பூச்சொரிதல் ஸ்பெஷல் !

390

1. ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே!
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா!
நாரணன் தங்கையரே ! நாயகியே மாரிமுத்தே!
காரணியே! சங்கரியே! மாரிமுத்தே வாருமம்மா
2. மாரி பகவதியே! மக்கள்முகம் பாருமம்மா!
பார்வதி அம்பிகையே! பாலர்களை பாருமம்மா!
பேரோ பெரியதம்மா! பிள்ளைமுகம் பாருமம்மா!
காளி துரந்தரியே! கண்ணெடுத்துப் பாருமம்மா!
3. மயிலைக் கோலவிழித் தேவிஎமைக் காருமம்மா!
மகிமை படைத்தவளே! ஏழைகளைக் காருமம்மா!
கைவிட்டால் யாருமில்லை! கைகொடுத்துக் காருமம்மா!
கனகமணி சுந்தரியே! மனசுவச்சுக் காருமம்மா!
4. உத்திர மேரூரின் சக்தி! பதம் பாருமம்மா!
ஊரார்க்கு நோயழிக்கும் வேப்பிலையை கொடும்மா
தேடிவரும் ஜனங்களுக்கு திருச்சாம்பல் தாருமம்மா!
மங்கையரை ஆதரித்து குங்குமத்தை தாருமம்மா!
5. சிதம்பரத்து பூமியிலே குடிகொண்ட செல்லியம்மா!
கொண்டுவரும் கரகத்திலே வந்துகுடி கொண்டவளே
வேப்பமர நிழல்தேடி வீடுகண்ட மாரியம்மா!
தீமிதிக்கும் தீயினிலே பூவாக இருக்குமம்மா!
6. ஆணைமலை எல்லைவிட்டு கண்ணகியே வாம்மா!
ஏழுகடல்தாண்டி எங்களிடம் வாருமம்மா!
வடகோடி எல்லைவிட்டு நடுவீடு வாருமம்மா!
வானத்து எல்லைவிட்டு வாருமம்மா எங்கள் தலம்!
7. ஆரல்வாய் மொழிஊரின் அம்மனே! அம்பிகையே!
அஞ்சுதலை நாகம்மா அழகாகக் குடைபிடிக்கும் !
பத்துதலை நாகம்மா பாங்காகக் குடைபிடிக்கும்!
பாம்பும் பயந்திருக்கும் நாகாத்தா சன்னதியில் !
8. கூடலூர் மாரியம்மா! கொடியவிஷம் தீருமம்மா!
பாம்பு கடிச்சவிஷம் பட்டெனவே தீருமம்மா!
நாகம் கடிச்சவிஷம் நாயகியே தீருமம்மா!
கொடியவிஷங்களெல்லாம் குலதேவி நீயிறக்கு!
9. ஊத்துக்காடு எல்லையம்மா உத்தமியே வாருமம்மா!
உடுக்கை பிறந்ததம்மா உத்ராட்ச பூமியிலே!
பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்!
மத்தளம் பறந்ததம்மா மாதா நீ நடக்கையிலே!
10. பாளையங்கோட்டை பதிமேயும் ஆயிரத்தம்மா!
குழலும் பிறந்ததம்மா பூங்காற்று மேடையிலே!
யாழும் பிறந்ததம்மா ஓங்கார ஓசையிலே!
பெருவங்கியம் பிறந்ததம்மா மங்கல சன்னதியில்!
11. கும்மிடிப்பூண்டிநகர் ஏகானுலி வாருமம்மா!
குங்குமம் பிறந்ததம்மா கோமளை உன்சிரிப்பில்!
சாம்பல் பிறந்ததம்மா சதுர்வேத மாளிகையில்!
வேம்பு பிறந்ததம்மா வினைதீர்க்கும் எல்லையிலே!
12. காந்தளூர் மூவழகு அரசியே வாருமம்மா!
