உன்னிடம் என்ன இருக்கும்? இருக்காது? என்று படைத்தவனுக்கு தெரியும்!
கிருஷ்ணரின் தீவிர பக்தை ஒருவர், உன் விருப்பப்படி நடந்து கொள்வதை தவிர வேறு எந்த மகிழ்ச்சியும் எனக்கு தேவையில்லை. உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்றாள். அவளுக்கு பெற்றோர்கள் என்று யாரும் இல்லை. அவள் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். கிருஷ்ணர் மீது அதிக பக்தி கொண்டுள்ளதால், தன்னிடம் கிருஷ்ண பகவான் ஏதாவது கேட்பார், அதனை செய்து கொடுக்கலாம் என்று காத்திருந்தாள்.
ஆனால், அவள் கேட்டதோ மாயாவியிடமாயிற்றே? உடனே, அந்தப் பெண்ணிடம் ஒரு கோணிப்பையை கொடுத்து, நான் செல்லும் இடமெல்லாம், இந்த கோணிப்பையை தூக்கி வரும்படி சொன்னார். அதோடு, இந்தக் கோணிப்பை வேறு யாருடைய கண்ணுக்கும் தெரியாது என்றார்.
அந்தப் பெண்ணோ, என்ன இது கிருஷ்ணர் இப்படியொரு சாக்கு மூட்டையை கொடுத்துவிட்டாரே என்று கருதினாள். அந்த கோணிப்பையில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள அந்தப் பெண்ணிற்கு ஆசை. ஆனாலும், கிருஷ்ண பகவான் செல்லும் இடமெல்லாம் சென்று கொண்டிருந்தாள். நேரம், செல்ல செல்ல அவளால் அந்த மூட்டையை தூக்க கூட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் கிருஷ்ணரை கோபித்துக் கொண்டாள். அப்போது, உனது பலவீனத்தில் எனது பலம் அடங்கியிருக்கிறது. இதை நினைத்து நீ கவலை கொள்ளாதே! இந்த மூட்டையை சுமந்து கொண்டு வா என்றார். இந்த செயல் சில காலம் சென்றது. ஒரு சில இடங்களில் அந்தப் பெண்ணால் மூட்டையை தூக்க முடியவில்லை. இதையடுத்து கிருஷ்ணரும் அந்த மூட்டையை தூக்கிக் கொண்டு வந்தார். இறுதியாக அவர்கள் சென்று சேரும் இடம் வந்தது. அந்த மூட்டையை இறக்கி வைத்தாள். அந்த மூட்டைக்குள் மாணிக்கங்கள், வைர வைடூரியங்கள், பொற்காசுகள், தங்க ஆபரணங்கள் குவிந்து கிடந்தன.
இத்தனை காலம் பொறுமையாக இருந்தமைக்காக எனது பரிசுகள். இதனை நீ எடுத்துக் கொள் என்றார் கிருஷ்ணர். இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்தும், நான் இது தெரியாமல் இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். சுமையோ, பொக்கிஷமோ அது சுமப்பவர்களுக்கு தான். சுமை என்று நினைத்தால் சுமை, பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம்.
நம்மால் என்ன முடியும் என்று இறைவனுக்கு தெரியும். அதை மட்டும் தான் இறைவன் கொடுப்பார்.
