Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalதிரு அண்ணாமலை பெரிய நந்தி காண முடியாத அதிசயம்

திரு அண்ணாமலை பெரிய நந்தி காண முடியாத அதிசயம்

எந்த ஒரு சிவ திருக் கோயில்களிலும் காண முடியாத அதிசயங்கள் திருஅண்ணாமலை கோயிலில் உண்டு.

இங்கு சிவனை தரிசிக்க செல்லும்வழியில் ஐந்து நந்தியம்பெருமான்கள் உண்டு.அதில் முதன்முதலில் உள்ள பெரியநந்தியைப் பற்றிய வரலாறு இது.

முகலாய ஆட்சி காலத்தில் அண்ணாமலை கோவிலை ஒரு முகலாய மன்னன் கைப்பற்றி னான். அவன் கோவிலுக்குள் நின்று கொண் டிருந்தபோது 5 சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர்.

உடனே முகலாய மன்னன், ‘‘எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள்?’’ என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், “இது எங்களது ஈசனை சுமக்கும் வாகனம். ஈசனை சுமப்பவரை நாங் கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” என்று கூறினார்கள்.

இதை கேட்டதும் முகலாய மன்னனுக்கு கோபம் வந்தது. “நான் இந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டுகிறேன். உங்கள் ஈசன் வந்து அதை ஒன்றாக சேர்க்க முடியுமா?” என்று ஏளனமாக சொன்னான். அதோடு மாட்டை இரண்டு துண்டாகவும் வெட்டினான்.

அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாம லையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அசரீரி ஒலித்தது. “வடக்கு திசை நோக்கி செல்லுங்கள். அங்கே என் பக்தன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி அமர்ந்து இருப்பான். அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்று அசரீரியில் அண்ணாமலையார் கூறினார்.

இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான்.

அவனை பார்த்ததும், சிவபக்தர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. “இந்த சிறுவனா வந்து மாட்டுக்கு உயிர் கொடுக்க போகிறான்” என்று நினைத்தனர். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் சிவ பக்தர்களுக்கு அந்த சிறுவன் மீது நம்பிக்கை வந்தது.

அண்ணாமலை ஆலயத்துக்குள் நடந்ததை கூறினார்கள். உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.

இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என்றாலும் அவன் சிவ பக்தர்களை பார்த்து, “இந்த வாலிபன் ஏதோ சித்து விளையாட்டு விளையாடுகிறான். இதை நான் நம்ப மாட்டேன். இன்னொரு போட்டி வைக்கிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன்.இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன்” என்றான்.

அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணா மலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான்.

அவன் உத்தரவுபடி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிசங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.

இதையும் முகலாய மன்னனால் நம்ப முடிய வில்லை. ராஜகோபுரம் அருகில் உள்ள நந்தி அருகில் வந்தான். அந்த நந்தியை பார்த்தவன், “இந்த நந்திக்கு உன்னால் உயிர் கொடுக்க முடியுமா? அப்படியே கொடுத்தாலும் அதன் கால்களை மாற்றி அமர வைக்க முடியுமா?” என்று சவால் விட்டான்.

இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை கால்கள் நடுங்கியது. அண்ணாம லையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் #வீரேகிய_முனிவராக மாறினார்.

திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது.

இப்படி பல அதிசயங்கள் திருவண்ணாமலை தலத்துக்குள் உள்ளன….

ஓம் நமசிவாய…
அண்ணாமலையானே போற்றி…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =

Most Popular