Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalரத சப்தமி ஸ்பெஷல் ! 1.2.20 !

ரத சப்தமி ஸ்பெஷல் ! 1.2.20 !

தை மாதம் சுக்லபட்ச சப்தமியன்று சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கும் காலமான உத்தராயண காலம் தை மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் வளர்பிறை 7-ம் நாள் சப்தமி திதியன்றுதான் இது தொடங்குகிறது. அன்றைய நாளுக்கு ரதசப்தமி என்று பெயர். அன்று சூரியனுடைய பல நாமங்களில் ஒன்றின் பொருளையாவது நன்கு உணர்ந்து ஜபித்து அவரை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டுவதுடன் வாழ்வின் இறுதியில் சூரிய லோகத்தையும் அடையலாம். நாம் ஆண்டுதோறும் பற்பல விரதங்களைக் கடைப்பிடிக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் ரதசப்தமி விரதம்.இந்த நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி விழா நடைபெறும். இது சூரியஜெயந்தி விழாவாகவும் அழைக்கப்படுகிறது.

ஒரு சக்கரம், ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு சூரியனுக்கு அளித்தார். இதன் சாரதி அருணன். இவன் காசிப முனிவரின் மனைவி விரதையின் மகன். சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்றும்; இவற்றையே தினமணி, கத்யை, லோக பந்து, சுரோத்தமை, தாமநிதி, பத்மினி, ஹரி என்ற பெயர்களாலும் அழைப்பர்.

ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப் பேறு, நீண்ட ஆயுள், புண்ணியம், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, சொத்து (நிலம்), தானியம் முதலியவற்றைத் தரக் கூடிய விரதம் இது. மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும்.

ஒரு முறை, ஜோதி வடிவமான ஈஸ்வரன், தான் ஒருவன் மட்டும் சகல உலகங்களுக்கும் பெரிய சுடராகப் பிரகாசிப்பது போதாது என எண்ணினார். உடனே மற்றொரு சுடரை உண்டாக்கினார். அதுதான் சூரியன்.
அப்போது சூரிய மண்டலம் மிகப் பெரிதாக இருந்து, உலகத்துக்கு சுகத்தையும் வெளிச்சத்தையும் தந்தது. ஏராளமான ரிஷிகளும் தேவர்களும் அதிலேயே வசித்து, சூரிய பகவானைத் துதித்து வந்தார்கள்.
யுகங்கள் பல கழிந்தன. திடீரென்று சூரியனின் ஒளி குறைந்தது. தேவர்கள் துயரத்தில் ஆழ்ந்தார்கள். பிரம்மதேவரிடம் போய், ‘‘நான்முகக் கடவுளே! சூரியன் ஒளி மங்கிப் போய் விட் டான். அவன் மறுபடியும் ஒளிபெற வேண்டும். அருள் செய்யுங்கள்!’’ என வேண்டினர்.

பிரம்மதேவர், இந்திரன் முதலானோர் ஆலோசித்தார்கள். ‘விஸ்வ கர்மாவின் சாணை பிடிக்கும் இயந்திரத்தில் இந்தச் சூரியனைக் கடைந்தால், முன்போல் சூரியன் ஒளி பெற்று விளங்குவான்’ என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி செய்ததும் சூரியன் பழையபடியே ஒளி பெற்று விளங்கினான்.
சூரியனைக் கடைந்த அந்த நாளே ‘ரத சப்தமி’.

அதே நாளில் மஹாவிஷ்ணு ஒரு சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை சூரியனுக்குக் கொடுத்தார்.
உண்மையிலேயே சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத்தைத் தொடங்குவது இந்த நாளில் தான். இருள் கூட்டி மழை பெய்த மாரிக்காலம் முடிந்து, சூரியன் இப்படி ‘பளிச்’சென்று வெளிப்படுவதையே முன்னோர்கள் நமக்குக் கதையாகத் தந்தார்கள்.

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண்டாடப்படுகிறது.
ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை சப்தமி திதி – இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத்தையும் பூஜையையும் செய்ய வேண்டும்.

ரத சப்தமியன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண் ணெய் வார்த்து தீபம் ஏற்ற வேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தத் தீபத்தை கங்கை-காவிரி முதலான புண்ணிய நதிகளில் விட வேண்டும். இதன் பிறகு பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் முதலானவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகிப் போகும்.

ரத சப்தமி அன்று குளிக்கும் முறை:
ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, மூடிய இரு கண்களில் கண் ஒன்றுக்கு ஒன்று வீதம் இரண்டு, அதுபோல தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
பெற்றோர் இல்லாதவர்கள் மேற் சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்து வைத்து நீராட வேண்டும்.ரத சப்தமி ஆயிரம் சூரிய கிரகணங்களுக்குச் சமமானதுரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல்.

பொங்கல் வைத்து அதை சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது பலரது வழக்கம்.

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆராக்கியமும் அளிக்கும். சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும். நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட ரத சப்தமி தினத்தன்று சூரிய பகவானை வழிபடுவோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 9 =

Most Popular