கைவாள் பிறந்ததம்மா கனலும் சமர்களத்தில்!
சூலம் பிறந்ததம்மா சுழலும் போர்க்களத்தில்!
மழுவும் பிறந்ததம்மா மாற்றாரின் கோட்டையிலே!
13. திருவெறும்பூர் அரசுகாத்த பிடாரியே வாருமம்மா!
தீச்சட்டி கொண்டுவந்தோம் தேவி பாக்கலையோ!
கரகம் கொண்டுவந்தோம் காளிமுகம் பாக்கலையோ!
திருநீறு பூசிக்கொண்டு தேடிவந்தோம் பாக்கலையோ!
14. விருதுநகர் உச்சி மாகாளி வாருமம்மா!
வேப்பிலை அடித்து வேண்டும் குரல் கேக்கலையோ!
மஞ்சளிலே நீராட்டும் மக்கள்குரல் கேக்கலையோ!
எலுமிச்சங் கனியோடு ஏங்கும் குரல் கேக்கலையோ!
15. மதுரை அங்காள பரமேஸ்வரி வாருமம்மா!
மாவிளக்கு ஏத்திவச்சோம்! மனசு கரையலையோ!
நெய்விளக்கு ஏத்திவச்சோம்! நெஞ்சுகரையலையோ!
உன்மகள் வாட்டங்கண்டு உள்ளங் கரையலையோ!
16. உதக மண்டலத்து மாரியம்மா வாருமம்மா!
ஆடிவிழா எடுத்தோம்! ஆயிமனம் இரங்கலையோ!
காப்புகட்டி கூழ்வார்த்தோம் கன்னிமனம் இரங்கலையோ!
தெருக்கூத்து தான்நடத்தி தேடிவந்தோம் இரங்கலையோ!
17. மேல்மலையனூர் வாழும் அங்காள பரமேஸ்வரி!
மேனியிலே பூத்தமுத்தை ஓங்காரி நீயிறக்கு!
முகத்தினில் முத்தையம்மா முக்கண்ணி – நீயிறக்கு!
கழுத்தினில் முத்தையம்மா கங்காளி நீயிறக்கு !
18. ராமநாதபுரத்துவன சங்கரி வாருமம்மா!
மார்பில் பதித்தமுத்தை மாதங்கி நீயிறக்கு!
வயிற்றில் படர்ந்தமுத்தை வல்லணங்கே நீயிறக்கு !
தோளில் விழுந்தமுத்தை துரந்திரியே நீயிறக்கு !
19. பழனித் தலம் கண்ட மாரியம்மா வாருமம்மா!
பாதத்தில் பாய்ந்த முத்தை பைரவி நீயிறக்கு!
முதுகில் செறிந்த முத்தை மூதணங்கே நீயிறக்கு!
கையில் இணைந்த முத்தை கண்ணகியே நீயிறக்கு!
20. படவேட்டு ரேணுகாம்பா! பக்தர்களைக் காருமம்மா!
பாரமுத்தை நீயிறக்கி பாலர்களைக் காருமம்மா!
ஏறுமுத்தை நீயிறக்கி ஏழைகளைக் காருமம்மா!
வந்த முத்தை நீயிறக்கி வல்லவளே! காருமம்மா!
21. அம்மா பாளையத்து தக்ஷிண காளியம்மா!
ஆலயத்து வேப்பிலையில் தொட்டவிதி மாறுமம்மா!
தோரணத்து வேப்பிலையில் தொட்டவிதி மாறுமம்மா!
தீட்டு தடுப்பெல்லாம் தீர்ப்பது உன் வேப்பிலையாம்!
22. நுங்கம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி வாருமம்மா!
மங்கலமாம் குங்குமத்தால் மனைவாழ வேணுமம்மா!
இட்டுவச்சு பொட்டு உந்தன் எல்லையிலேவாழுமம்மா!
