்தாள்.

அழகியஸிங்கன் என்று நாம் அழைக்கும் பேற்றிற்கு_வித்திட்டாள்.

திருமழிசையாழ்வாரும் நான்முகன் திருவந்தாதியில்,
“அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான்ஏழ் உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து”,
என்பதாகப் பாசுரம் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ நரசிம்மன் திரு வடிகளே சரணம் !