Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalதிருமணத் தடை நீங்க சித்தர் வழிபாடு!

திருமணத் தடை நீங்க சித்தர் வழிபாடு!

திருமணத் தடை நீங்க சித்தர் வழிபாடு!

நெல்லையப்பர் கோயிலில் மூடியிருந்த ஆறுமுக நயினார் சன்னதி அமாவாசை சித்தரால் தான் திறந்து வைக்கப்பட்டது. குளத்தூர் ஜமீன்தார் தில்லை தாண்டவராயர் அழைத்து வந்த சித்தரால் தான் ஆறுமுக நயினார் சன்னதி திறக்கப்பட்டது.
நெல்லையில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயில் பகுதியில் ஒரு பெரிய அரண்மனை ஒன்றை கட்டி அதில் வாழ்ந்து வந்தவர் தான் குளத்தூர் ஜமீன்தார் தில்லை தாண்டவராயர். இப்போதும் கூட இவரது வாரிசுகள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. தில்லை தாண்டவராயர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.

தல யாத்திரை செல்லும் போது கோயில்களில் வழிபட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கைத் தடிகளை உருவாக்கி அதனை எடுத்துச் செல்வார். அவர் உருவாக்கிய கைதடியில் தலைப் பகுதியை திறந்தால், அதில், விநாயகர், லட்சுமி உள்ளிட்ட தெய்வங்கள் இருக்கும். மேலும், தாண்டவராயர் ஸ்நானம் செய்யும் இடத்தில் கைத்தடியை வைத்து பூஜை செய்து வணங்கி வந்தார். அவ்வப்போது காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படி ஒரு முறை அவர் காசி சென்ற போது தான் அமாவாசை சித்தரை சந்தித்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த அமாவாசை சித்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், துறவு வாழ்க்கை மேற்கொண்டார். கால் போன இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் வழிபாடு செய்து கடைசியாக காசியை வந்தடைந்தார்.
இவரைக் கண்ட தில்லை தாண்டவராயர், சித்தரை நெல்லைக்கு அழைத்து வந்தார். அமாவாசை சித்தர் நெல்லையில் வெட்ட வெளியில் வெயிலில் சுருண்டுக் கிடப்பாராம்.

இரவில் நிலா ஒளி விழும் விதத்தில் திறந்த மார்புடன் கட்டாந்தரையில் படுத்துக் கிடப்பாராம். இது ஒரு வகையானத் தியானம் என்று சொல்லப்படுகிறது.
அப்படி வெட்ட வெளியில் வெயிலிலும், கட்டாந்தரையிலும் படுத்துக் கிடந்த அமாவாசை சித்தை எல்லோரும் மதித்து வந்துள்ளனர். ஒவ்வொரு அமாவாசைக்கு மட்டுமே இவர் குளிப்பாராம். ஆகையால் தான் இவருக்கு ‘அமாவாசை சித்தர் எனப் பெயர்.

ஒரு நாள் தாண்டவராயரும், அமாவாசை சித்தரும் நெல்லையப்பர் கோயிலுக்கு சென்றனர். நெல்லையப்பரை வேண்டி பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது தான் ஆறுமுகநயினார் கோயில் பூட்டிக் கிடப்பதை சித்தரும், தாண்டவராயரும் கண்டு மனம் நொந்துள்ளனர். தாண்டவராயர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

அவரைக் கண்ட சித்தர் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சித்தர் எண்ணினார்.
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி கரையிலுள்ள கருப்பந்துறையில் நந்தவனம் ஒன்று இருந்தது. குவளை மலர் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்குமாம். இந்த குவளை பூக்கள் கருநீல நிறமாக காட்சி தரும். கருப்பு+பூ+துறை = கருப்பூந்துறை என்றானது. நாளடைவில் கருப்பந்துறை என்றானது.

இந்த கருப்பந்துறை நந்தவனத்திற்கு அமாவாசை சித்தர் வந்து செல்வது வழக்கம். அதற்கு முக்கிய காரணம், போகர் மாயா சித்தரும், வல்லநாட்டு சாது சிதம்பர சித்தரும் அமர்ந்திருப்பார்கள். அந்த இரு சித்தர்களும், அமாவாசை சித்தரிடம் எப்போதும் ஆன்மீக கருத்துக்கள் பற்றி தான் பேசுவார்களாம்.

அவர்களிடம் ஆறுமுக நயினார் சன்னதி திறப்பது குறித்து பேசுவதற்காக அமாவாசை சித்தர் நந்தவனத்திற்கு வந்துள்ளார். ஆறுமுகம் கொண்ட ஆறுமுகநயினார் முகத்தை 8 திசையில் எங்கிருந்து பார்த்தாலும் 6 முகத்தை காணலாம். அப்படி அதிசயமிக்க சுவாமி சன்னதியை சதிகாரர்கள் தங்களது சூழ்ச்சியால் மூடிவிட்டனர். அப்படி மூடப்பட்ட சன்னதியை திறக்கவே மற்ற இரு சித்தர்களுடன் அமாவாசை சித்தர் ஆலோசனை செய்துள்ளார்.

போகர் மாயா சித்தர் ஆசிரமத்தில் வைத்து ஸ்ரீசக்கரத்தை உருவாக்கினர். இச் சக்கரம் அன்னையின் அம்சம் கொண்டது. சக்கரம் இருக்கும் இடத்தில் எந்த வித தீயச் சக்தியும் ஒழிந்து போகும். குறிப்பிட்ட நாளில் ஸ்ரீசக்கரத்தை ஆறுமுகநயினார் சன்னிதியில் பிரதிஷ்டை செய்தார் அமாவாசை சித்தர்.

