Wednesday, October 18, 2023
HomeAanmeega Thagavalgalபிரபஞ்சத்திற்கு அப்பால் உள்ள விண்வெளி

பிரபஞ்சத்திற்கு அப்பால் உள்ள விண்வெளி

இப்பிரபஞ்சத்தின் மேல் உலகங்களில் கூட பிறப்பும், இறப்பும் இருப்பின் அத்தகைய உலகங்களுக்குச் செல்வதற்கு பெரும் யோகிகள் பெரும் சித்தியை அடைந்த போதிலும், ஜட உலக வாழ்க்கையின் விசேஷ வசதிகளை அனுபவிக்கும் உள் நோக்கம் கொண்டுள்ளனர். மேல்லோகங்களில் பிரமிக்கதக்க நெடுங்காலம் வாழ முடியும். அவ்வுலகங்களில் வாழ்நாட்கள் எவ்வளவு நெடியது என்பதை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் சற்றே நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்:

சஹஸ்ர யுக பர்யந்தம்
அஹர் யத் பிரம்மனோ விது
ராத்ரிம் யுக-சஹஸ்ராந்தம்
தேஹோ-ராத்ர-விதோ ஜனா

“பிரம்மாவினுடைய ஒரு பகல் நேரமானது (அதாவது பனிரெண்டு மணி நேரம்) மானிடர்களின் கணக்குப்படி ஆயிரம் யுகங்களுக்குச் சமமானதாகும். அவருடைய இரவும் இவ்வாறே நீண்டது ஆகும்.” (பகவத்கீதை 8.17)

ஒரு யுகம் என்பது 43,00,000 வருடங்கள் ஆகும். இதை ஆயிரத்தால் பெருக்கும் போது கிட்டும் தொகையே பிரம்மாவின், பிரம்ம லோகம் எனும் கிரகத்தில், பன்னிரெண்டு மணி நேரங்களுக்குச் சமமாகும். அதே கால அளவை, அவருடைய இரவு நேரமான மற்றொரு பன்னிரெண்டு மணி நேரங்களும் கொண்டுள்ளது. இம்மாதிரியான முப்பது நாட்கள் கழியும் பொழுது பிரம்மலோகத்தில் ஒரு மாதமும், இத்தகைய பன்னிரண்டு மாதங்கள் கழியும் பொழுது ஒரு வருடமும் ஆகிறது. பிரம்மாவோ இம்மாதிரியான நூறு வருடங்களுக்கு உயிர் வாழ்கின்றனர். இதிலிருந்து பிரம்ம லோகத்தில் வாழ்நாள் மிகமிக நெடியது என்பதை நாம் உணரலாம். இருப்பினும், அங்கும், பல்லாயிரக்கணக்கான கோடி வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள், பிரம்மலோக வாசிகளும் இறப்பை சந்திக்கவே நேர்கின்றது. நாம் ஆன்மீக உலகங்களுக்குச் சென்றாலொழிய இறப்பிலிருந்து விடுதலை பெற முடியாது.

அவ்யக்தாத் வியக்த: சர்வா
பிரபவந்தி-அஹர்-ஆகமே
ராத்ரி-ஆகமே-பிரலீயந்தே
தத்ரைவா வியக்த-சம் ஜ்ஞ்கே

“பிரம்மாவின் பகல் நேரம் துவங்கும் போது கோடிக்கணக்கான ஜீவ ராசிகள் உயிர் பெற்று எழுகின்றனர். பிரம்மாவின் இரவு நேரம் துவங்கும் போது அவர்கள் அனைவரும் அழிக்கப்படுகின்றனர்.” (பகவத்கீதை 8.18)

பிரம்மாவின் பகல் நேரம் முடியும் போது, அவருடைய கிரகத்திற்கு கீழே இருக்கும் அத்தனை கிரகங்களும் நீரில் மூழ்குகின்றன. இதன் காரணமாக அக்கிரகங்களில் இருக்கும் அனைத்து ஜீவாத்மாக்களின் ஜடசரீரங்களும் அழிக்கப்படுகின்றன. இந்த பிரளயத்திற்குப் பிறகு பிரம்மாவின் இரவு நேரம் துவங்கி கழிகின்றது. மறு தினம் காலையில் பிரம்மாவினுடைய பகல் நேரம் துவங்கும் போது மீண்டும் சிருஷ்டி துவக்கப்படுகின்றது. அப்போது எல்லா ஜீவாத்மாக்களும் உருவாக்கப்படுகின்றன இவ்வாறு சிருஷ்டி, அழிப்பு ஆகிய இரு நியதிகளுக்கும் உட்பட்டு ஜட உலகம் இயங்குகின்றது.

பூத கிராம ஸ ஏவாயம்
பூத்வ-பூத்வ-ப்ரளீயதே
ராத்ரி-ஆகமே-அவஷ பார்த்த
பிரபவதி-அஹர்-ஆகமே

“மீண்டும், மீண்டும் பகல் நேரம் வருகின்றது; இந்த ஜீவாத்மாக்கள் அனைவரும் செயல்படுகின்றனர். மீண்டும் இரவு நிகழும் போது, பார்த்தனே, அவர்கள் அனைவரும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அழிக்கப்படுகின்றனர்.” (பகவத்கீதை 8.19)

இவ்வுலகில் வாழும் ஜீவாத்மாக்களில் ஒருவரும் பிரளயத்தை விரும்புவதில்லை என்ற போதிலும், எல்லா கிரகங்களும் பிரளயத்தின் பொழுது நீரில் மூழ்குகின்றன. அனைத்து ஜீவ ஆத்மாக்களும் பிரம்மாவினுடைய இரவு நேரம் முழுவதும் இந்நீருக்குள்ளே முழ்கி இருக்கின்றனர். ஆனால் மறு நாள் பகல் நேரம் தொடங்கும் பொழுது இந்நீரானது மெல்ல மெல்ல மறைகின்றது.

