ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரசுந்தர்யை நம:
ஶ்ரீ குருப்யோ நம:
ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் – பூர்வபாகம்
பூர்வ பாகம் 51 ஸ்லோகங்களால் ஆனது. அதன் ஸாராம்ஶம் :-
அகஸ்த்யர் கூறியது :-
ஶ்ரீ ஹயக்ரீவரே! ஶ்ரீ லலிதா தேவியின் அற்புதமான சரித்திரத்தைக் கூறியருளினீர். முதலில் அவதாரமும், பட்டாபிஷேகமும், பண்டாஸுர வதமும், பிறகு ஶ்ரீபுரத்தின் பெருமையும், பஞ்சதஸாக்ஷரீ மந்திரத்தின் மகிமையும் அதன் நியாஸங்களும் கூறப்பட்டன. அந்தர்யாகம், பஹிர்யாகம், மஹாயாகம் முதலியவை பூஜாகாண்டத்திலும், ஜபலக்ஷணம் புரஸ்சரண காண்டத்திலும், ஹோமம் செய்யும் முறை ஹோம காண்டத்திலும் விளக்கப்பட்டன. இரகசிய காண்டத்தில் ஶ்ரீசக்ரமும், ஶ்ரீவித்தையும், ஶ்ரீதேவியும், ஶ்ரீகுருவும் ஒன்றே என்ற தத்துவம் விளக்கப்பட்டது. ஸ்தோத்திர காண்டத்தில் பலவிதமான ஸ்துதிகளும் மந்த்ரிணீ தண்டினீ தேவிகளின் ஸஹஸ்ரநாமங்களும் கூறப்பட்டன. ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மட்டும் கூறப்படவில்லை. தயாநிதியே! அதை மறந்தீரா? அல்லது எனக்குக் கேட்கத் தகுதியில்லை என்று விடுத்தீரா? இச்சந்தேகத்தைத் தெளிவித்தருளப் ப்ரார்த்திக்கிறேன்.
ஹயக்ரீவர் கூறியதாவது :-
லோபாமுத்திரையின் பதியான அகஸ்த்யரே! அது அதிரகசியமானதால் கேட்காமல் கூறுவது ஸம்ப்ரதாயமன்று என்று கூறவில்லை. இப்போது நீர் பக்தியுடன் கேட்கிறீர்; ஆகையால் இனிக் கூறுகிறேன். பக்தனான ப்ரிய சிஷ்யனுக்கு ஆசாரியர் இரகசியத்தையும் கூறுவர். தேவியின் பக்தனாகவும், ஶ்ரீவித்யையை அறிந்து பரிசுத்தமான உபாஸகனாகவும் இருப்பவனுக்கே சொல்லத்தகும். புரங்களில் ஶ்ரீபுரம் போலும், ஶக்திகளில் ஶ்ரீலலிதை போலும், ஶ்ரீவித்யோபாஸகர்களில் பரமஶிவன் போலும், ஸஹஸ்ரநாமங்களில் ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மிகச்சிறப்பு வாய்ந்தது. ஶ்ரீமாதாவின் ப்ரீதிக்காக எப்போதும் இதைக் கீர்த்தனம் செய்ய வேண்டும். இந்த ஸஹஸ்ரநாமத்தால் ஶ்ரீ சக்ரத்தில் பில்வபத்திரத்தாலோ, தாமரைப் பூவாலோ, துளஸீ புஷ்ப மஞ்ஜரியாலோ அர்ச்சனை செய்தால் ஸிம்ஹாஸனேஶ்வரியான தேவி உடனே அருள் புரிவாள்.
ஶ்ரீசக்ரத்தைப் பூஜித்துப் பஞ்சதஸாக்ஷரீ மந்திரத்தை ஜபித்து தினந்தோறும் இதைப் பாராயணம் செய்ய வேண்டும். பூஜையும் ஜபமும் செய்யச் சக்தி இல்லாதவர்களும் இதைப் பாராயணம் செய்தால் ஸாங்க்யமாகப் பூஜையும் ஜபமும் செய்த முழுமையான பலனடைவர். மற்ற ஸ்தோத்ரங்களைச் சொல்லுவதால் சிறந்த பயன் உண்டு. ஆனால் ஸஹஸ்ரநாம பாராயணத்தைப் பயனைக் கருதாமல் நித்திய கர்மாவைப் போல் செய்ய வேண்டும்.
முன்னர் ஶ்ரீலலிதாதேவி பக்தர்களின் நன்மைநாடி வஶினீ முதலிய வாக்கு தேவதைகளையழைத்து “நீங்கள் என் கட்டளைப்படி என் தத்துவம் விளங்க என்னுடைய ஸஹஸ்ரநாமத்தைச் செய்யுங்கள். அதைக் கொண்டு என் பக்தர்கள் என்னைத் துதிப்பதால் எனக்குப் பரம ப்ரீதி ஏற்படப் போகின்றது” என்று கூறியருளினாள். அங்ஙனமே கட்டளையை ஏற்ற வாக்கு தேவதைகள் ‘ரஹஸ்ய-நாம-ஸஹஸ்ரம்’ என்று ப்ரசித்தி பெற்ற இச்சிறந்த ஸ்தோத்திரத்தை இயற்றினார்கள்.
எல்லா தேவதைகளும் சூழ ஶ்ரீலலிதாதேவி கொலுவிருக்கையில் வாக்கு தேவதைகள் இந்த ஸ்தோத்திரத்தால் தேவியைத் துதித்தனர். அப்போது தேவியானவள் தேவதைகள் அனைவரையும் நோக்கி, “ என் கட்டளையாலேயே இந்த ஒப்புயர்வற்ற ஸ்தோத்திரத்தை வாக்கு தேவிகள் செய்துள்ளார்கள். இதை நீங்கள் எப்போதும் என்னுடைய மகிழ்ச்சிக்காகப் படிப்பதுடன் என்னுடைய பக்தர்களிடமும் பரவும்படி செய்யுங்கள். பூஜையும் ஜபமும் செய்தாலும் செய்யாவிட்டாலும், இந்த ஸஹஸ்ரநாமத்தை எனது பரம ப்ரீதிக்காக எப்போதும் பாராயணம் செய்ய வேண்டும்” என்று ஆசி கூறினாள். ஆகையால் முனிஶ்ரேஷ்டரே! பக்தனால் ஏன் இது அவசியம் படிக்கப்பட வேண்டும் என்பது நிரூபிக்கப்பட்டது. இனி ஸஹஸ்ரநாமத்தைக் கூறுகிறேன். கேட்பீராக!
ந்யாஸம் என்பது பற்றி நாளை பார்க்கலாம்….
