ராமானுஜரை எதிர்கொண்டழைத்து, பிரசாதம் வழங்கிய திருவேங்கடவர்!!!

132

ராமானுஜர் தம் இரண்டாம் திருமலை விஜயத்தின் போது, மலைமீது நடந்து வந்த களைப்பில், ஓரிடத்தில் (முழங்கால் முடிச்சுக்குப் பக்கத்தில், தம் முதல் விஜயத்தின் போது, பெரிய திருமலை நம்பிகள் அவரை எதிர்கொண்டழைத்த இடத்தில்) அமர்ந்து ஓய்வெடுத்தார்.

அவருக்கும், உடன் வந்த சீடர்களுக்கும் பசியும் கூட. அப்பொழுது அங்கு ஒரு இள வயது பிரம்மசாரி வந்து அவர்களுக்கு ததியன்னமும்,(தயிர்சாதம்) மாம்பழமும் திருவேங்கடவரின் பிரசாதம் என்று கொடுத்தான்.

ஶ்ரீவைஷ்ணவர்கள் வெளியில் யாரிடத்திலும் எதுவும் சாப்பிடமாட்டார்கள். எனவே அவனிடம் “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்” என்று உடையவரின் சீடர்கள் கேட்க

“அடியேன் பெயர் மதுரகவிதாஸன்.
அனந்தாழ்வானின் அனந்தாணபிள்ளை சீடன்; திருமலையிலிருந்து வருகிறேன்”
என்றான்.

உடையவர் அவனிடம் ஆசார்யன் தனியனைக் கூறுமாறு கேட்க

“அகிலாத்ம குணாவாஸம், அஜ்ஞாத திமிராபகம், ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்”

“நற்குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிய இருளை அகற்றுபவரும், அடியவர்களுக்கு உயர்ந்த தஞ்சமானவரான் அனந்தாழ்வானை வணங்குகிறேன்” என்று சொன்னான்.”

தனியனில் ஆசார்யரின், ஆசார்யரைப் போற்றியும் குறிப்பு இருக்க வேண்டும். இந்தத் தனியனில் அனந்தாழவானின் ஆசார்யரான் ராமானுஜரைப் பற்றி ஒன்றும் இல்லையே” என்று வினவ,

சுதாரித்துக் கொண்ட பிரம்மச்சாரி, இன்னொரு தனியனும் உள்ளது என்று கூறி

“ஶ்ரீமத் ராமானுஜாசார்ய, ஶ்ரீ பாதாம்
போருஹத்வயம், ஸ்துத்தமாங்க ஸந்தார்யம், அனந்தார்யம் அஹம் பஜே”

“ஶ்ரீமத் ராமானுஜருடைய திருவடித் தாமரைக்கு இணயானவரும், அதனால் நல்லோர்களால் சென்னிக்கு அணியாகத் தரிக்கப்படுமவருமான அனந்தாழ்வானைச் சேவிக்கிறேன்”, என்று அந்தத் தனியனச் சொன்னான்.

அதன் பிறகே அவர்கள் பிரசாதம் எடுத்துக் கொண்டனர்.. அந்த பிரம்மசாரி அதன் பிறகு அங்கிருந்து சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்துப் புறப்பட்ட உடையவரும் சீடர்களும் திருமலை அடைந்து அனந்தாழ்வானிடம் சீடன் மூலம் கொடுத்தனுப்பிய பிரசாதம் போக்யமாக இருந்தது என்றனர்.

அனந்தாழ்வான், “அடியேன் யாரையும் அனுப்பவில்லையே. பிரசாதமும் கொடுக்க வில்லையே !”என்று ஆச்சர்யப் பட்டார்.

அவர்கள் சீடனின் பெயரையும், அவன் சொன்ன தனியனையும் கூற, அப்படி ஒரு சீடன் தமக்கு இல்லையென்றும், தனியனைக் கேள்விப்பட்டதே இல்லை என்றும் கூறினார்.

அவர்கள் அனைவருக்கும் அப்போது தான் புரிந்தது திருவேங்கடவரே நேரில் சென்று தமக்கு நைவேத்யம் செய்த பிரசாதங்களை ராமானுஜருக்கு கொடுத்தார் என்பது.

அது மட்டும்ல்லாமல் ராமானுஜரையும், அவரது அத்யந்த சீடர் அனந்தாழ்வானையும் போற்றித் தனியன் பாடியதிலும் திருவேங்கடவரின் அளவற்ற கருணையையும், அன்பையும் எண்ணிப் பரவசமடைந்தனர்.

ஏற்கனவே மலையப்பனுக்கு சங்காழி அளித்ததால் ராமானுஜரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார் பெருமாள். இப்பொழுது அனந்தாழவானுக்கு தனியன் பாடி, அவரையும் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார் திருமலையப்பன்.

ஏற்கனவே
“ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்” தனியன் அவதார நாள் பதிவில், எப்படி ஶ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மணவாள மாமுனிகள் பேரில் தனியன் பாடி அவரை ஆசார்யனாக் ஏற்றுக் கொண்டார் என்பதையும், அனைத்து திவ்ய தேசங்களிலும் அந்தத் தனியன் பாட வேண்டும் என்று நம்பெருமாள் நியமனம் செய்ததையும் அறிவோம்.

அங்கு நம்பெருமாள் பாடியதுக்கு முன்னோடியாக, ஶ்ரீனிவாசப் பெருமாள் திருமலையில் பாடிவிட்டார்.

திருமலையில் மட்டும் இரண்டு தனியன்களும் -பொதுத் தனியனான “ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்” மற்றும் அனந்தாழ்வான் மீது திருவேங்கடவர் பாடிய தனியனும்…. முன்னும், பின்னும் சேவிக்கப் படுகின்றன!!

மாம்பழ ராமானுஜர் !!! வழியில் திருவேங்கடவர் பிர்சாதமாகக் கொடுத்த மாம்பழத்தைப் புசித்த ராமானுஜர் கொட்டையை அங்கே எறிந்து விட்டார்.

அங்கு ஒரு மாஞ்செடி முளைத்து, மாமரமாகி விட்டது, அதற்குப் பக்கத்தில் இந்த வைபவத்தின் நினைவாகவும், முதல் விஜயத்தில் பெரிய திருமலை நம்பிகள், ராமானுஜரை எதிர்கொண்டழைத்ததின் நினவாகவும், பிற்காலத்தில் ராமானுஜருக்கு அங்கு (நடைபாதையில் படி எண் 3260க்கு அருகில்) ஒரு சந்நிதி அமைக்கப்பட்டது.

“தோவ பாஷ்யகாரர் (ஶ்ரீ பாஷ்யத்தை இயற்றிய ராமானுஜருக்கு கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியே கொடுத்த பட்டம்) சந்நிதி” என்று அழைக்கப் படுகிறது.

பிற்காலத்தில் திருமலைக்கு எழுந்தருளிய ராமானுஜரின் மறு அவதாரமான ஸ்வாமி மணவாள மாமுனிகள், மாமரக் கோவில் ராமானுஜரைச் சேவித்து “மாம்பழ ராமானுஜர்” என்று கொண்டாடினார்.

இனிமேல் திருமலை செல்லும் போது “மாம்பழ ராமானுஜரை”யும் சேவித்து வாருங்கள்.

“ஆச்சார்யன் திருவடிகளே சரணம்”