பரஸ் தஸ்மாத் து-பாவோ அன்யோ
அவ்யக்தோ அவ்யக்தாத் சநாதன
ய ஸ ஸர்வேஷு பூதேஷு
நஸ்யத் ஸ ந வினஸ்யதி

“ஆயினும், தெரிந்தும் தெரியாததுமான ஜடப் பொருள்களுக்கு அப்பாற்பட்டதும், நித்யமானதுமான ஒரு சிருஷ்டி இருக்கிறது. இது மேன்மையானதும், எப்போதும் அழிக்கப்படாததும் ஆகும். இப்பிரபஞ்சத்தில் உள்ளவை அனைத்தும் அழிக்கப்பட்ட போதிலும், அந்த சிருஷ்டியானது அழிவு அடையாமல் தன் நிலையிலேயே இருக்கின்றது.” (பகவத் கீதை 8.20)

நாம் வாழும் இந்த ஒரு பிரபஞ்சத்தின் அளவுகளை நம்மால் கணக்கிட முடிவதில்லை. ஆனால், வேத நூற்களிலிருந்து பரமபுருஷராகிய இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரது சிருஷ்டியில் இம்மாதிரியான ஜட உலகப் பிரபஞ்சங்கள் இலட்சக்கணக்கில் இருக்கின்றன என்றும், ஜட உலக பிரபஞ்சங்கள் அனைத்திற்கும் அப்பால் ஆன்மீக விண்வெளியும் இருக்கின்றது என்றும் தெரிய வருகிறது. ஆன்மீக உலகங்களும் அதில் வாழும் உயிரினங்களும் எப்போதும் நிரந்தரமாக உள்ளன. மேலே குறிப்பிட்ட சுலோகத்தில் “பாவ” என்பது இயற்கைத் தன்மை என்ற பொருளுடன் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது. எனவே இச்சுலோகத்திலிருந்து ஜட உலகத்திற்கு அப்பாற்பட்ட இன்னொரு வகையான இயற்கைத் தன்மை இருக்கின்றது என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம். இவ்வுலகில் கூட இரண்டு வகையான சக்திகள் இருப்பதை நாம் காணுகின்றோம். பொதுவாக ஜீவாத்மாக்கள் ஆன்மீகச் சக்தியை சேர்ந்தவர்கள். ஆத்மாவானது ஜட சரீரத்தினுள்ளே இருக்கும் வரையில் ஜட சரீரமானது இயங்குகின்றது. ஆன்மீக சக்தியின் ஒரு துகளான அந்த ஆத்மா சரீரத்தைவிட்டு வெளியேறியவுடன், அந்த சரீரமானது இயக்கமின்றி ஜடமாக இருக்கின்றது. ஆக, ஆத்மாக்கள் எனப்படும் ஆன்மீக சக்தியானது கிருஷ்ணருடைய உயர்வகை சக்தியாகவும் ஜட சக்தியானது தாழ்ந்த சக்தியாகவும் அழைக்கப்படுகிறது. இந்த ஜட சக்திக்கு அப்பால் உயர்ந்த சக்தி ஒன்று உள்ளது. அது முழுவதும் ஆன்மீகமானது. பரிசோதனை நிகழ்த்துவதின் மூலம் இந்த ஆன்மீகச் சக்தியை உணர முடியாது. கோடிக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தொலைநோக்கியின் மூலம் காணலாம். ஆனால் அவற்றிற்கு நம்மால் செல்ல முடிவதில்லை. இவ்வாறான நம்முடைய திறமையின்மையை நாம் உணர வேண்டும். ஜட உலகில் ஆராய்ச்சிகளின் மூலம், ஜடப் பிரபஞ்சத்தை நம்மால் புரிந்துக்கொள்ள முடிவில்லையெனில், இறைவனையும், அவனது உலகையும் எங்ஙனம் அறிவது? ஆகவே விஞ்ஞான பரிசோதனைகள் நிகழ்த்துவதன் மூலம் இறைவனைப் பற்றி நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது. பகவத் கீதையைக் கேட்பதின் மூலம் நம்மால் இறைவனைப் பற்றி புரிந்துக் கொள்ள முடியும். நம்முடைய தந்தை யார் என்பதை நம்மால் பரிசோதனைகள் நிகழ்த்தி அறிய முடியாது. நம்முடைய தாயை நம்பி, அவரிடமிருந்தே இந்த தகவலை நாம் பெற வேண்டும். தாயார் தந்தையைப் பற்றி கூறும் தகவலை ஏற்க மறுப்போமாயின் வேறு எந்தவிதத்திலும் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இதே மாதிரியாக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நம்பி இருப்போமாயின், இறைவனாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அவருடைய சாம்ராஜ்யம், ஆகியவற்றைப் பற்றிய அனைத்து தகவல்களையும் புரிந்துக் கொள்ளலாம்.

‘பரஸ்து பாவ’ என்பது ‘உயரிய தன்மை’ என்று பொருள்படும். ‘வியக்த’ என்னும் பதம் புறத் தோற்றத்திற்கு வெளிப்படும் இவ்வுலகத்தைக் குறிக்கின்றது. இந்த ஜட உலகப் பிரபஞ்சமானது இவ்வுலகத்தைக் குறிக்கின்றது. இந்த ஜட உலகப் பிரபஞ்சமானது பூமி, சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் இதர கிரகங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஜடச் சக்தியினால் செய்யப்பட்ட, பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட, எப்பொழுதும் நிலைத்து விளங்கும் ஒரு சிருஷ்டி இருக்கின்றது. ‘அவ்யக்தாத் சனாதன’ – ஆதியும் அந்தமும் கொண்டு விளங்குவதே ஜட உலகின் தன்மையாகும். ஆனால் ஆன்மீக உலகத்தின் தன்மையோ ‘சனாதன’, அதாவது ‘நித்யம்’ ஆகும். அவ்வுலகத்திற்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. இது எவ்வாறு சாத்தியமாகும்? மேகமானது ஆகாயத்தில் செல்லும் பொழுது, அது நமது கண்ணுக்கு பிரம்மாண்டமான தூரத்தை மறைப்பதைப் போலத் தோன்றும். உண்மையில், ஆகாயத்தின் மிகப் பெரிய பகுதியில் ஒரு மிகச் சிறிய பகுதியையே அம்மேகமானது வியாபிக்கின்றது. நாம் மிகச் சிறிய மனிதர்களாகையால் ஒரு மேகமானது சில நூறு மைல்கள் விஸ்தீரணத்தைக் கொண்டு விளங்கும் போது, நமது கண்ணுக்கு முழு ஆகாயமும் மறைக்கப்பட்டுவிட்டது போல தோன்றக்கூடும். அதே மாதிரியாக, இந்த ஜட சிருஷ்டியானது, அளவில்லாத ஆன்மீக விண்வெளியில் மிகச் சிறியதொரு மேகத்திற்கு ஒப்பாகும். இந்த ஜட உலகமானது மஹத்-தத்துவம் எனப்படும் ஜடப் பிரபஞ்சத்தினால் சூழப்பட்டிருப்பதால் நம்மால் நித்தியமான ஆன்மீக உலகத்தைக் காண முடிவதில்லை.