வச்சபில்லி சூனியத்தை ஓட்டும் உந்தன் குங்குமம்மா!
23. நெல்லைநகர் முப்பிடாரி நித்திலமே வாருமம்மா!
நீறெடுத்து பூசிவிட்டால் ஏறெடுத்து பார்ப்பவளே!
திருச்சாம்பல் தானணிந்தால் மாறும் அயன் கையெழுத்து
தோஷம் அணுகாமல் காப்பதுஉன் வெண்ணீறாம்!
24. வடுகப்பட்டி பகவதி அம்மனே மாரியம்மா!
வாளோடு வேலெடுத்து வந்த பகை தீர்த்தவளே!
வில்லெடுத்து அம்மாநீ வீணர்களை சாய்த்தவளே
சங்கோடு சக்கரத்தால் சாரும்பகை மாய்த்தவளே!
25. குலசேகரன் பட்டினத்தில் வாழும் முத்து வீரம்மா
பொங்கலிட்டு வந்தவர்க்கு பொழுதோடு காவல் கொண்டாய்!
அறியாமல் செய்தபிழை அறிந்தும் காவல் கொண்டாய்!
தெரியாமல் செய்தபிழை தெரிந்தும் நீ காவல் கொண்டாய்!
26. பேரூர் ஸ்ரீவைகுண்டம் ! பெயரோ முத்தாரம்மா!
சிங்கத்தின் மேலிருந்து ஜெகத்தைநீ ஆண்டிடுவாய்!
நேர்நடத்தி மாரியம்மா திசைகளை ஆண்டிடுவாய்!
சூலப் படையோடு காலத்தை ஆண்டிடுவாய்
27. முசிறிப் பதிதன்னில் முன்னிற்கும் அங்காளம்மா!
முகத்தில் தீபறக்க முக்கண்ணி வீற்றிருப்பாய்!
தலைமாலை தான் அணிந்து தவத்தில் நீ வீற்றிருப்பாய்!
பாம்புக் குடைநிழலில் பராசக்தி வீற்றிருப்பாய்!
28. கடலூர் காளியம்மா! கனகக் கொலுவிருப்பாய்!
கண்ணாயிரம் மலர்ந்து சபையில் கொலுவிருப்பாய்!
அரியணை மேலமர்ந்து அம்மா நீ கொலுவிருப்பாய்!
ஆதிமுதல் அந்தம் வரை அரசு நடத்திடுவாய்!
29. விருத்தா சலம்பதியின் வித்தகியே மாரியம்மா!
வேதமுதல் ஆனவளே! ஜோதிமணி மாரியம்மா!
ஏதும் அறியார்க்கு எல்லாம் நீ மாரியம்மா!
மாதம் தவறாமல் மழைகொடுக்க வேணுமம்மா!
30. மாரியம்மன் சன்னதியில் மக்கள் நலம்வாழி!
கற்பூர ஜோதியிலே கைகுவித்தார் குலம்வாழி!
ஆதிமகா மாரியம்மன் அடியார்கள் இனம்வாழி!
ஊதுவத்தி ஏற்றிவைத்து உருகார் மனம் வாழி!
31. மாரியம்மன் கோவிலிலே மங்கலங்கள் தான்வாழி!
சந்த நீராடி சார்ந்தார்கள் பேர்வாழி!
தேங்காய் உடைத்துவைத்து கும்பிட்டார் சீர்வாழி!
எண்ணை விளக்கேற்றி மின்னுகின்ற ஊர்வாழி!
32. மாரி மகமாயி மக்களெல்லாம் வாழியவே!
ஆயி மகமாயி அன்பரெல்லாம் வாழியவே
தேவி மகமாயி திருத்தொண்டர் வாழியவே
மாயி மகமாயி மலர்ப்பாதம் வாழியவே!

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் செயலே!
எல்லாம் உன் உடமையே!
எல்லோரும் உன் அடிமையே