குழந்தை பாக்கியம் அருளும் தண்டாயுதபாணி!

84

குழந்தை பாக்கியம் அருளும் தண்டாயுதபாணி!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் என்ற ஊரில் உள்ள கோயில் மரகத தண்டாயுதபாணி. இங்கு மரகத தண்டாயுதபாணி மூலவராக காட்சி தருகிறார். அவரே தான் உற்சவராகவும் திகழ்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகிறது. ஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறும் என்று கேட்டால், திருமணமாணவர்கள் தாய், தந்தை என்ற ஸ்தானத்தை பெறும் போது வாழ்க்கை முழுமை பெறுகிறது. என்னதான் காசு, பணம் இருந்தாலும் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை வேண்டாமா, மழலைச் செல்வம் இல்லாத வீடு வெறுமையாக்கத்தானே இருக்கும்.

இது போன்ற சூழலில் உங்களது வீடு உள்ளதா? கவலை வேண்டாம். செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு சென்று வந்தால் குழந்தைச் செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். அதற்கேற்பவே இங்கும் மலை மீது முருகப் பெருமான் காட்சி தருகிறார். மலையின் அடிவாரத்தில் விநாயகப் பெருமான் காட்சி தருகிறார். அவரை வணங்கிய பிறகு அவரது தம்பியான முருகப் பெருமானை படியேறிச் சென்று வழிபாடு செய்யலாம். அமைதியாக காட்சி தரும் மலையின் மீது சிறுவனாக, அழகனாக, பேரழகனாக முருகன் இருக்கிறான். தன் புன்னகையாலேயே பேரருள் வழங்கும் அந்த குழந்தையை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மரகதக் கல்லினால் ஆன முருகப் பெருமான் பழநி தண்டாயுதபாணியை போன்றே உள்ளார். இவருக்கு இரு பக்கமும் மயிலும், நாகமும் பின்புறத்தில் மயில் தோகையும் அமைக்கப்பட்டுள்ளன. தண்டாயுதபாணியை வணங்கிய பிறகு கோயில் பிரகாரத்தில் அமர்ந்தாலே போதும் கோபம், அகங்காரம், பொறாமை குணம் எல்லாமே காணாமல் போய்விடும். இந்தக் கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். கோயிலுக்கு பின்புறம் 45 அடி உயரத்தில் மலேசியா பத்துமலை முருகனும் காட்சி அளிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் முத்துச்சாமி என்பவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான் இங்கு கோயில் கட்ட வேண்டும் என்று சொன்னார். அதன்படி, அவரும் மலையில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு கஷ்டப்பட்டு கோயில் எழுப்பியுள்ளார். ஒருமுறை இந்தக் கோயிலுக்கு காஞ்சி மகா பெரியவா வந்துள்ளார். அப்போது அவர்தான், இந்தக் கோயிலுக்கு நடுபழநி என்று பெயர் சூட்டியுள்ளார்.