எவ்வாறு ஒரு மேகத்திற்கு ஆரம்பமும் முடிவும் இருக்கின்றதோ, அதே மாதிரியாக, இந்த ஜட சிருஷ்டியும் ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டு இருக்கின்றது. மேகங்கள் விலகும்போது வானமானது தெளிவாகி, உள்ளது உள்ளபடி, தெரிவதைக் காணலாம். அதே மாதிரியாக நமது சரீரமானது ஆன்மீக ஆத்மாவின் மீது செல்லும் மேகத்திற்குச் சமமாகும். சில நேரத்திற்கே தங்கி, சில பொருட்களை உற்பத்தி செய்து விட்டு, பிறகு சரீரம் குன்றி மறைகிறது. ஜட உலகிலே நாம் காணும் எல்லா விதமான விநோதங்களும் பிறத்தல், வளர்த்தல், தங்கி இருத்தல், உபபொருட்களைச் செய்தல், தேய்தல், மறைதல் ஆகிய ஆறுவித மாற்றங்களுக்கு உட்பட்டே இருக்கின்றன. இவ்வாறு மேகத்தைப் போன்று தோன்றி மறையும் ஜட உலகத் தன்மைக்கு அப்பாற்பட்ட, நித்தியமாக விளங்கும், ஒரு ஆன்மீகத் தன்மை இருக்கின்றது என கிருஷ்ணர் கூறுகின்றார். அது மட்டுமின்றி இந்த ஜட உலகத் தன்மையானது ‘அவ்யக்தாத் சனாதனா’ – அழிவின்றி விளங்குகிறது. வேத நூற்களில் ஜட உலகம் மற்றும் ஆன்மீக விண்வெளியைப் பற்றிய விவரங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாவது காண்டத்தில் ஆன்மீக விண்வெளியைப் பற்றியும் விவரங்கள் உள்ளன. ஆன்மீக உலகத்தில் ஆன்மீக விமானங்கள் இருக்கின்றன என்றும், அங்கே உள்ள நித்திய சித்திர்களான ஆத்மாக்கள் இத்தகைய ஆன்மீக விமானங்களில் மின்னலைப் போன்று பயணம் செய்கின்றனர் என்றும் கூட விவரிக்கப்பட்டுள்ளது. நாம் இங்கு காணும் காட்சிகள் அனைத்தையும் அங்கே ஆன்மீக உலகத்தில் உண்மையாகவே காணலாம். ஜட உலகத்தில் நாம் காணும் அனைத்தும் ஆன்மீக உலகத்தில் உண்மையாவே இருக்கும் பொருட்களின் பிரதிபலிப்பு அல்லது நிழலே ஆகும். நாம் ஒரு சினிமா படத்திற்கு செல்வோமாயின் அங்கு திரையில் காண்பவை அனைத்தும் வெளியே நிகழும் உண்மையான நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பு அல்லது நிழலே ஆகும். எவ்வாறு சில கடைகளில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் பொம்மை உண்மையான ஒரு பெண்ணையொட்டி அமைக்கப்பட்ட நகலோ, அதே மாதிரியாக, இந்த ஜட உலகமும் உண்மையாக இருக்கும் ஆன்மீக உலகத்தையொட்டி ஜட சக்திகளினால் உருவாக்கப்பட்ட நகலே என்று ஸ்ரீமத் பாகவதம் தெரிவிக்கின்றது. சற்றே அறிவு படைத்த எவரும் கடையில் காணும் பெண் பொம்மை உண்மையானது அல்ல என்று எளிதில் அறிவார். ஆன்மீக உலகம் என்ற ஒன்று உண்மையாகவே இருப்பதின் காரணமாகவே நகலான இந்த ஜட உலகமானது நமக்கு உண்மையைப் போல தோன்றுகிறது என்று ஸ்ரீதர சுவாமி கூறுகின்றார். உண்மை என்றால் என்ன என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். அழிக்க முடியாது விளங்கும் பொருட்களே உண்மையான பொருட்களாகும். உண்மை என்றால் அழியாத நித்தியத் தன்மை ஆகும்.

நா சதோ வித்யதே பாவோ
நா பாவோ வித்யதே சத:
உபயோர் அபி திருஷ்டோ அன்தஸ்
திவி அனயோஸ் தத்வ-தர் ஸிபி

“உண்மையைக் கண் கூடாகக் கண்டறிந்தவர்கள், உண்மையல்லாதது நிலைக்காது என்றும், உண்மையானது தடையின்றி நிலைத்து நிற்கிறது என்றும் முடிவு செய்து இருக்கின்றனர். உண்மை, பொய் ஆகிய இரண்டின் தன்மைகளையும் தீர ஆராய்ந்தே இத்தகைய முடிவிற்கு இவர்கள் வந்துள்ளனர்.”‘ ( பகவத்கீதை 2.16)

உண்மையான ஆனந்தம் என்றால் கிருஷ்ணரே. இதற்கு மாறாக ஜட உலக ஆனந்தமானது நிரந்தரமற்றதும், உண்மையற்றதும் ஆகும். உள்ளதை உள்ளபடியே காணும் சக்தி படைத்தவர்கள், போலியான நிழல் இன்பத்தில் பங்கு பெற மாட்டார்கள். நமது வாழ்க்கையின் உண்மையான நோக்கம், ஆன்மீக விண்வெளியை அடைவதே. ஆனால் ஸ்ரீமத் பாகவதம் சுட்டிக் காட்டுவதைப் போல பெரும்பாலான மக்கள் இதை உணருவதில்லை. உண்மையை உணருவதற்கும், அதை பெறுவதற்குமே இந்த மனித வாழ்க்கையைப் பயன்படுத்த வேண்டும். இந்த இருள் சூழந்த உலகத்தில் இருக்க வேண்டாம் என்றே எல்லா வேத நூற்களும் நமக்கு அறிவுறுத்துகின்றன. இருட்டாக இருப்பதே இந்த உலகத்தின் இயல்பான தன்மை ஆகும். ஆனால் ஆன்மீக உலகமோ, நெருப்பு மற்றும் மின்சாரத்தின் உதவியின்றி அளவற்ற பிரகாசத்துடன் விளங்குகிறது. பகவத் கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தில் (15.6) ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு சற்றே கோடிட்டுக் காட்டுகின்றார்.

