Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalஅட்டவீரட்ட தலம் என்ற சிறப்பு பெற்ற கோயில்!

அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பு பெற்ற கோயில்!

அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பு பெற்ற கோயில்!

நாகப்பட்டினத்தில் கொருக்கை என்ற ஊரில் உள்ள கோயில் வீரட்டேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் வீரட்டேஸ்வரர் மூலவராகவும் யோகேஸ்வரர் உற்சவராகவும் திகழ்கின்றனர். ஞானம்பிகை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். கடுக்காய் மரம், அரிதகிவனம் தல விருட்சமாக இருக்கிறது. மாசி மகம், காமதகன விழா, பிரம்மோற்சவம் இந்தக் கோயிலில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, மார்கழி மாதம், திருவாதிரை உற்சவம், சுவாமி புறப்பாடு ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது. அதோடு நவராத்திரி மற்றும் பிரதோஷமும் சிறப்பாக நடக்கிறது.

அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பையும், பெருமையும் கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் பெற்றுள்ளது. ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது சிறப்புக்குரியது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். ரதி, மன்மதன் உற்சவ திருமேனிகள் இந்தக் கோயிலில் உள்ளன. தீர்த்தவாகு என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம். இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

அட்ட வீரட்ட தலங்களில் இங்கு சிவபெருமான் காமனை எரித்தார். இதனால், காம தகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக் காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு வலது கை அபய முத்திரையுடன், இடக் கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

திருக்குறுக்கை என்ற இந்த ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றுடன் தொடர்புடையது. சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் தனது கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் தான் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி. வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்களாம்.

ஆனால், குறி பார்க்க அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்திற்கு வந்து நின்று குறி பார்த்த போது பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டாராம். அன்பு, பிரியம், நேசம், விருப்பம் மற்றும் பாசத்திற்கு ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காம தகன மூர்த்தியை வழிபட்டால் விரும்பியவரிடமிருந்து அன்பு, பிரியம், நேசம், விருப்பம், பாசம் என்று அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் வீற்றியிருக்கும் மூலவர் வீரட்டேஸ்வரரை வணங்கி வழிபட துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். அதோடு உடல் பலம் பெறும், நோய் நொடி தீரும், தியான பலமும், மனோ பலமும் கிடைக்கும். மேலும், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்து வழிபடுபவர்களுக்கு வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார். திருமண வரன் கிடைக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்தக் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

திருமண பாக்கியம் கிடைக்க கல்யாண மாலை சாற்றுகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனக்காப்பு சாத்துதலும் பக்தர்களது நிவர்த்திக்கடனாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுவதோடு தேன், இளநீர், எலுமிச்சை, சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், திரவியபொடி, தைலம், மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்யப்படுகிறது.

பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்யப்படுகிறது. இதனால், இத்தல இறைவன் யோகேஸ்வரர் என்றும், அம்பாள் ஞானம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் சிவன் யோக மூர்த்தியாக அருள் பாலிப்பதால் யாராலும் நினைத்த உடனேயே சென்று தரிசிக்க முடியாது. எப்படியாவது தரிசனம் கிடைத்துவிட்டால், நமக்கு யோக நிலை கை கூடும் என்கிறார்கள்.

சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் செய்த தவறைக் கூட இத்தல இறைவன் மன்னித்து அருள் புரிவார். பூர்வ ஜென்ம பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயதில் செய்யக் கூடிய பீமரதசாந்தி கல்யாணம் இத்தலத்தில் முக்கியமானவை. யோகேஸ்வரரை வணங்கினால் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும். அதோடு காம குரோதங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இறைவனின் நெற்றிக்கண் மகரக் கொடியோனை சுட்டு எரித்தது. அதன் பின் வணங்கி மறுபிறவி எடுத்த தலம். சிவபெருமான் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகமே வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் முருகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர். ஆனால், முருகப் பெருமானோ, தனது தந்தையின் தவத்தை தன்னால் கலைக்க முடியாது என்று கூறிவிட்டார். இறுதியாக தேவர்கள், மன்மதனிடம் சென்று எப்படியாவது சிவனின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

தேவர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து, நடக்கப் போவது தெரியாமல், தன்னிடமுள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தனது கணைகளை தொடுத்தார். ஆனால், கணையோ புஷ்பமாக மாறி ஈசன் மீது விழுந்தது. இதையடுத்து, ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். ஈசனின் நெற்றிக்கண் பார்வை மன்மதனை சுட்டெரித்தது. அதன்பிறகு ரதி ஈசனிடம் சென்று தன் கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று கேட்கவே, உனது வேண்டுக்கோளுக்காக ஒரு நாள் மட்டுமே மன்மதனை உயிர்பிக்கச் செய்து தேய்பிறையில் தெய்வ லோகத்திற்கு அனுப்பி விடுவதாக கூறினார். அதன்படியே மன்மதன் உயிர் பெற்றதாக வரலாறு கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =

Most Popular