தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் சிவன்!
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் என்ற ஊரில் உள்ள கோயில் கனககிரீசுவரர். இங்கு கனககிரீசுவரர் மூலவராகவும் பெரியநாயகி அம்மன் தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை நடராஜர் அபிஷேகம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீப திருவிழா, மாசி மகா சிவராத்திரி ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இவை தவிர, பிரதோஷம், தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி ஆகிய நாட்களிலும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் செய்யப்படும்.
இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள் உள்ளது. இந்தக் கோயில் 500 அடி உயரத்தில் 365 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. எல்லா நாளும் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு 365 எண்ணிக்கையில் கோயில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் 3 நிலை ராஜ கோபுரம் கொண்டுள்ளது. நந்தி, பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தமாதர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரர் அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் விசாலாட்சி அம்மன் சன்னதியும் உள்ளது. கீழே உள்ள பெரிய நாயகி அம்மன் தனி சன்னதியில் காட்சி தருகிறாள். மன அமைதி கிடைக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், மனக் கஷ்டம் நீங்கவும், திருமண வரன் அமையவும் இத்தலத்து இறைவனை வழிபடலாம். அதுமட்டுமின்றி வேலை வாய்ப்பு கிடைக்க, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றிற்காக இறைவனை வழிபாடு செய்யலாம்.
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பொங்கல் படைத்தல், மொட்டை அடித்தல், கல்யாண மாலை சாற்றுதல் ஆகியவற்றை நிவர்த்திக் கடன்களாக செலுத்துகின்றனர். அதோடு, சுவாமி புது வஸ்திரம் சாற்றியும், அம்பாளுக்கு சேலை சாற்றியும் பால், தயிர், இளநீர், பன்னீர், எண்ணெய் அபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அம்பாள் கோயிலுக்கு பின்புறம் 500 அடி உயரத்தில் 365 படிகளைக் கொண்ட கனகசாலம் அல்லது கனககிரி என்ற பெயரில் மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அப்படி எழுந்தருளியுள்ள இறைவன் கனககிரீசுவரர் அல்லது பொன்மலைநாதர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.
கனகசாலம் என்ற மலை உச்சியில் வேடன் ஒருவன் கிழங்கு எடுப்பதற்காக இரும்பு கம்பியைக் கொண்டு தோண்டியுள்ளான். அப்போது அவன் தோண்டிய இடத்திலிருந்து ரத்தம் வெளிப்பட்டுள்ளது. அதனை மேலும், தோண்ட சிவலிங்கம் தென்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிவலிங்கத்திற்கு மக்கள் அபிஷேகம் செய்து வந்தனர். இரும்புக் கம்பியால் தோண்டிய போது காயம் ஏற்பட்டதால வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
இன்றும், அந்தப் பழக்கம் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் அளவில் சிறியதாக இருப்பதால் அருகிலேயே காசி விஸ்வநாதர் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆதலால் தான் இந்தக் கோயிலில் கருவறையில் 2 லிங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சியில் காமாட்சி தனியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவது போன்று இந்தக் கோயிலிலும் அன்னை ஆதிசக்தி தனி கோயிலில் எழுந்தருளி அருளாசி புரிகிறாள்.
அப்படி அருளாசி புரியும் அன்னையின் திருநாமம் பெரிய நாச்சியார் என்றும், பெரிய நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். 7 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவி இங்கு தவமிருந்து ஈசனிடம் சேர்ந்ததால் திருமணத் தடை உள்ளவர்கள் பௌர்ணமி நாட்களில் இங்கு கிரிவலம் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். அன்னையின் தவத்தால் பங்குனி உத்திரநாளன்று இறைவன் மலை உச்சியிலிருந்து கீழே இறங்கி வந்து திருமணம் செய்து கொண்டு செல்கிரார் என்பது இத்தலத்தில் சிறப்பு.
ஒரு நாள் இந்த வழியாக போருக்கு சென்ற மன்னன் இங்குள்ள ஈசனை வழிபட்டு போரில் வெற்றி பெற்றால் கோயில் கட்டுவதாக வேண்டுக் கொண்டான். போரில் வெற்றியும் கண்டான். சிலர் கஷ்ட காலங்களில் வேண்டுதல் வைப்பதும், வேண்டுதல் நிறைவேறிய பிறகு இறைவனை மறப்பதும் உண்டு. அந்த வகையில் மன்னனும் அவ்வாறே தனது வேண்டுதல் நிறைவேறிய பிறகு இறைவனை மறந்தான். அதன் பிறகு மீண்டும் ஒரு கஷ்டம் வர, இறைவனுக்கு கோயில் எழுப்பினான்.
ஆனால், வேடன் கண்டு எடுத்த சுயம்பு லிங்கம் காணாமல் போகவே, மன்னன் காசியிலிருந்து வேறொரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தான். கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்துள்ளது. கும்பாபிஷேகம் நடந்து முடியவுமே காணாமல் போன சுயம்பு லிங்கம் மீண்டும் கிடைத்தது. இறைவன் தன்னை மறந்தவர்களை தானும் மறந்துவிடுகிறார் என்பதற்கு மன்னனின் இந்த நிகழ்ச்சியே உதாரணம். காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு கனககிரீஸ்வரர் என்று பெயரிட்டு அதே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். இப்படியே ஒரே கருவறையில் 2 லிங்கங்கள் வந்தது.
பிருங்கி முனிவர், கயிலாய மலைக்கு சென்று அம்மையும் அப்பனும் ஒன்றாக வீற்றிருக்கும் போது சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இதனால் வருத்தமடைந்த அன்னை, ஈசனை நோக்கி அய்யனே தங்களில் சரி பாதியை எனக்கு வழங்கி அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். இதையடுத்து, இறைவனும், சக்தியை காஞ்சிபுரத்தில் காமாட்சி என்ற பெயரில் தவமிருந்து தன்னை பூஜித்து வர உரிய காலத்தில் மணந்து கொள்வேன். அதன் பின்னர் திருவருணைக்கு (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும் உமக்கு இடது பாகம் தந்து அருள் புரிவேன் என்றார்.
அதன்படியே அன்னை கச்சியம்பதி வந்து தவமிருந்து ஏகாம்பரநாதரை மணந்தார். பின்னர் திருவருணைக்கு செல்லும் போது வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரிநாதரை வணங்கி தவமிருந்தார். அதனால் தான் இந்த தலமானது தேவிகாபுரம் என்று பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு திருவருணைக்கு சென்று ஈசனிடம் இடது பாகம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
