திருமலையானுக்கு ராமானுஜர் அனுப்பிய ஓலை!

180

ஒருநாள் ராமானுஜர் திருப்பதி மலை அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, மோரு வாங்கலீயா மோரு என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. ஓர் குலப் பெண்மணி தலையில் மோர்ப்பானையைச் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஆனால் குருநாதரிடம் சொல்லவும் தயக்கம். எனவே ஆசையை அடக்கிக்கொண்டு பாடத்தில் கருத்தாக இருந்தனர். மோர்க்காரப் பெண்மணிக்கு இவர்கள் பாடம் படிப்பது தெரியவில்லை. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி, ஐயா… சாமி…. நல்ல மோரு ஒரு தடவை குடிச்சீங்கன்னா தெம்பா இருக்கும். உஷ்ணமெல்லாம் ஓடிப்போயிடும் என்று சொன்னபடி மோர்ப்பானையை இறக்கி வைத்தாள். ஏற்கனவே பசியிலும், அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர்ப்பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு எனக்கு, எனக்கு என்று வாங்கிக் குடித்தனர். சிறிது நேரத்தில் பானை காலி. பிறகு மோர்க்காரி சீடர்களையும், ராமானுஜரையும் பார்த்தாள்.

அப்போது அவள் மனதில் இவர்களைப் போல நாமும் பக்தியில் திளைக்க வேண்டும் என்று எண்ணம் உண்டாயிற்று. திடீரென்று அப்படி பக்தி உணர்வு எழுந்தது ஏன்? மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. அப்போது ராமானுஜர் அவளிடம், நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன? என்று கேட்டார். முதலில் காசு ஆசை இருந்த அவள் மனது இப்போது வேறுவிதமாக மாறி இருந்தது. ராமானுஜரை பக்தியுடன் பார்த்து, காசெல்லாம் வேணாம் சாமி. அதை வைச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன் என்றாள். அப்படீன்னா காசுக்குப் பதிலா பொருள் ஏதாவது வேணுமா? என்று கேட்டார் சீடர் ஒருவர். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், எனக்கு காசும் வேணாம், பொருளும் வேணாம்… பெருமாளை அடையணும், மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க, சந்தோஷமா போயிடுவேன் என்றாள்.

ராமானுஜர் வியப்புடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்ற ஆசை எப்படித் தோன்றியது? இந்தக் கோரிக்கையை ராமானுஜரே எதிர்பார்க்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு கவலைப்படாதேம்மா…. உன் நல்ல குணத்திற்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும், போய் வா என்றார். ஆனால் அந்தப் பெண்மணி விடவில்லை. உங்க வாக்கு பலிக்கட்டும் சாமி. அந்த மோட்சம் கிடைக்கிறதுக்கு வழியைக் காட்டுங்க. போய்ச் சேர்றேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். பிறகு அவளிடம் நீ நினைப்பது போல் மோட்சத்திற்கு வழிகாட்டுவதற்கோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ, இங்கு கூடியிருக்கும் சிஷ்யர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் இருக்கிறானே ஒருவன்….. ஏழுமலைக்குச் சொந்தக்காரன்…. அவன் கிட்ட போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத்தான் உண்டு என்றார். இதற்குப் பிறகும் மோர்க்காரப் பெண்மணி நகருவதாக இல்லை. அவள், சாமி மேலே இருக்கிற பெருமாள்கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும். மோட்சம் வேணும்னு கேட்டேன். ஆனா அவர் வாயைத் தொறந்து பேசமாட்டேங்கிறாரே என்றாள் கவலையுடன்.

அப்படி இல்லம்மா, அவளுக்கு என்ன வேலை இருக்கோ… அதை குறையா வெச்சுக்காதே… நீ விடாமல் கேட்டுக் கொண்டே இரு…. நிச்சயம் ஒரு நாள் மோட்சம் கொடுப்பார் என்றார் ராமானுஜர். இல்லீங்க சாமி, ஒங்களைத்தான் நம்பறேன் என்றாள். இவள் ஏதோ தீர்மானத்துடன் இருக்கிறான் போலிருக்கிறதே என்று யோசித்தார் ராமானுஜர். பிறகு அந்தப் பெண்மணி சாமி எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள் கிட்ட சிபாரிசு செஞ்சு ஓலை எழுதித் தரணும். உங்களை மாதிரி பெரியவங்க கொடுத்தாதான் பெருமாள் சாமி கேட்பாரு என்றாள் தெளிவாக. இதற்கு மேலும் மறுக்க முடியாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். சீடர்களுக்கு வியப்பு தாங்கவில்லை. குருநாதர் கேட்டபடி கொண்டு வந்து கொடுத்தனர். ராமானுஜர் மேலே அண்ணாந்து பார்த்து ஏழுமலையானை மனதால் இருகரம் கூப்பி வணங்கி முகவரி எழுதும் இடத்தில் வெங்கடேசப் பெருமாள், திருமலை என்று குறிப்பிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதி, தன் கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார்.

ஓலையை வாங்கிய அடுத்த விநாடியே, அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி பெருமாள் சன்னதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் சிபாரிசு கடிதத்தைக் கொடுத்தாள். அர்ச்சகர்கள் குழப்பத்துடன் இது என்ன ஓலை? என்று கேட்டனர். மோர்க்காரப் பெண்மணி முழு விவரத்தையும் கூறினாள். அர்ச்சகர்கள் ராமானுஜர் கொடுத்த ஓலை என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் பெருமாளின் காலடியில் சமர்ப்பித்தனர். ராமானுஜரின் சிபாரிசை ஏற்றுக் கொண்ட பெருமாள் வானில் இருந்து புஷ்பக விமானத்தை விஷ்ணு தூதர்களுடன் அனுப்பி மோர்க்காரியை வைகுண்டத்திற்கு அழைத்து வரச் செய்தார். உடையவர் உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சமத்தை உணர்த்துகிற சம்பவம் இது. தெய்வபக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும் என்பதை உணர்த்தும் சம்பவம் இது.

ஆசார்யன் திருவடிகளே சரணம்.