ந தத் பாசயதே சூர்யோ
ந ஸஸாங்கோ ந பாவக
யத் கத்வா ந நிவர் தந்தே
தத் தாம பரமம் மம

“என்னுடைய லோகமானது சூரியனாலோ, சந்திரனாலோ அல்லது மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அவ்வுலகத்தை அடைபவர் மீண்டும் இந்த ஜட உலகத்திற்கு திரும்புவதில்லை.” (பகவத்கீதை 15.😎

நம்முடைய தற்போதைய ஜட புலன்களினால் உணரமுடியாது என்பதாலேயே சில சமயங்களில் ஆன்மீக உலகம் காட்சிக்கு அப்பாற்பட்டது என விவரிக்கப்படுகிறது.

அவ்யக்தோ அக்ஷர இதி உக்தஸ்
தம் ஆஹா பரமாம் கதிம்
யம் பிராப்ய ந நிவர் தந்தே
தத் தாம பரமம் மம

“என்றும் தவறாததும் காட்சிக்குப் புலப்படாததுமான இந்த மேன்மையான உலகமே மிகச் சிறந்த சேருமிடமாகும். அங்கு ஒருவா செல்வாராயின் அவர் என்றும் திரும்பிவருவதில்லை. அதுவே நான் வசிக்கும் தலை சிறந்த வாசஸ்தலமாகும்.” (பகவத்கீதை 8.21)

இச்சுலோகத்தில் ஒரு மகத்தான பெரும் பயணம் சுட்டிக் காட்டடப்பட்டிருக்கின்றது. இந்த ஜட உலக விண்வெளியைத் தாண்டி, ஜட பிரபஞ்சம் முழுவதையும் கடந்து அதன் பலவிதத் தடுப்புகளையும் ஊடுருவி மீறிச் சென்றே நாம் ஆன்மீக விண்வெளியில் பிரவேசிக்க முடியும். இத்தகைய பயணமே “பரமம் கதிம்” என்று கூறப்படும் மிக உயரியப் பயணமாகும். இந்த கிரகத்திலிருந்து சில ஆயிரம் மைல்கள் விண்வெளியில் பயணித்து விட்டு, பிறகு திரும்புவதை போன்ற பயணம் அல்ல. இம்மாதிரியான பயணங்கள் பெரும் சாதனைகள் ஆகா. இந்த ஜடப் பிரபஞ்சம் அனைத்தையும் தாண்டி செல்ல வேண்டும். விண்கலன்களின் மூலமாக இவ்வாறு ஜட பிரபஞ்சத்தைக் கடந்து செல்ல முடியாது. ஆனால் கிருஷ்ண பக்தியைச் சார்ந்த வாழ்க்கையின் மூலம் கடந்து செல்லலாம். வாழ்நாள் முழுவதும் கிருஷ்ண உணர்வு நிலையில் ஈடுபட்டு இறக்கும் தறுவாயில் கிருஷ்ணரையே நினைத்திருப்பவர் உடனடியாக ஆன்மீக உலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அத்தகைய ஆன்மீக விண்வெளிக்கு சென்று பூரண அறிவைப பெற்று, நித்தியானந்தமான வாழ்க்கையைப் பெறுவதில் நமக்கு சற்றேனும் விருப்பம் இருக்குமாயின், இப்பொழுதே நாம் நம்முடைய சச்சிதானந்த சரீரத்தைப் பெறுவதற்கான முயற்சியைத் தொடங்க வேண்டும். கிருஷ்ணர் இத்தகைய சச்சிதானந்த சரீரத்தை பெற்றிருக்கிறார் என்று விவரிக்கப்படுகிறது. “ஈஸ்வர பரம கிருஷ்ண, சச்சிதானந்த விக்ரஹ”. நாமும் சச்சிதானந்த சரீரத்தையே பெற்றிருக்கின்றோம். ஆனால் நாம் பெற்றிருப்பது மிகச் சிறியது மட்டுமின்றி, ஜட சரீரம் என்னும் ஆடையினால் மூடப்பட்டிருக்கிறது. எவ்வாறாவது இந்த பொய்ச் சட்டையை நாம் களைந்து விடுவோமாயின் ஆன்மீக சாம்ராஜ்யத்தை அடைவோம். ஒரு முறை ஆன்மீக உலகத்திற்குச் சென்று விடுவோமாயின் பிறகு ஜட உலகத்திற்கு திரும்ப வேண்டியத் தேவை இல்லை. (யம் பிராப்ய ந நிவர்தந்தே).