ஸ்ரீசக்கரத்திற்கு தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பிறகு சன்னதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆறுமுகநயினார் சன்னதிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது சன்னதியே கதி என்று அமாவாசை சித்தர் இருந்தார். அவரது வாக்குகள் பலித்தன. இதனால், நாள்தோறும் அவரைத் தேடி ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இது சிலருக்கு பிடிக்காமல் போகவே, கோயிலிருந்து அவரை வெளியேற்ற நினைத்தனர்.

இதனை உணர்ந்த அமாவாசை சித்தர் இனி நான் எங்கிருந்தால் என்ன? என்று கோயிலைவிட்டு கிளம்பிவிட்டார். கடை கடையாக அலைந்தார். அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வந்தார். சித்தன் போகே சிவன் போக்கு என்று இருந்தார். ஒரு சில நேரம் தாண்டராயர் வீட்டிற்கு வருவார். அவருடன் இணைந்து யாத்திரைக்கு செல்வார்.

கருப்பந்துறை ஆசிரமத்திலும் வந்து தவம் இருப்பார். அப்படி ஒரு நாள் போகர் மாயா சித்தரிடம் சென்று தனக்கு இங்கு இடம் தர வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை கோடு போட்டு காட்டினார். அதற்கு போகர் மாயா சித்தரும் சம்மதம் தெரிவித்தார். மகேந்திரகிரி மலைக்கு சென்ற போகர் மாயா சித்தர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தியானம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது மனதில் ஏதோ ஒரு சொல்ல, உடனே அங்கிருந்து புறப்பட்டார். இதே போன்று தான் வல்லநாட்டில் தியானம் செய்து கொண்டிருந்த சித்தருக்கும் மனதிற்குள் ஏதோ ஒன்று சொல்ல அவரும் நெல்லைக்கு புறப்பட்டார். அவர்களது இருவரது மனதில் தோன்றியது என்னவென்றால், அமாவாசை சித்தர் ஜீவ சமாதி அடையப் போகிறார் என்பது தான்.

அது போலவே அமாவாசை சித்தரும் ஜீவ சமாதி அடைந்தார். போகர் மாயா சித்தர் கொடுத்த இடத்தில் தான் அவர் ஜீவ சமாதி அடைந்துள்ளார். ஆறுமுகநயினார் சன்னதியை திறப்பதற்கு அவர்கள் பயன்படுத்தி ஸ்ரீ சக்கரத்தை அமாவாசை சித்தர் சமாதி மீது வல்லநாட்டு சித்தர், போகர் மாயா சித்தரும் பிரதிஷ்டை செய்தனர்.
சித்தர் ஜீவசமாதி அடைந்த இடம் சிறப்பு வாய்ந்த தாக கருதப்படும். அதுவும், இரு சித்தர்கள் இணைந்து அவருக்கு சமாதி வைத்திருக்கிறார்கள் என்று அது கூடுதல் சிறப்பு. அமாவாசை சித்தர் சமாதி மீது ஆறுமுகநயினாரின் சன்னதி திறக்க பயன்படுத்திய ஸ்ரீசக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது.

மகேந்திரகிரி மலையில் இவரது காலடி படாத இடமே இல்லை என்று சொல்லலாம். மனிதர்கள் செல்ல முடியாது. தேவர்கள் மட்டுமே வாழும் தேவ பூமியும் இந்த மலையில் உண்டு. அப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் மாயா சித்தர் தவம் செய்துள்ளார்.

இந்த மலையில் தியானம் செய்து ஒன்றும் சர்வசாதாரணமான விஷயம் கிடையாது. அந்த மலைக்கு செல்ல வேண்டும் என்றாலே 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். அது போலத்தான் வல்லநாடு சித்தரும், இவர் தனது உடலை 8 துண்டாக பிரித்து நவ கண்ட யோகம் செய்யக் கூடியவர்.

இவர் வெண்குஷ்டம் போன்றத் தீராத நோய்களைத் தீர்க்க வல்லவர். பொதிகை மலையில் வெள்ளை யானையை வரவழைத்து பக்தர்களுக்கு காட்டியவர். ஒருசமயம் சதுரகிரி மலையில் ஒற்றைக் கொம்பன் என்னும் மதம் பிடித்த யானையைத் தனது கண்ணசைவால் கட்டுக்குள் கொண்டு வந்தவர்.

இவரது சித்தர் பீடம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் உள்ளது. அங்குள்ளத் தியான மடத்தில் ஒற்றைக் கொம்பன் யானை சிரசு பத்திரமாக வைத்து விளக்கு போட்டு வணங்கப்பட்டு வருகிறது. இவர் பீடத்துக்கு வந்து சென்றாலே நமது முன்வினை, பாவம் எல்லாம் தொலைந்து விடும் என்பது ஐதீகம்.

நெல்லையிலிருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில், கருப்பந்துறையில் உள்ள நந்த வனத்தில் அமாவாசை சித்தரைத் தரிசனம் செய்யலாம். இங்கு வரும் பக்தர்களுக்கு புற்று நோய் உள்படத் தீராத நோய்கள் தீருகிறது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அமாவாசை சித்தரை வணங்குவதால் பில்லி சூனியம் நீங்கும். திருமணத் தடை அகலும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 8 =

Most Popular