வைகாசி விசாகம் ஸ்பெஷல் !

168

வைகாசி மாதத்தை சிறப்பானதாக்க பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது விசாகன் என்று அழைக்கப்படும் முருகப் பெருமான் அவதாரம். அருணகிரியார் திருச்செந்தூர் முருகனைப் பாடும் போது,

உம்பர்கள் ஸ்வாமி நமோநம! எம்பெருமானே
நமோநம! உன்புகழேபாடி, நான் இனி
அன்புடன் ஆசார பூஜை செய்து உய்ந்திட
வீணாள்படாது அருள்புரிவாயே!
இன்சொல் விசாகா கிருபாகர செந்திலில்
வாழ்வாகிய அடியேன் தனை ஈடேற வாழ்வருள் பெருமாளே!

என்பதாகக் கூறுகிறார். முருகனுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் பலவிதங்களில் தொடர்புண்டு. ஷஷ்டி, ஷண்முகன், கார்த்திகைப் பெண்கள், மந்திரத்தில் 6 அக்ஷரங்கள் என்பதாக பலவும் நமக்குத் தெரிந்ததே!.. இந்த தொடர்பில் உருவான ஒரு ஸ்லோகத்தை இன்று சொல்லி ஷண்முகனைப் இகபரமருள வேண்டுவோம். இந்த ஸ்லோகத்தின் பெயரே ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம் என்பதாகும்.

ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரெளஞ்ச சைல விமர்தனம்
தேவஸேனாபதில் தேவம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

ஆறு முகங்களுடன் கூடியவரும், பார்வதியின் புதல்வரும், மலையாக உருவெடுத்த க்ரெளஞ்சன் என்னும் அசுரனை வதம் செய்தவரும், தேவசேனையின் கணவரும், தேவர்களுக்கெல்லாம்தேவரும், பரமேஸ்வரரின் குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கிறேன்.

தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸன ஸம்ஸ்திதம்
சக்திபாணிஞ்ச தேவேசம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

தாரகாஸுரன வதம் செய்தவரும், மயில் மீது அமர்ந்திருப்பவரும், ஞானவேலைக் கையில் தரித்திருப்பவரும், பரமேஸ்வரரின் குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கிறேன்.

விஸ்வேஸ்வர ப்ரியம் தேவம் விஸ்வேஸ்வர தநூபவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

சகல உலகிற்கும் ஈஸ்வரரான சிவனின் அன்பிற்குரிவரும், தேவரும், வள்ளி-தேவசேனையிடத்து ஆசை கொண்டவரும், மனதைக் கவர்கின்றவரும், பரமேஸ்வரனின் குமாரருமாகிய ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.

குமாரம் முநிசார்தூல மாநஸ ஆனந்த கோசரம்
வள்ளீ காந்தம் ஜகத் யோநிம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

குமாரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்தவடிவமாய்த் தோன்றுகின்றவரும், வள்ளிமணாளரும், உலகங்கள் தோன்றக் காரணமானவரும், ஈசனது புத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கிறேன்.

ப்ரளய ஸ்திதி கர்தாரம் ஆதிகர்தார மீஸ்வரம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

யுகங்களின் முடிவில் உலகனைத்தையும் ஒடுக்குபவரும், உலகனைத்தையும் காத்து அருள்பவரும், முதலில் உலகத்தைப் படைத்தவரும், அனைவருக்கும் தலைவரும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும், ஆனந்தத்தால்மதம் கொண்டவரும், பரமேஸ்வரரின் குமாரராகிய ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்காரம் செய்கின்றேன்.

விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே சிவாத்மஜம்.

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாக இருப்பவரும், க்ருத்திகா தேவிகளின் புதல்வரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.

ஸ்கந்த ஷ்ட்க மிதம் ஸ்தோத்ரம் ய:படேத் ச்ருணூயாந் நர:
வாஞ்சிதான் லபதே ஸத்ய: அந்தே ஸ்கந்தபுரம் வ்ரஜேத்.

ஸ்கந்தனின் ஆறு ஸ்லோகங்களான இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறார்களோ, அவர்கள் ஸ்ரீஷண்முகனின் அருளால் விரும்பும் பொருளை உடனே அடைவார். ஸுகமான இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் ஸ்ரீஸ்கந்த லோகத்தில் முருகனுடன்சேர்ந்து வாசம் செய்வார்கள்.

ஞான வேல் முருகனுக்கு அரோஹரா!

சக்திவேல் முருகனுக்கு அரோஹரா!

சுப்ரம்மண்யோஹம்! சுப்ரம்மண்யோஹம்! சுப்ரம்மண்யோஹம்!