‘தாம பரமம்’ என்று விவரிக்கப்படும் கிருஷ்ணரின் உன்னத லோகத்திற்குச் செல்ல நாம் ஒவ்வொருவரும் முயல வேண்டும். நம்மை அழைப்பதற்காக கிருஷ்ணரே நேரிடையாக வருகின்றார். நமக்கு வழி காட்டுவதற்காக வேத நூற்களையும் அவர் தந்திருக்கின்றார். அது மட்டுமின்றி அவருடைய உண்மையான பிரதிநிதிகளையும் அனுப்புகின்றார். மனித வாழ்க்கைக்கு தரப்பட்டுள்ள இந்த விசேஷ வசதிகள் அனைத்தையும் நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த உன்னத லோகத்தை ஒருவர் அடைவாராயின், அவர் வேள்விகள், தவங்கள், யோக தியானம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியக் தேவையில்லை. அந்த லோகத்தை ஒருவர் அடையாவிட்டால், அவர் புரியக்கூடியத் தவங்கள், வேள்விகள் அனைத்தும் வெறும் கால விரயமே ஆகும். மானிட வாழ்க்கையானது இவ்வாறு ஆன்மீக உலகத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை நமக்கு தருகிறது. ஆகவே இத்தகைய உன்னத நிலையை அடைவதற்காக மானிட வாழ்க்கையை எய்திய அனைவரையும் ஈடுபடுத்துவதே பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர்கள், அரசாங்கம் ஆகியோரது கடமையாகும். பூனைகளையும். நாய்களையும் போன்று உண்ணுதல், தூங்குதல், கலவி மற்றும் சச்சரவு புரிதல் முதலியவற்றை செய்வது நாகரிகமாகாது இந்த உன்னத அறிவை முழுமையாக பயன்படுத்தி மானிட வாழ்க்கையை கிருஷ்ண உணர்வுடன் வாழ்வதன் மூலம் நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு இருபத்து நான்கு மணிநேரமும் கிருஷ்ணரின் சிந்தனையில் மூழ்கியிருப்போமாயின், இறக்கும் தறுவாயில் உடனடியாக ஆன்மீக விண்வெளிக்கு உயர்த்தப்படுவோம்.

புருஷ ச பரா பார்த்த
பக்த்யா லபயஸ் து
யஸ்யாந்த-ஸ்தானி பூதானி
ஏன சர்வம் இதம் ததம்

“அனைவரையும் விட உயர்ந்தவரான புருஷோத்தமரான இறைவனை கலப்படமற்ற பக்தியின் மூலமே அடைய முடியும். அவர் தன்னுடைய லோகத்திலேயே வீற்றிருந்தபோதிலும், எங்கும் வியாபிக்கின்றார். அனைத்தும் அவருக்குள்ளே விளங்குகின்றன.” (பகவத்கீதை 8.22)

அந்த உன்னத லோகத்தை அடைவதற்கான விருப்பம் நமக்கு சற்றேனும் இருக்குமாயின், இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது போல், அதற்கேற்ற மார்க்கமான பக்தி மார்க்கத்தை மேற்கொள்ள வேண்டும். ‘பக்த்யா’ என்னும் பதம் பணிவன்புடன் இறைவனுக்குச் சேவை புரிவதைக் குறிக்கின்றது. ‘பக்தர்’ என்னும் சொல்லிற்கு மூலச் சொல்லான ‘பஜ்’ என்ற சொல் “சேவை” என்று பொருள்படும். எல்லாவித ஜட உலக பற்றுதல்களிலிருந்தும் விடுபட்டு நிற்பதே ‘பக்தி’ என நாரத பஞ்சராத்ர எனும் நூல் விவரிக்கின்றது. இந்த ஜட உலகிலே நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவித பற்றுதல்களிலிருந்தும் விடுபடுபவர் பக்தியை எய்துகிறார். சரீரத்தினாலேயே தூய ஆத்மாவிடம் பற்றுதல்கள் தோன்றுகின்றன. ஆனால் இந்த சரீரம் குலைந்து இன்னொரு சரீரத்திற்கு ஆத்மா மாறும் போது இத்தகைய பற்றுதல்களும் மாறுகின்றன. நாம் இந்த ஜட சக்தியினால் ஆன சரீரங்கள் அல்ல, சுத்தமான ஆத்மாக்கள் என்பதை உணரும் பொழுது பக்தி தோன்றுகிறது. ஜட சரீரம் நம்முடைய உண்மையான அடையாளம் அல்ல. கிருஷ்ணருக்கு தாசனாக, சேவகனாக இருப்பதே நம்முடைய உண்மையான அடையாளம் ஆகும். கிருஷ்ணருடைய சேவகன் என்ற இந்த உண்மையான அடையாள நிலையில் ஒருவர் தம்மை நிறுத்திக் கொண்டு இறைவனான ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை புரியும் பொழுதே பக்தனாகின்றார். ரிஷிகேண ரிஷிகேஷ சேவனம். ஜட உலக பற்றுதல்களிலிருந்து நமது புலன்கள் விடுவிக்கப்படும் பொழுதே, புலன்களுக்கு அதிபதியான ரிஷிகேஷர் அல்லது கிருஷ்ணருடைய சேவையிலே நமது புலன்களை ஈடுபடுத்துவோம்.

ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவர்கள் சுட்டிக் காட்டுவது போல நம்முடைய சேவை கிருஷ்ணருக்கு அனுகூலமானதாக அமைய வேண்டும். இவ்வுலகத்தில் பொதுவாக ஏதோ ஒரு லாபத்தைக் கருதியோ அல்லது ஏதாவது ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவோ தான் நாம் இறைவனுக்குச் சேவை புரிவதில் ஆவலாக இருக்கின்றோம். கடவுளிடம் ஒரு போதுமே செல்லாதவரைவிட, கடவுளிடம் குறைந்தபட்சம் இவ்வுலக ஆசைகளுக்காக செல்பவா சந்தேகமின்றி சிறந்தவரே. ஆயினும் இறைவனுடைய சேவையில் ஈடுபடும் போது நாம் ஜட உலக லாப நோக்கத்தை தவிர்க்க வேண்டும். கிருஷ்ணரை புரிந்து கொள்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். கிருஷ்ணர் அளவற்றவர். மேலும், அவரை முழுவதும் புரிந்துகொள்வது இயலாத காரியம் என்பது உண்மையே ஆயினும், நம்மால் புரிந்துக் கொள்ள முடிந்ததை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு இறைவனை புரிந்துக் கொள்வதற்காகவே பகவத் கீதை குறிப்பாக நமக்குத் தரப்பட்டிருக்கின்றது. இவ்வாறு சரியான முறையில் அறிவைப் பெற்று அவருக்கு விருப்பமான சேவையைச் செய்தால், நமது காரியங்களுக்கு ஏற்ப கிருஷ்ணர் திருப்தி அடைவார் என்பதை நாம் அறிய வேண்டும். கிருஷ்ண உணர்வு நிலை என்பது ஒரு மிக உயர்ந்த விஞ்ஞானமாகும். இதை விளக்குவதற்காக ஏராளமான நூல்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. அந்த பக்தி நிலையை அடைவதற்கு நாம் இந் நூல்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

