புத்திர தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

59

புத்திர தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற ஊரில் உள்ள கோயில் தலையாட்டி விநாயகர் கோயில். இங்கு காவல் கணபதியாக தலையாட்டி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆண்டுதோறும் வரும் விநாயகர் சதுர்த்தி நாளன்று இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இத்தலத்திலுள்ள விநாயகர் தலையை ஆட்டும் விதமாக இடதுபக்கம் தலையை சாய்த்தபடி உள்ளார். பழங்காலத்தில் இந்தப் பகுதியில் வசிஸ்ட நதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என்று பல நதிகள் இருந்தன. இதனால், ஆற்றூர் என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டது. நாளடைவில் ஆத்தூர் என்று மருவியது. இவரது கோயிலுக்கு அருகில் சிவன், காயநிர்மாலேஸ்வரராக அருள் பாலிக்கிறார்.

திருமண தோஷம் நீங்கவும், புத்திர தோஷம் நீங்கவும், கிரக தோஷம் நீங்கவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்யலாம். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் விநாயகருக்கு புது வஸ்திரம் சாற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்கிறார்கள்.

புதிய செயல் செய்வதற்கு முன்னதாக தலையாட்டி விநாயகரிடம் வேண்டிக் கொண்டால் அந்த செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை. சிவதல யாத்திரைக்கு சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அந்த இடங்களில் எல்லாம் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு ஆத்மார்த்தமாக வணங்கி சிவன் அருள் பெற்றார்.

வசிஷ்ட முனிவர் இத்தலத்தில் தவம் செய்த போது திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போன்று சிவதரிசனம் பெற வேண்டும் என்று விரும்பினார். எனவே அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் சிவன் ஜோதி வடிவாகவே அமர்ந்தார்.

காலப்போக்கில் இந்த லிங்கமானது மண்ணில் புதையும் நிலை உண்டானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதியை கெட்டி முதலி எனும் குறுநில மன்னன் ஆட்சி செய்தான். அவன் தினந்தோறும் சிவனை வணங்கிய பிறகு தான் எந்த வேலையாக இருந்தாலும் அதனை செய்வான். ஒருநாள் அவனது கனவில் சிவன் தோன்றினார். அவர் பல ஆண்டுகளாக தான் இந்தப் பகுதியில் புதைந்து கிடப்பதாகவும், தன்னை தோண்டி எடுத்து தனக்கு கோயில் கட்டும்படியும் கூறினார்.

அதன்படி மன்னன், இந்த இடத்தில் மண்ணை தோண்டினான். அப்போது லிங்கத்தையும் அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான். அப்படி மன்னன் கோயில் கட்டுவதற்கு முன்னர், இத்தலத்தில் உள்ள தலையாட்டி விநாயகரிடம் உத்தரவு கேட்ட பிறகே தனது பணியை தொடங்கினான். இவரே கோயில் திருப்பணிக்கு பாதுகாவலாரகவும் இருந்தார்.

கோயில் வேலைகள் முடிந்த பிறகு மன்னன் இவரிடம் வந்து பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா? என்று கேட்டான்.         அதற்கு அவர் நன்றாக கட்டியிருக்கிறாய் என்று கூறும்படியாக தனது தலையை ஆட்டினாராம். ஆகையால் இவருக்கு தலையாட்டி பிள்ளையார் என்று பெயர் வந்தது.