குலசை முத்தாரம்மன் பற்றிய சில அரிய தகவல்கள்!
தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக் கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும். தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.
விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.
சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள். மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம் மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12-வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.
தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு 15 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.
முத்தாரம்மன் வரலாறு – நெல்லையில் இருந்து சுமார் 68 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினம். திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. குலசேகரப் பட்டினத்தில் பல கோவில்கள் அமைந்துள்ளன. என்றாலும் முத்தாரம்மன் கோவில் என்றால் தென் தமிழகத்தில் தெரியாத மக்களே இருக்கமாட்டார்கள்.
எனினும் குலசேகரப்பாண்டியன் ஆட்சி காலத்தில்தான் இக்கோவிலுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு ஏற்பட்டது. ஒருநாள், மன்னரின் கனவில் தோன்றிய அம்மன் இந்த சிறிய ஊரை உலகறியச் செய்யுமாறு பெரிய நகரமாக மாற்று என்று ஆணையிட்டாள். அவளின் கட்டளையை ஏற்று குலசேகரப் பாண்டியன் அம்பாளுக்கு கோவில் கட்டினான்.
பின்னர், அவளுக்குச் சிறப்பான பூஜைகளைச் செய்து வழிபடத் தொடங்கினான். இதனைப் பார்த்த மக்களும், இங்கு திரண்டு வந்து வழிபடலாயினர். இதனையடுத்து முத்தாரம்மனின் சக்தி அனைவருக்கும் தெரியவரவே இந்த ஊர் பெருமைமிக்கதாக விளங்கத் தொடங்கியது என்று சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன.
