திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய கோயில்!

35

திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலை அருகிலுள்ள திருவலஞ்சுழி என்ற ஊரில் அமைந்துள்ளது திருவலஞ்சுழிநாதர் கோயில். இந்த கோயிலின் மூலவரான திருவலஞ்சுழிநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த கோயிலானது சோழர்களால் கட்டப்பட்டுள்ளது. விநாயகர், பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால், உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என்று பெயர் பெற்றார். சுவேத விநாயகர் கல்பம் என்ற நூல் ஒன்றும் இருக்கிறது.

இந்த கோயிலில் மூலவருடன் பெரியநாயகி அம்மனும் தாயார் பிருஹந்நாயகியும் காட்சி தருகின்றனர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலில் அம்மன் வலப்பக்கம் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறாள்.

தல பெருமை – சிறுவனாக வந்த சிவன்:

அகல்யையால் ஏற்பட்ட சாபத்தை போக்க இந்திரன் தனது கையில் விநாயகரை எடுத்துக் கொண்டு பூலோகத்தில் உள்ள சிவ தலங்களை எல்லாம் தரிசனம் செய்துவிட்டு திருவலஞ்சுழிநாதர் கோயிலை வந்தடைந்தார். அப்போது சுவேத விநாயகர் இந்த தலத்திலேயே தங்கிவிடலாம் என்று ஆசை கொண்டார். ஆகையால், சிவபெருமானை வேண்டினார்.

அப்போது சிவன், சிறுவன் வடிவத்தில் இந்திரன் முன் வந்தார். நான், சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு வரும் வரை விநாயகர் இருந்த பெட்டியை கையில் வைத்திரு என்று சிறுவனிடம் கூறிவிட்டு இந்திரன் சிவனை தரிசிக்க சென்றுவிட்டார். சிறுவனாக இருந்த சிவனோ, விநாயகர் இருந்த பெட்டியை தரையில் வைத்துவிட்டு மறைந்தார்.

இந்திரன் சிவனை வணங்கிவிட்டு திரும்பி வந்தார். சிறுவனை தேடி பார்த்த போது காணவில்லை. ஆனால், பலி பீடத்திற்கு அடியில் விநாயகர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். மேலும், விநாயகரை கையில் எடுக்க முயன்றும், முடியவில்லை. எனவே விநாயகர் இருக்குமிடத்தை, சுற்றிலும் விஸ்வகர்மாவை கொண்டு இந்திர ரதம் செய்து அதை வைத்து விநாயகரை இந்திரலோகத்திற்கு இழுத்து செல்ல முயன்றான்.

அப்போது விநாயகப் பெருமான் அசரீரியாக ஒலித்து, இந்திரனே நீ வருடத்திற்கு ஒரு முறை சதுர்த்தியன்று வந்து எம்மை பூஜை செய்தால், வருடம் முழுவதும் எம்மை தரிசித்து பூஜை செய்த பலன் உன்னை வந்து சேரும் என்று கூறினார். அதற்கு இந்திரனோ மனம் மகிழ்ந்து விநாயகப் பெருமான் கூறியதைப் போன்று வருடம் தோறும் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியன்று இங்கு வந்து விநாயகரை பூஜித்து அவரது அருள் பெற்று செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

கற்பூர அபிஷேகம்:

சுவேத விநாயகர் பாற்கடல் நுரை கொண்டு செய்யப்பட்டவர் என்பதால், அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல் சந்தனம், வஸ்திரம், புஷ்பம் என்று எதுவும் சாற்றப்படுவதுமில்லை. ஆனால், பச்சைக் கற்பூரம் கொண்டு பொடி செய்து விநாயகரின் திருமேனியில் கை படாமல் தூவப்பட்டு வருகிறது.

சிறப்பம்சம்:

முருகப் பெருமானுக்கு எப்படி ஆறுபடை வீடுகள் இருக்கிறதோ, அதே போன்று சுவேத விநாயகருக்கு இந்தியா முழுவதும் 10 படை வீடுகள் உள்ளன. அதில், திருவலஞ்சுழிநாதர் கோயிலும் ஒரு படை வீடு என்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள விநாயகப் பெருமான் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் திருமணம்:

மஹாவிஷ்ணுவின் நேத்திர கமலங்களிலிருந்து தோன்றிய இந்திரதேவி எனப்படும் கமலா அம்பாளையும், பிரம்மாவின் வாக்கிலிருந்து தோன்றிய புத்தி தேவி எனப்படும் வாணியையும் திருவலஞ்சுழிநாதர் கோயிலில் வைத்து சுவேத விநாயகர் திருமணம் செய்து கொண்டார். எனவே திருமணம் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் சுவேத விநாயகப் பெருமானை வழிபட்டு வர எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது நம்பிக்கை.