பெண் சாபம் தீர்க்கும் கோயில்!

175

பெண் சாபம் தீர்க்கும் கோயில்

பெண்களால் இடப்படும் சாபங்கள் முத்தாலம்மன் ஆலய அன்னையை ஆராதிப்பதால் விலகுகிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர். எனவே இந்த ஆலயம் பெண் சாப நிவர்த்தி தலமாக விளங்குவது நிஜமே!

பெண் சாபம் தீர்க்கும் முத்தாலம்மன் கோவில்
முத்தாலம்மன்

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

ஓலைப்பெட்டி ஒன்று, காவிரி வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அப்போது ஆற்றங்கரையில் இருந்தவர்கள், அந்தப் பெட்டியை கரை சேர்த்து பிரித்து பார்த்தனர்.

என்ன ஆச்சரியம்? உள்ளே ஒரு அம்மன் சிலை. ஊர் மக்கள் அந்த சிலையை, ஒரு கீற்று கொட்டகையை ஏற்படுத்தி, அதனுள் பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கினர். அம்மனின் அருள் சக்தி அந்த ஊர் முழுவதும் பரவத்தொடங்கியது. காலப்போக்கில் அந்த இடம் மெருகேறி ஒரு சிறிய ஆலயம் உருவானது. அதுவே, முத்தாலம்மன் ஆலயம்.

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் வலது புறம் கம்பத்தடியான் திருமேனியைத் தரிசிக்கலாம். அத்துடன் வீரபத்திரன் மற்றும் கருப்பண்ணசாமி திருமேனிகளும் உள்ளன. தொழில் அபிவிருத்தி அடையவும், வியாபாரம் நல்லபடியாக நடக்கவும் கம்பத்தடியானை வேண்டிக்கொள்ள பக்தர்களின் பிரார்த்தனை பலிக்கிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், கம்பத்தடியானுக்கு அபிஷேக – ஆராதனைகள் செய்து புத்தாடை அணிவித்து தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.

மகாமண்டபத்தின் வடக்கில் மதுரைவீரனின் திருமேனி உள்ளது. அடுத்துள்ள கருவறையில் மூலவர் முத்தாளம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் இன்முகம் மலர அருளாட்சி புரிகிறாள். இங்கு அன்னையின் திருமேனி சுதையினால் உருவாக்கப்பட்டது. எனவே அன்னைக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. மாறாக அன்னையின் முன், அன்னையின் விக்கிரக சிரசு ஒன்று உள்ளது.

அனைத்து அபிஷேக – ஆராதனைகளும் இந்த திருவுருவ விக்கிரகத்திற்கே நடைபெறுகின்றன. இங்கு அன்னைக்கு தினசரி பாலாபிஷேகம் நடைபெறுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரவியப்பொடி, மஞ்சள் பொடி, பால், சந்தனம், தயிர், இளநீர் முதலியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தை மாத கடைசி வெள்ளிக்கிழமையில் அன்னைக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அன்னை முத்தாளம்மன் பலநூறு குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறாள். இந்த குல மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இங்கு வந்து மொட்டை அடித்து, காது குத்தி, பெயர் வைக்கும் விழாக்களை அன்னையின் சன்னிதியிலேயே செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை 108 சுமங்கலிகள் பங்கு பெறும் விளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பெண்களுக்கு, பூ, பழம், ஜாக்கெட் துணி, தாலி சரடு, தட்டு ஆகியவை ஆலய நிர்வாகத்தால் தரப்படுகிறது. பெண்களால் இடப்படும் சாபங்கள் அன்னையை ஆராதிப்பதால் விலகுகிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர். எனவே இந்த ஆலயம் பெண் சாப நிவர்த்தி தலமாக விளங்குவது நிஜமே!

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருச்சி கீழ ஆண்டாள் தெருவில் உள்ளது முத்தாலம்மன் ஆலயம். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.