Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalவைகாசி ஸ்பெஷல் ! 30.5.20 !

வைகாசி ஸ்பெஷல் ! 30.5.20 !

ஒரு சலவைத் தொழிலாளி இது தான் “நம் பெருமாள்”என சொன்னதை,அரங்கன் அடியார்கள் ஒப்புக்கொண்ட வைகாசி 17 இன்று…

இன்று வைகாசி 17, அரங்கன் அடியார்களின் வாழ்வில் மிக மிக முக்கியமான ஒரு நாள். ஆம் அரங்கன் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்!

என்ன அரங்கன் வனவாசம் சென்றானா?

ஆம்… ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றான். ஆனால் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் சென்றான். இதன் பின் உள்ள சம்பவங்கள் கல்நெஞ்சையும் கரையவைக்கும் என்றால் மிகையாகாது.

“கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீராற் காத்தோம். கருகத் திருவுளமோ?” என்றான் பாரதி. பாரதி பாடிய இந்த வரிகள் தேச சுதந்திரத்துக்கு மட்டுமல்ல… மத சுதந்திரத்துக்கும் பொருந்தும்.

ஆம், இன்று நீங்கள் சர்வ சாதாரணமாக தரிசிக்கும் (அல்லது தரிசிக்க மறந்துவிட்ட) திவ்ய தேசங்களுக்கு பின்னால் உள்ள தியாகத்தின் வரலாறு உங்களுக்கு தெரியுமா? எத்தனை எத்தனை பேர் இதற்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்திருக்கிறார்கள் தெரியுமா??

1310 ஆம் ஆண்டு மாலிக் கபூர் படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர்…

ஆனால், 1323 ஆம் ஆண்டு முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்துவிட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்) திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார். இதுவே அரங்கனின் வனவாசம் என்று வர்ணிக்கப்படுகிறது….

1323 ஆம் ஆண்டு சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர் (அதாவது வரலாறு மறந்துவிட்டது). ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப்பட்டதால், வந்தவர் திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.

தங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அவரை தேடிச் சென்றபோது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை வேறு கிடையாது.

பார்வை இல்லாத நிலையில் எப்படி இவர் தான் அசல் அரங்கன் என்று அடையாளம் கூற முடியும்?

இவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள்… எனக்கு புறக்கண் தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு , பயன்படுத்தப்பட்டிருக்கும். அவரது ஆடையை நான் துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்!” என்றும் கூறினார்.

அவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்!” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது.

ஒரு சலவைத் தொழிலாளி இது தான் “நம் பெருமாள்”என சொன்னதை, அரங்கன் அடியார்கள் ஒப்புக்கொண்ட வைகாசி 17 இன்று…

அரங்கன் இவ்வாறு மீண்டும் திருவரங்கம் வந்து இந்த ஆண்டோடு 644 ஆண்டுகள் ஆகின்றன…

ஒரு ஏழை சலவைத் தொழிலாளி சூட்டிய பெயரையே இன்றளவும் வைத்துக்கொண்டு நம்பெருமாள் அருள்பாலித்து வருவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஏனெனில்… அவர் தான் ‘நம்’ பெருமாளாயிற்றே!

இந்து கோவில்கள் சிதைப்பு மற்றும் திரு அரங்கன் உலா வந்த இந்த 48 ஆண்டுகள் பற்றிய முழு வரலாற்று தகவல் ஶ்ரீவேணுகோபாலன் அவர்கள் எழுதிய ” திருவரங்கன் உலா” என்ற புத்தகமாக வந்துள்ளது…

உண்மை வரலாற்றை நம் சந்ததியினருக்கு
எடுத்துரைப்போம்….

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =

Most Popular