கேட்டதெல்லாம் கொடுக்கும் ஈசன்!
நாகப்பட்டினம் மாவட்டம் திருவைகல் என்ற ஊரில் உள்ள கோயில் வைகல்நாதர் கோயில். இங்கு வைகல்நாதரே (செண்பகாரண்யேஸ்வரர்) மூலவராக காட்சி தருகிறார். கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி) அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இந்தக் கோயிலின் தல விருட்சம் செண்பகம்.
ஆண்டு தோறும் மாசி சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் மட்டுமின்றி சிவபெருமானுக்குரிய அனைத்து திருவிழாவும் இந்தக் கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலில் எவர் ஒருவர் மனதார பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு இறைவன் கேட்டதெல்லாம் கொடுப்பாராம்.
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி அளிக்கின்றனர். கோச்செங்கண்ணன் கட்டிய மாடக் கோயிலில் இதுவும் ஒன்று. வைகல் என்ற ஊரில் கட்டப்பட்ட மாடக் கோயிலாக விளங்குவதால், வைகல் மாடக் கோயில் என்று ஆனது. இந்த ஊரில் சிவனுக்குரிய 3 கண்ணைப் போன்று 3 கோயில் உள்ளது.
வலது கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடது கண்ணாக பெரியநாயகி சமேத பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொலம்பியல் கோதை உடனுறை வைகல்நாதர் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அனைத்தும் பிரம்மா, விஷ்ணு, லட்சுமி அகத்தியர் ஆகியோரை வழிபட்ட தலமாகும்.
தனது குட்டியை தேடி அலைந்த யானையானது, தனது தந்தத்தைக் கொண்டு இங்கிருந்த ஈசல் புற்றை குத்தியதோடு காலால் மிதித்து அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈசல் கூட்டமானது, தனது புற்றினை அழித்த யானையின் உடலை கடித்து கொன்றன. இதையடுத்து, தங்களது தவறை உணர்ந்த யானைக் குட்டியும், ஈசலும் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
முன்னொரு காலத்தில் பூமி தேவி, தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள். பூமிதேவியின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக பெருமாள் மீது மகாலட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. ஆகையால், லட்சுமி தேவி செண்பகவனம் என்ற இத்தலத்திற்கு வந்து கடும் தவம் புரிந்தாள்.
இதனால், பெருமாளும், பூமி தேவியும் காணாமல் போன மகாலட்சுமியை தேடி இத்தலத்திற்கு வந்து எம்பெருமானை வழிபட்டனர். பிரம்மனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டார். சிவபெருமானின் திருவருளால், பெருமாள் லட்சுமி, பூமி தேவி ஆகிய இருவரையும் மனைவியாக பெற்றார்.