‘புருஷ ச பர:’ ஆன்மீக விண்வெளியில் புருஷோத்தமராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தலைமை புருஷராக வீற்றிருக்கின்றார். அந்த ஆன்மீக விண்வெளியில் எண்ணற்ற சுயமாக பிரகாசிக்கும் உலகங்கள் உள்ளன. அவற்றின் ஒவ்வொன்றிலும், கிருஷ்ணருடைய வியாபகமாகக் கருதப்படும் அவதார புருஷர் ஒருவர் வாசம் புரிகின்றார். இவர்கள் அனைவரும் நான்கு கரங்களையும் எண்ணற்ற பெயர்களையும் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் உருவங்களுடன் உள்ளனர். அருவவகை அல்ல. இந்த புருஷ அவதாரங்கள் அனைவரையும் நாம் பக்தியின் மூலமே அணுக முடியும். சவால் விடுவதன் மூலமாகவோ, தத்துவ வாதங்களின் மூலமாகவோ, மனக் கற்பனைகளின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சிகளின் மூலமாகவோ இறைவனை நாம் அணுக முடியாது ஜட உலக ஆசைகள் மீது திசை திரும்பாத பக்தியின் மூலமாகவே இறைவனை அணுகமுடியும்.

இவ்வாறு புருஷோத்தமர் என நாம் விவரிக்கும் இறைவன் எப்படிப்பட்டவர்? ‘யஸ்யாந்த-ஸ்தானி பூதானி; ஏன சர்வம் இதம் ததம்’ உயிர் வாழும் ஜீவாத்மாக்கள் மற்றும் அசையா பொருட்கள், அனைத்தும் அவருக்குள்ளேயே வீற்றிருக்கின்றன. இருந்த போதிலும் அவரோ சிருஷ்டிக்கு அப்பாற்பட்டு, சிருஷ்டிகள் அனைத்திலும் வியாபிப்பவராகவும் இருக்கின்றார். இது எவ்வாறு? சூரியன் ஓரிடத்தில் இருந்த போதிலும், பிரபஞ்சம் முழுவதும் தன்னுடைய கதிர்களின் மூலம் வியாபித்திருப்பதைப போல் இறைவனும் விளங்குகின்றார். இறைவன் தன்னுடைய ‘தாம பரமம்’ என விவரிக்கப்படும் லோகத்தில் இருந்த போதிலும், அவருடைய சக்திகள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளன. சூரியனுக்கும், சூரியனுடைய வெளிச்சத்திற்கும் எவ்வாறு எந்தவித வித்தியாசமும் இல்லையோ, அதே மாதிரியாக இறைவனுக்கும், இறைவனுடைய சக்திகளுக்கும் எந்தவித வேற்றுமையும் இல்லை. நாம் பக்தி மார்க்கத்தில் தீவிரமாக முன்னேறும் பொழுது கிருஷ்ணரை எல்லா இடங்களிலும் காணலாம்.

ப்ரேமாஞ்சன-ச்சுரித-பக்தி-விலோசனேன
ஸந்த சதைவ ஹிர்தயேஷு விலோகந்தி

“இறைவனின்பால் பிரேமை என்னும் அஞ்சனத்தை கண்ணில் தடவி இறைவனைத் தங்களுடைய இதயங்களிலே தடையின்றி எப்போழுதும் தரிசிக்கின்ற சுத்த பக்தர்கள் வணங்கும் அந்த மூல புருஷரான இறைவன் கோவிந்தனை நான் துதிக்கின்றேன்.” (பிரம்ம சம்ஹிதை 5.38)

இறைவன்பால் முழுமையான பிரேமைக் கொண்டவர்கள் இறைவனை இடைவிடாது தம்முன் காண்கின்றனர். நேற்று இரவு கடவுளைப் பார்த்தோம், இன்று பகல் பார்க்க முடியவில்லை என்பதல்ல. கிருஷ்ண உணர்வு நிலை எய்தியவரின் முன் கிருஷ்ணர் எப்போழுதும் பிரசன்னமாகி இருக்கின்றார். அதன் காரணமாகவே அவர் கிருஷ்ணரை இடைவிடாது தரிசிக்கின்றார். ஆகவே, இறைவனைப் பார்க்க வேண்டுமாயின் அதற்கு ஏற்றவாறு நமது பார்வைச் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜடப் பொருட்களின் பிணைப்பின் காராணமாக ஜடப்புலன்கள் மறைக்கப்பட்டிருப்பதால், ஆன்மீகம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோம். ஆனால் இந்த அறியாமையை ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதின் மூலம் போக்கலாம். இது எங்ஙனம் சாத்தியம்? உறங்கும் ஒரு மனிதனை சப்தம் செய்வதின் மூலம் எழுப்பிவிடலாம். உறங்கும் போது ஒருவர் கிட்டத்தட்ட தன்னுடைய சுய உணர்வு நிலையை அறவே இழந்து இருக்கின்றார். அவரால் பார்க்க, நுகர, உணர முடியாது. ஆனால் கேட்கும் சக்தி மிக நுண்ணியமாகச் செயல்படுவதால், ஆழ்ந்து உறங்கும் ஒரு மனிதனை பலமாக கூப்பிடுவதன் மூலம் உறக்கத்திலிருந்து எழுப்பிவிடலாம். அதே மாதிரியாக, ஆன்மீக ஆத்மாக்களான நாம் அனைவரும் ஜட உலக பந்தம் எனும் உறக்கத்தில் தற்போது ஆழ்ந்து இருந்த போதிலும் ஆன்மீக ஒலி அதிர்வுகளை எழுப்பும் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே, ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம, ஹரே, ஹரே எனும் மஹா மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நம்மை நாமே எழுப்பிக் கொள்ளலாம். ஹரே கிருஷ்ண என்பது இறைவனையும், அவருடைய சக்திகளையும் விவரிக்கின்றது. ‘ஹரே’ என்ற பதம் சக்தியைக் குறிக்கின்றது. கிருஷ்ணர் புருஷோத்தமரான இறைவன். ஆகவே நாம் ‘ஹரே கிருஷ்ண’ என்று ஜபிக்கும்போது “ஓ இறைவனுடைய சக்தியே, ஓ இறைவனே தயவு செய்து என்னை, ஏற்றுக் கொள்வீர்களாக!” என்றே கூறுகிறோம். இறைவன் நம்மை ஏற்றுக் கொள்வதற்கு வேறு எந்த விதமான வழிபாடும் வேண்டியதில்லை. நமக்கு வேண்டிய அன்றாட தேவைகள் அனைத்தும் ஏற்கனவே, இறைவனால் தரப்பட்டிருப்பதால் நம்முடைய தினசரி உணவிற்காக இறைவனை தொழ வேண்டிய தேவை சந்தேகமின்றி இல்லை. எனவே ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் மூலம் நம்மை ஏற்றுக்கொள்ளுமாறு மட்டும் இறைவனிடம் துதிக்கின்றோம். இறைவனான ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபு அவர்களோ கீழ் கண்டவாறு துதித்தார்:

