16 செல்வங்களையும் பெற்றுத்தரும் சஷ்டி விரதம்!
சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிப்பது சஷ்டி. இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.
அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியைச் சுக்கில பட்ச சஷ்டி அல்லது வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி கிருஷ்ண பட்ச சஷ்டி அல்லது தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி எழுந்தது. நாளடைவில் இந்த பழமொழி மாறிவிட்டது.
திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும். சஷ்டி திதியில் வேலைக்கு சேருதல், வீடு, வாகனம், வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.
பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக`முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் தினந்தோறும் சொல்லி வந்தால் கந்த புராணத்தையும் சொல்லி வந்த பலன் கிடைக்கும்.
மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். சஷ்டி விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும். இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம். சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.
சஷ்டியில் விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற்று வாழ்வில் அனைத்து செல்வ வளமும் பெறலாம். ஓம் சரவண பவாய ஓம்…
