அதிசயங்கள் நிறைந்த கோயில்கள் – பகுதி 2!
சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள்.
அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.
உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா கோலாம்பூரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது.
புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் கோயில் மூடியே இருக்கும். அதுவும், நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே கோயிலில் பூஜை செய்யப்படும்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகிலுள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலுக்கு கருவறை பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த ஆவுடையார் லிங்கம் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் காசியிலுள்ள லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பலன் கிட்டும்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும் போது லிங்க பாணத்தை உற்று பார்த்தால் அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத் தான் தெரியும்.
திருக்கண்ணமங்கை தலத்திலுள்ள தாயார் சன்னதியில் 2 ஜன்னல்கள் உள்ளன. இதில், தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் சூரியன் வலது பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புறம் ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன என்று சொல்லப்படுகிறது. இன்று கூட இந்த அதிசயத்தைக் காணலாம்.
முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கோயில் புதுக்கோட்டை அருகிலுள்ள ஒற்றைக் கண்ணூர். இந்தக் கோயிலில் முருகனுக்கு வாகனமாக மயிலுக்குப் பதிலாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலதுபுறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசனம் செய்யலாம்.
