குழந்தை வரம் வேண்டுவோர், கரும்புத் தொட்டிலில் இட்டு கிரிவலம் வரும் சிவாலயம்!
திருவண்ணாமலை எனும் புண்ணிய தலம் நாம் அனைவரும் தரிசிக்க விரும்பும் விசேஷமான சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஈசன் அண்ணாமலையாராகவும் அம்பிகை உண்ணாமுலையம்மன் என்றும் அருள்பாலிக்கிறார். இந்த உண்ணாமலை அம்பாளுக்கு அபீதகுஜாம்பாள் என்ற பெயரும் உண்டு.
சாபம் நீக்கிய தலம்:
சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரம்மதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் போன்றோர் பூஜித்துப் பேறுபெற்ற தலம் இதன் சிறப்பாகும். இந்த வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்ததால் மாறியதாக தலபுராணம் கூறுகிறது. இத்தலத்தில் நடைபெறும் பெரியவிழா கார்த்திகை தீபத் திருவிழாவாகும். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நன்நாளில் நடைபெறும். இத்தலம் பஞ்ச பூதத்தலங்களுள் அக்னி தலமாக போற்றப்படுகிறது.
ஆலய வரலாறு:
அன்னையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் அருணை சக்தி பீடமாக போற்றப்படுகிறது. ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், ஈசன் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஈசனைக் காண வந்த பிருங்கி முனிவர் ஈசனை மட்டும் வணங்கி வலம் வந்தார். அதனால் பார்வதி தேவி கோபமடைந்தாள். பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் ரத்தம் நீங்கி சக்தியை இழக்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் ரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார்.
ஈசன் தம்முடைய பக்தனின் தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார். ஈசன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, ஈசனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி:
இதனைக் கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி ஈசனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி ஈசனை நோக்கிக் கடுமையான தவத்தினை மேற்கொண்டாள். ஈசன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார். பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி அளித்தார். பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார்.
பார்வதி ஈசனின் பாதி உடலை பெற்ற தலம் இத்திருவண்ணாமலையாகும். கார்த்திகை தீபத்தின் போது அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தின் ஆனந்த நடனத்தை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தரிசிக்க முடியும். பின் அடுத்த வருட கார்த்திகை தீபத்தின்போதுதான் அத்திருவுருவை தரிசிக்கமுடியும்.
உண்ணாமலை என்று பெயர் எப்படி வந்தது:
திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது. அண்ணாமலை யில், அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர் உண்ணாமுலை அம்மன் விநாயகன், முருகன் ஆகிய குழந்தைகளுக்குத் தாய் என்றாலும் இரு குழந்தைகளுக்கும் பால் புகட்ட வில்லை.
இதனால் உண்ணாத முலையைக் கொண்டவள் என்று பொருள் படும்படி இவ்வாறு அழைக்கப்படுகிறார். இந்தப் பால் திருவண்ணாமலையில் சிதறி குளமாக மாறியது இந்த குளத்திற்கு முலைப்பால் தீர்த்தம் என்று பெயர் வந்தது.
குழந்தை பாக்கியம் தந்தருளும் ஈசன், தேவி:
குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தங்களது வியாபாரத்தில் விருத்தி அடைவது, உத்தியோக உயர்வு என்ற அனைத்து வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும் இவ்வாலயத்தின் குழந்தை பாக்கியம் வேண்டி, குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள்.
அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறுகரும்புத் தொட்டியலிடுவது இக்கோயிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும். தன்னை நினைத்து வணங்கும் அன்பர்களுக்கு ஆனந்த வாழ்வருளும் உண்ணாமலை தேவி என்ற அபீதகுஜாம்பாளை அண்ணாமலையாருடன் வணங்கி அனைத்து நலன்களை பெறுவோம்.