திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய கோயில்!
தூத்துக்குடி மாவட்டம் நத்தம் வரகுணமங்கையில் அருள்பாளிக்கும் விஜயாஸனர் பெருமாள் ஆலயத்தின் சிறப்பை இப்பதிவில் காண்போம்…
ஆலயத்தின் சிறப்பு:
இவ்வாலயத்தின் மூலவர் விஜயாஸனர் என்கிற பரமபதநாதர் என்ற பெயரில், உற்சவர் எம்மடர் கடிவான் என்றும் மற்றும் தாயார் வரகுண வல்லி என்கிற வரகுணமங்கை என்ற திருநாமத்தில் அருள்பாளிக்கிறார். இவ்வாலயத்தின் தீர்த்தம் அக்னி தீர்த்தம்.
இக்கோவில் இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஆலயமாகும்.மேலும் சிறப்பு என்னவென்றால், திருவரகுணமங்கை வேதவித்து வந்த பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.
நவதிருப்பதிகள்:
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லி மங்கலம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி
கிரக தோஷம் நீங்கும்:
சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.
பெருமாளின் 108 திவ்யதேசத்தில் இதுவும் ஒன்று. நவதிருப்பதியில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும். இங்கு பெருமாள் விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் பாடியவர்கள்
நம்மாழ்வார் ஆவார்.
மங்களாசாசனம்:
புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.
–நம்மாழ்வார்
திருவிழாக்கள் : வைகுண்ட ஏகாதசி இங்கு சிறப்பாக நடைபெறும்.
பிரார்த்தனைகள்:
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கலாம். மேலும், பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.
