தொழுநோயை குணப்படுத்தும் தில்லையாடி திருத்தலம்!
ஸ்ரீ அகத்திய மகரிஷி தோல் வியாதியால் வாடும் கோலத்தை தில்லையாடி திருத்தலத்தில் காணலாம். பலருடைய கர்ம வினைகளை தம்முடைய உடலில் தாமே ஏற்றுக் கொள்வதால் இவ்வாறு குஷ்டம், கொப்புளம் போன்ற தோல் வியாதிகளை மகான்கள் ஏற்று மற்றவர்களுக்கு கருணை புரிகிறார்கள்.
தில்லையாடி திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய மகரிஷியை வணங்கி கோதுமை உணவுப் பண்டங்களை ஏழைகளுக்கு தானமளித்தலால் குஷ்டம் போன்ற கடுமையான தோல் வியாதிகளிலிருந்தும் சிக்கன் குனியா போன்ற காய்ச்சல் நோய்களிலிருந்தும் நிவாரணம் கிட்டும். வாகனங்கள் ஓட்டுநர்கள், உயர் கனரக தொழிலாளிகள், அணு மின் உலைகளில் பணிபுரிவோர் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுவதால் நற்பலன் பெறுவார்கள்.
ஸ்ரீஆபத்சகாய ஈஸ்வரன் என்ற பெயரில் பொலியும் ஈசன் பெயருக்கேற்றாற்போல் தன்னை வழிபடும் அடியார்களை எத்தகைய ஆபத்துகளிலிருந்தும் காக்கக் கூடியவர் என்பது உறுதி. ஒரு முறை இத்தல ஈசனை வணங்கச் சென்ற ஒரு அடியார் இங்குள்ள அண்டாவில் ஏதோ அசைவதைப் பார்த்து அருகில் சென்றபோது ஒரு அணில் அண்டாவில் குறைவாக இருந்த நீரில் விழுந்து வெளியே வர முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்து அந்த அணிலை எடுத்து வெளியே விட்டார்.
ஆனால் வெகுநேரம் நீரில் விழுந்து உயிருக்கு போராடிய களைப்பால் அந்த அணில் உயிரோடு அசையாமல் அந்த அண்டாவின் அருகிலேயே மயங்கிக் கிடந்து பின்னர் மெதுவாக அசைந்து வெளியேறியதாம். எனவே ஸ்ரீஆபத்சகாய ஈசனை நம்பிய சிற்றுயிருக்கும் அருள் சுரக்கும் என்பது அந்த அடியார் நேரில் கண்ட உண்மையாகும்.
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்!
அகத்திய முனிவர் பூசை செய்த அகத்தியலிங்கம் ஒரு சன்னதியில் உள்ளது.
தொடர்ந்து உட்பிரகாரத்தில் யோகநரசிம்மப்பெருமாள், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை ஆகியோர் உள்ளனர். வான்மீகி மகரிஷி இங்கு புற்று வடிவில் அமர்ந்து தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு ‘திருப்புத்தூர்’ என்று பெயர் வந்ததாகவும் ஆலய வரலாறு கூறுகின்றது.
காலப்போக்கில் இப்பெயர் மருவி தற்போது திருப்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு உறைந்திருக்கும் இறைவன் புத்தூரீசர் என்றும் திருத்தளிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். அன்னை சிவகாமி அம்பாளாக, சௌந்தரநாயகியாக அருள் பாலிக்கிறார். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத்திருத்தலத்தில் உமாதேவியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றுள்ளனர். இந்திரனின் மகன் ஜயந்தன் வந்து வழிபட்ட பெருமையும் இத்தலத்துக்கு உண்டு.
ஆலய வரலாறு:
திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள அன்னை ஸ்ரீ மகாலட்சுமியே முக்கியக் காரணம். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினார். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும்.
அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் ‘திருத்தளிநாதர்’ ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தல புராணம் கூறுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
