நவக்கிரக தோஷம் நீக்கும் சூரியனார் கோயில்!

40

நவக்கிரக தோஷம் நீக்கும் சூரியனார் கோயில்!

திருமணக் கோலத்தில் சூரிய பகவான் சாந்த சொரூபம் கொண்டிருப்பார். சூரியனார் கோயில் எங்கு உள்ளது தெரியுமா? தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை என்னும் ஊரில் அருள்மிகு சூரியனார் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள ஆடுதுறை அருகே இக்கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இங்கு சூரியபகவான் இடது புறத்தில் உஷாதேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷா தேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார்.

இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாத நவகிரக நாயகர்கள் மட்டுமே அருள்பாலிக்கின்றனர். சூரியனுக்கு இந்தியாவில் இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில். தெற்கே இந்த சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

ரதசப்தமி உற்சவம், தை மாதம் 10 நாட்கள் திருவிழா இத்தலத்தின் மிக முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய நாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறுதோறும் வழிபடுகின்றனர். இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும் மற்றும் காரியத்தடைகள் விலகும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

சர்க்கரை பொங்கல் அபிஷேகம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திக்கடனாக கருதப்படுகிறது. அபிஷேக அர்ச்சனை, துலாபாரம், கோதுமை, வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள். அன்னதானம் செய்தல் தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளை முக்கிய நேர்த்திக்கடன்களாக செலுத்துகின்றனர்.