உங்களுக்கு சந்திராஷ்டமமா? என்ன செய்தால் எளிதாக தப்பித்து கொள்ள முடியும்

119

சந்திராஷ்டமம் என்பதில் சந்திரன் ‘கோசார சந்திரன்’, அஷ்டமம் ‘எட்டாம் இடத்தையும்’ குறிக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம ராசியிலிருந்து எட்டாவது இடத்தில் சந்திரன் இரண்டே கால் நாட்கள் நிலை பெறும் காலம் தான் சந்திராஷ்டமம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திர நூல்களில் சனி பகவானை போல சந்திரனையும் மந்த புத்தி காரகன் என்று கூறப்படுகிறது.

மேலும் சந்திரனை மனோகரன், போக்குவரத்து காரகன் என்று பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் மனோகரன் ராசியிலிருந்து எட்டாம் இடத்தில் மறைந்து கொள்ளும் பொழுது உங்களுக்கு கெடுபலன்களை தருவார். உங்களுடைய குணத்தில் மாற்றங்கள் உண்டாகும். நேற்று வரை நன்றாக இருந்தவர்களை கூட சந்திராஷ்டம காலத்தில் வில்லனாக மாறி விடுவதை காணலாம். எதற்கெடுத்தாலும் கோபம், ஆத்திரம் என்று காணப்படுவீர்கள்.

இந்த காலத்தில் பலர் பொறுமை இழந்து சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகப்படுவீர்கள். எதற்கெடுத்தாலும் கோபம், எரிச்சல்பட்டு பிறரின் மனம் புண்படும்படி நடந்து கொள்வீர்கள். முக்கிய விஷயங்களை கூட மறந்து விடுவீர்கள். எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்காது. அதிக நினைவாற்றல் கொண்டிருப்பவர்கள் என்றாலும் சந்திராஷ்டம காலத்தில் மறதி ஏற்படும். .உதாரணத்திற்கு நீங்கள் தனுசு ராசிக்காரர்கள் என்றால் உங்களது ராசியிலிருந்து எட்டாம் இடமான கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டால் உங்களின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து சரியாக 17வது நட்சத்திரத்தில் உள்ள காலம் சந்திராஷ்டமம் ஆகும். இந்த காலத்தில் ஜாதக காரருக்கு சிறு தோஷம் ஏற்படும். சில கெடுபலன்கள் நிகழும். அதனால் தான் சந்திராஷ்டம காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்படுகிறது. சந்திராஷ்டம காலத்தில் முதல் 24 மணி நேரத்தில் எந்த நல்ல காரியங்களையும் செய்யாமல் இருப்பது நல்லது. அதற்குப் பிறகு செய்து கொள்ளலாம்.

24 மணி நேரத்திற்குள் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருப்பவர்கள் விநாயகப் பெருமானுக்கு பால் அல்லது தயிர் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டபின் செய்யலாம். அதே போல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் ஓரளவு குறையும். .நாம் பிறக்கும் போது சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த ராசி தான் ஜென்ம ராசியாக கருதப்படுகிறது. சந்திரனை இருக்கும் நட்சத்திரத்தை வைத்தே திருமண பொருத்தம், முதல் தசை என்று அனைத்தும் கணிக்கப்படுகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சந்திரன் இருக்கும் இடங்களை வைத்து நமது குணாதிசயங்கள் மாறுபடும். சந்திரன் நமது ஜென்ம ராசியில் இருக்கும் பொழுது சிந்திக்கும் திறன் மேலோங்கி காணப்படும். மனம் ஒரு நிலை இல்லாமல் அலைபாயும். 2ல் இருக்கும்பொழுது கற்பனை திறன் அதிகரிக்கும். வரவு ஏற்படும். உங்களது பேச்சில் இனிமை இருக்கும். 3ல் இருக்கும் பொழுது அறிவாற்றல் அதிகரித்து காணப்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பார்த்து பார்த்து செலவு செய்வீர்கள். 4ல் இருக்கும் பொழுது உறவினர்களின் ஆதரவு கிட்டும். பயணங்கள் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி இருக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

5ல் இருக்கும்பொழுது மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். 6ல் இருக்கும்பொழுது தேவையற்ற செலவுகள், ஞாபக மறதி, கோபம், கவலை, நஷ்டங்கள் ஏற்படும். 7ல் இருக்கும் பொழுது லாபம் ஏற்படும். மனதில் பிடித்தவர்கள் ஆல் மகிழ்ச்சி ஏற்படும்.. அமைதியான நிலை இருக்கும். 8ல் இருக்கும் பொழுதுதான் சந்திராஷ்டமம் எனப்படுகிறது. இக்காலத்தில் யாரிடமும் அதிகம் பேசாமல் தியானத்தில் இருப்பதே நல்லது. 9ல் இருக்கும் பொழுது எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடக்கும். பிரச்சனைகள் குறைந்து மனம் அமைதி பெறும்.

10ல் இருக்கும்பொழுது உடல்நலனில் மாற்றங்கள் ஏற்படும். அலைச்சல்கள் அதிகரிக்கும். 11ல் இருக்கும் பொழுது உங்களின் நல்ல குணநலன்கள் வெளிப்படும். பிறரின் மதிப்பிற்கு ஆளாவீர்கள். தொட்டதெல்லாம் வெற்றி அடையும். 12ல் இருக்கும் பொழுது இழப்புகளை சந்திக்க நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். மறதி உண்டாகும்.. சந்திராஷ்டம காலத்தில் மன நலனில் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் மட்டுமே நல்ல காரியங்களை தவிர்க்கிறார்கள். அனாவசியமாக பேசுவதைக் குறைத்து மௌனமாக இருக்க சொல்கிறார்கள். மற்றபடி பயம் கொள்வதற்கு இதில் ஒன்றும் இல்லை.