அயி நந்த தனுஜ கிங்கரம்
பதி தம் மாம் விஷமே பாவம் புதௌ
கிருபயா தவ பாத-பங்கஜ-
ஸ்தித-தூலீ-ஸத்ரிஸம்-விசிந்தய

“நந்த குமாரனே, நான் உம்முடைய நிரந்தர ஊழியன். அப்படி இருந்தபொழுதிலும் ஏதோ ஒரு வழியில் பிறப்பு, இறப்பு என்னும் இக் கடலிலே விழுந்து விட்டேன். ஆகவே தயவு செய்து பிறப்பு, இறப்பு என்னும் இக்கடலிலிருந்து என்னை மீட்டு உம்முடைய பாத கமலங்களில் ஓர் அணுவாக என்னை ஏற்பிராக.” (சிக்ஷாஷ்டகம் 5)

சமுத்திரத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு உயிர் தப்புவதற்கான ஒரே நம்பிக்கை யாராவது வந்து தன்னை மீட்பார்கள் என்பதே ஆகும். மூழ்கும் தறுவாயில் இருப்பவரை எவரேனும் ஒருவர் நீர் மட்டதிற்கு மேல் சிறிதேனும் எடுப்பாராயின், மூழ்கிக் கொண்டு இருப்பவர் உடனடியாக பெரும் நிம்மதியைப் பெறுகிறார். அதே மாதிரியாக பிறப்பு, இறப்பு என்னும் சமுத்திரத்தில் மூழ்கும் தறுவாயில் இருக்கும் நாம் கிருஷ்ண உணர்வு முறையினால் மீட்கப்பட்டால் உடனடியாக பெரும் நிம்மதியை அடைவோம்.

தற்சமயத்தில் புருஷோத்தமரான இறைவனுடைய ஆன்மீக நிலை, அவருடைய பெயரின் புனிதத்தன்மை, அவருடைய புகழ், லீலைகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளும் நிலையில் நாம் இல்லை இருந்த போதிலும், கிருஷ்ண உணர்வு நிலையில் நம்மை நாம் நிறுத்திக் கொள்வோமாயின், இறைவன் கொள்வார். சொந்த முயற்சிகளின் மூலம் இறைவனை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் நாம் இறைவனைப் பார்ப்பதற்கான தகுதியை பெற்று விட்டால் இறைவன் தன்னைத் தானே நமக்கு வெளிப்படுத்திக் கொள்வார்-அச்சமயத்தில்தான் இறைவனைப் பார்க்க முடியும். ‘என் முன் வந்து நடனமாடு’ என ஒருவரும் இறைவனுக்கு ஆணையிட முடியாது. மாறாக, கிருஷ்ணரே திருப்தியடைந்து நமக்கு காட்சி அளிக்கும் வகையில் நாம் அவருக்காக செயல்பட வேண்டும்.

தம்மைப் பற்றிய தகவல்களை பகவத் கீதையில் கிருஷ்ணரே நேரடியாகத் தருகின்றார். ஆகையால் பகவத் கீதையில் தரப்படும தகவல்களை சந்தேகிப்பதற்கு இடமே கிடையாது. அவர் என்ன கூறுகின்றார் என்பதை அனுபவித்து புரிந்துகொள்ள வேண்டும். களங்கமில்லாத ஆன்மீக நிலையிலிருந்து பேசப்பட்டுள்ளதால், பகவத் கீதையை புரிந்துகொள்ள எந்த விதமான விசேஷ தகுதிகளும் தேவை இல்லை. கிருஷ்ணருடைய புனிதப் பெயர்களை உச்சரிக்கும் எளிமையான இந்த மார்கத்தின் மூலம் நாம் யார், கடவுள் யார், ஜட உலகங்கள் மற்றும் ஆன்மீக உலகங்கள் என்பவை யாவை, நாம் ஏன் ஜட உலகத்தில் சிக்கியிருக்கின்றோம், எவ்வாறு ஜட உலகத்திலிருந்து விடுபட்டுச் செல்லாம் என எல்லா உண்மைகளையும் படிப்படியாக உணர்ந்துக் கொள்ளலாம். ஒரு பாதையில் நம்பிக்கை வைத்து செயல்படுவதும், அதன் காரணமாக விஷயங்களைப் புரிந்து கொள்வதும் நமக்கு பழக்கப்படட மார்க்கமே. ஒவ்வொரு தினமும் ஏதாவது ஒரு விஷயத்திலாவது பின்னர் புரிந்துக்கொள்வோம் என்று நாம் நம்பிக்கை வைக்கவே செய்கின்றோம். அமெரிக்கா செல்வதற்காக நாம் ஒரு விமான பயணச்சீட்டை வாங்குகின்றோம். அந்த பயணச்சீட்டை வாங்கியதன் காரணமாக நாம் அமெரிக்காவிற்கு விமானத்தில் செல்வோம் என்ற நம்பிக்கையைப பெறுகின்றோம். இந்த நம்பிக்கை இல்லாவிடில் பயணச சீட்டை வாங்கும் பொழுது நாம் ஏன் பணத்தைத் தருகின்றோம்? சாதாரணமாக எவருக்கும் நாம் பணத்தை அள்ளித் தருவது கிடையாது. நம்முடைய விமானப் பயணத்தைச் செய்து தரும் நிறுவனம் கொடுக்கும் பயணச சீட்டைப் பெறுகின்றோம். இத்தகைய நம்பிக்கை இல்லாவிடில் அன்றாட வாழ்க்கையில் நாம் ஓர் அடி கூட முன்னேற முடியாது. ஆகவே நம்பிக்கை என்பது இன்றியமையாததாகும். குருட்டு நம்பிக்கை வைக்கக் கூடாது என்பது உண்மையே. ஆனால் அதிகாரப்பூர்வமான விஷயங்களை நம்பிக்கையுடனே ஏற்க வேண்டும். பகவத் கீதையை, அதிகாரப்பூர்வமான வேத நூல் என்று இந்தியாவில் உள்ள அனைவரும் ஏற்று கொள்கின்றனர். இந்தியாவிற்கு அப்பாற்பட்ட தேசங்களில் கூட இதர மத வல்லுநர்கள், தத்துவஞானிகள் மற்றும் இதர மேதைகள் ஆகிய அனைவரும் பகவத் கீதை ஒரு மகத்தான புத்தகம் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆகவே. பகவத்கீதை அதிகாரப்பூர்வமான நூல் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. மிகப் பெரிய விஞ்ஞானியாக கருதப்பட்ட பேராசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட பகவத் கீதையை தவறாமல் படித்தார்.

