எல்லா மங்களமும் உண்டாக வழிபட வேண்டிய கோயில்!
அரியலூர் மாவட்டம் அரியலூர் என்ற ஊரில் உள்ள கோயில் ஒப்பில்லாத அம்மன் கோயில். இங்கு அம்மனே மூலவராக இருக்கிறாள். ஒவ்வொரு அண்டும் ஆடி மாதமும், சித்திரை மாதமும் இங்கு திருவிழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரிய பெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.
கோயில் கருவறையில் சப்த கன்னியர் இருக்கிறார்கள். அருகிலுள்ள சன்னதியில் பத்ரகாளியம்மன் சீற்றம் சிறிதும் இல்லாமல் சிரித்த முகத்தினினளாகக் காட்சியளிக்கிறாள். கணபதி, முருகன் சன்னதியும் இங்கு அமைந்துள்ளது. வெளியில் முனியப்பசாமி, அய்யனார், கருப்பனார் சன்னதிகள் உள்ளன.
வாழ்வில் எல்லா விதமான மங்கங்களும் கிடைக்கவும், சகல செல்வங்களும் கிடைக்கவும் பக்தர்கள் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். அப்படி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், மஞ்சள், குங்குமம், வளையல் சாற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
ஏழு கன்னியர்களின் அம்சமாக இந்த ஒப்பில்லாத அம்மன் கருதப்படுவதால், ஓர் உருவே ஏழுருவானதாக சொல்கிறார்கள். மஞ்சள், குங்குமம், வளையல் சாற்றி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடுவது நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. அதே போன்று அம்மனுக்கு பொங்கல் வைத்து வணங்கினால், சகல செல்வங்களும் பொங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வெளியூரிலிருந்து ஒரு வளையல் வியாபாரி அந்த ஊருக்கு வளையல் விற்க வந்திருக்கிறார். ஒரு நாள் தெரு தெருவாக வளையல் விற்று வந்த அவரிடம் அவருக்கு எதிரே வந்து நின்ற ஒரு சின்ன பெண் வளையல்காரரே எனக்கு வளையல் வேண்டும் தருவீர்களா? என்று கேட்டாள். சின்ன பெண், ஏதேனும் சுட்டித்தனம் செய்கிறாளா என்று யோசித்துக் கொண்டிருந்தார் வளையல் வியாபாரி.
என்ன பார்க்குறீங்க? காசு தருவாளா? இல்லையா? என்று யோசிக்கிறீர்களா? என்று அந்தப் பெண் கேட்டாள். உடனே, அந்த தெருவுல இருக்கிற பெரிய வீடு என்னுடைய அண்ணனுடையது தான். அங்கு சென்று ஒப்பில்லாதவளுக்கு வளையல் போட்டுவிட்டதா சொல்லி காசு வாங்கிக் கொள்ளுங்கள் என்று குழந்தை சொல்லிருக்கிறாள். இதையடுத்து வளையல் வியாபாரியோ, கை நிறைய வளையல் போட்டுவிட்டிருக்கிறாள்.
வளையல் போட்டுக் கொண்ட கையோடு குழந்தை சிரித்துக் கொண்டே அங்கிருந்து ஓடிச் சென்றுவிட்டாள். சிறுமி சொன்ன வீட்டில் காசு வாங்க அந்த வளையல் வியாபாரி சென்றிருக்கிறார். ஆனால், அங்கு சென்ற பார்த்த பிறகு அதிர்ச்சி அடைந்துவிட்டார். ஏனென்றால், அந்த வீடானது, அந்த ஊர் ராஜா ஒப்பில்லாத மழவராயரோட அரண்மனை. என்னடா, இது ராஜாவீட்டு பெண்ணா, தன்னிடம் வளையல் போட்டுக் கொண்டாள் என்று தனக்குள் கேட்டுக் கொண்டு வளையலுக்கான காசை கேட்போம் என்று தயங்கி தயங்கி வீட்டிற்குள் நுழைந்தார்.
அதன் பிறகு உள்ளே சென்ற அவர், வளையலுக்கான காசை கேட்டார். அரண்மனையில் அப்படி ஒரு குழந்தை இல்லையே என்று சொன்னதோடு, வளையல் வியாபாரியை திட்டி தீர்த்ததோடு, அவருக்கு அடியும், உதையும் தான் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் ராஜாவுக்கு, நினைவிற்கு வந்தது. அது என்னவென்றால், ஓஹோ, வந்தது நமது குல தெய்வம் ஒப்பில்லாதவள் தான் என்று, எண்ணிக்கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு ஏராளமான பொன்னும் பொருளும் வளையல்காரருக்கு கொடுத்து அனுப்பினார்.
குழந்தையாக வந்து ஒப்பில்லாதவள் எந்த இடத்தில் வந்து வளையல் போட்டுக் கொண்டாளோ அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டி அம்மனை எழுந்தருளும்படி ராஜா வேண்டியிருக்கிறார். அம்மனும் அதற்கேற்ப அருள் வாக்கில் சரி என்று சொல்லிவிட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: பதிவுக்கு ஏற்ற புகைப்படம் இல்லை.
