சில செய்யக் கூடாத ஆன்மிக செயல்கள்!
பொதுவாக கோயிலுக்கு சென்றால் இது செய்ய வேண்டும், இது செய்யக் கூடாது என்ற வரைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை தான் சாஸ்திரமும் சொல்கிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், எள் தீபம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்ற வேண்டும். விநாயகருக்கு தான் சிதறுகாய் உடைக்க வேண்டும். மாறாக, விநாயகருக்கு போய் எள் தீபம் ஏற்றலாமா? சனீஸ்வரனுக்கு போய் சிதறுகாய் உடைக்கலாமா?
அப்படி கூடாதல்லவா! துர்க்கைக்கு எலுமிச்சை தீபம், சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம், பைரவருக்கு மிளகு தீபம் ஏற்ற வேண்டும். விநாயகருக்கு சிதறுகாய் உடைக்க வேண்டும். அதுவும், 11, 21, 51, 101 என்ற எண்ணிக்கையில் உடைக்கலாம். சுவாமிக்கு சாற்றப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாதத்திற்கு பயன்படுத்தாமல், சாறு பிழிந்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். வேண்டுதல் நிறைவேறிய பிறகு நிவர்த்திக்கடனை உடனே செய்ய வேண்டும்.
மாவிளக்கு சுமங்கலி பூஜையின் போது வீட்டிலும், நேர்த்திக்கடனாக செலுத்தும் போது கோயிலிலும் ஏற்ற வேண்டும்.
சிவன் – வில்வம், பெருமாள் – துளசி, விநாயகர் – அருகம்புல், முருகன் – சிவப்புநிற பூக்கள் சிறப்பானவை. பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்யலாம். பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக் கூடாது. காலை ஆட்டக் கூடாது. மலலாந்து படுக்கக் கூடாது.
விளக்கு வைத்த பின் வளையல்களைக் கழற்றக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக் கூடாது. கன்னிப் பெண்கள் சாந்துப் பொட்டையே வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள்தான் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் தவறாமல் பின்பற்றிட வேண்டும்.
கோயில்களில் செல்போன் பேசக் கூடாது. சத்தமாக யாரிடமும் பேசக் கூடாது. எப்போதும் இறைவனின் நினைப்பில் தான் இருக்க வேண்டும். கோயிலில் பிரசாதம் கொடுத்தால் தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். முதலில் இறைவன் பெயரை சொல்லி விட்டு தான் பிரசாதத்தை சாப்பிட வேண்டும்.