பகவத் கீதையின் வாயிலாக, இறைவனுடைய சாம்ராஜ்யம் என அழைக்கப்படும் ஆன்மீக உலகம் ஒன்று இருக்கின்றது என்பதை நாம் ஏற்க வேண்டும். பிறப்பு, மூப்பு, இறப்பு, நோய் ஆகிய சிக்கல்களே கிடையாது என கூறப்படும் ஒரு தேசத்திற்கு நாம் அழைத்துச் செல்லபடுவோமாயின், நம்மில் எவர் தான் பேரானந்தத்தை அடையமாட்டார்? அத்தகைய இடம் ஒன்று இருக்கிறது என்று நமக்கு தெரிய வருமாயின், சந்தேகமின்றி அந்த இடத்திற்கு போவதற்கு, முடிந்த மட்டும், நாம் முனைந்து உழைப்போம். எவரும் மூப்பை அடைய விரும்புவதில்லை. எவரும் இறக்க விரும்புவதில்லை இத்தகைய பிணிகள் இல்லாத அவ்விடத்திற்குச் செல்வது சந்தேகமின்றி நம்முடைய ஒவ்வொருவரது விருப்பமாகவும் இருக்கும். இதை நாம் ஏன் விரும்புகின்றோம்? இவ்வாறு இறக்காது, நோயுராது இருப்பது நமது அடிப்படை உரிமையாகும். எனவே, இதை நாம் நாடுகின்றோம். நித்தியத்துவம், ஆனந்தம், பூரண அறிவு ஆகியவையே நம்முடைய ஆன்மீக நிலையின் இயல்புகள் ஆகும். ஆனால் ஜட சரீரத்தின் பிணைப்புகளினால் நாம் நம்மையே மறந்திருக்கின்றோம். நம்முடைய சுய நிலையை மீண்டும் பெறுவதற்கான அரிய வாய்ப்பை பகவத் கீதை அளிக்கின்றது.

ஸ்ரீ சங்கராச்சாரியாரைப் பின்பற்றுபவர்களும் மற்றும் புத்த சமயத்தினரும் ஆன்மீக உலகம் உருவமற்றது என்று கூறுகின்றனர். ஆனால், பகவத் கீதையோ இம்மாதிரியான ஏமாற்றத்தை நமக்கு தரவில்லை. “இறைவன் உருவமற்றவர்” என்ற இந்த தத்துவம் நாத்திகர்களை உருவாக்குகிறது. நாம் அனைவரும் ஆன்மீக நபர்களே. சந்தேகமின்றி அனந்தத்தை விரும்பும் இயல்பைக் கொண்டிருக்கின்றோம். எனவே வாழ்க்கையின் எதிர்காலம் சூன்யம் என்ற நினைப்பு, நம்மை உடனடியாக இவ்வுலக சுகங்களைப் பெறுவதில் ஈடுபடுத்துகின்றது. இவ்வாறாக அருவவாதிகள் சூன்யவாதத்தை விளக்க முயற்சி செய்யும் அதே சமயத்தில், முடிந்த மட்டும் இந்த ஜட உலக வாழ்க்கையை அனுபவிப்பதில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆன்மீக ஆகாயம் ஏதும் கிடையாது.

பிரம்ம-பூத-பிரசன்னாத்மா
ந ஸோசதி-ந-காங்ஷதி
சம ஸர்வேஷு பூதேஷு
மத் பக்திம் லபதே பராம்

“இவ்வாறு ஆன்மீக தளத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொள்பவர் தாமதமின்றி பரப்பிரம்மனை உணர்ந்துக் கொள்கின்றார். அப்படிப்பட்டவர் எந்த பொருளின் மீதும் நாட்டமோ, அதைப் பெறாத போது வருத்தமோ கொள்வதில்லை. எல்லா ஜீவ ராசிகளையும் சமமான பாவத்துடன் நோக்குகின்றனர். அத்தகைய உயரிய நிலையில் அவர் எனக்கு பரிசுத்தமான, பக்தி கலந்து சேவையைச் செய்யும் வாய்ப்பை பெறுகிறார்.” ( பகவத்கீதை 18.54)

பக்தி மார்கத்தில் முன்னேறி கிருஷ்ணருக்குச் சேவை புரிவதால் கிட்டும் உன்னத சுவையை ரசிப்பவர், வேறு எந்த முயற்சியுமின்றி ஜட உலக ஆசைகளிலிருந்து விடுபடுகின்றார். கிருஷ்ணரிடம் பூரண திருப்தியைப் பெறுவதே பக்தியில் ஆழ்ந்து இருப்பவரின் சின்னமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − two =

Most Popular