வீரன் ஒருவனின் நவகண்ட சிலை…

88

திருவானைக்கோவில் செல்பவர்கள் காண தவற விடாத சிலை உள்ளது..
வீரன் ஒருவனின் நவகண்ட சிலை…
மிக சாந்தமான முகம். அறுபட்ட தன் தலை தரையில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் தலைமயிரை கொத்தாக கையில் அள்ளி பிடித்திருக்கிறான். சாவின் பயம் அவன் முகத்தில் இல்லை. உறுதியான உடற்கட்டும் ஆரோக்கியமும் கொண்டவன் என்பது அவன் உடல்வாகில் தெரிகிறது..சிரித்தபடியான உதடுகள். அழிந்த முகம் அடர்ந்த புருவங்கள். கொண்டையிட்ட கேசம். கழுத்தில் மணியாரத்துடன்..
நவ கண்டம்…
சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்கள் நம் தமிழ் நாட்டை ஆண்டபொழுது, எவ்வளவு வளமாக இருந்தாலும், போர் மற்றும் அதன் இழப்புகள், பற்றிய சிந்தனை எப்பொழுதும் மக்களிடம் இருந்தது.
ஏதாவது ஒரு காரணத்திற்க்காக, இவ்மூவரும் போரில் ஈடுபட்டனர். ஆனால் எவ்வளவு முறை போர் செய்தாலும், மக்கள் அந்த, அந்த அரசர்களுக்கு மிக விசுவாசமாக இருந்தார்கள்.
எவ்வளவு விசுவாசம்?
தன் மன்னன், வெற்றி பெறவேண்டும், தன் நாடு செழிக்கவேண்டும் என்பதற்காக தன் உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு.
இந்த தியாகம் போர்முனையில் அல்ல, போருக்கு போகும் முன்பே.
இதனைத்தான் நவ கண்டம் என அழைத்தார்கள் நமது முன்னோர்.
நவ கண்டம் என்றால், தன் தலையை தானே வாளால் வெட்டி மாய்வது.
நவ + கண்டம்,என்பதே நவகண்டம் எனப்படுகிறது. நவ என்பது நம் உடலிலுள்ள ஒன்பது துவாரங்களை குறிப்பதாகும். இந்த ஒன்பது துவாரங்களின் நரம்பு முடிச்சுகளும் நம் கழுத்தின் பின்புறத்தில் முள்ளந்தண்டு வடத்தில் அமைத்துள்ளது, உடலின் ஒன்பது துவாரங்களையும் ஒரே தருணத்தில் செயலிழக்க செய்வது உயிர் துறப்பதற்கான வழிகளில் ஒன்று. எனவே இந்த முக்கிய நரம்புமுடிச்சை கொண்ட கழுத்தை (கண்டத்தை) தன் கையால் தானே துண்டம் செய்வது நவகண்டம் எனப்படுகிறது. ஒரே வீசில் தன் தலை உடலில் இருந்து அறுத்து வீசுவதால் அறிகண்டம் எனவும் கூறப்படும்..
இதற்க்கு எத்தனை துணிவு இருத்தல் வேண்டும்? சரி எப்படி தன் தலையை தானே வெட்டிக்கொள்ள முடியும்?
ஒரு நீண்ட, நன்கு வளையக்கூடிய மூங்கில் கழியை, பூமியில் நன்கு ஊன்றி நட்டு, தன் குடுமியை (அப்பொழுதெல்லாம் எல்லா ஆண்களும் குடுமி வைத்திருந்தார்கள்) அக் கழியில் மாட்டி, நன்றாக தலையை கீழே குனிந்தால், மூங்கில் நன்கு வளையும், பின் வாளால் ஒரே வெட்டு. தலை துண்டாகி, மூங்கில் கழியில் தொங்கும்…இது தான் நவகண்டம்…
இதை அப்படியே எழுத்து சித்தர் பாலகுமாரன் அய்யா திருச்சியில் கலந்து கொண்ட ஓரு நிகழ்ச்சி மேடையில் விவரித்த போது புல்லரித்து போனது…அவர் சொன்னது, அரசன் போருக்கு செல்லும் வழியில் நடு சாலையில் அவன் முன் ஒருவன் செய்கிறான் இதே போல…தலை துண்டிக்கப்பட்ட மூங்கில் கழி மேலே தலையுடன் செல்லும் போது அரசனுக்கும் அவர்கள் படையினருக்கும் நெற்றியில் திலகமாக, அவனது தலை மேலே போகும் போது அதிலிருந்த ரத்த துளிகள் அனைவர் மீதும் தெளிக்கும்..தலையில்லா முண்டம் மட்டும் கீழே சாயும் என முடித்த போது அரங்கம் நிறைந்த கைதட்டல்..இதை நாவலாகவும் எழுதியுள்ளார்..
இப்படி தன்னை பலியிடுவதன் மூலம், சூட்சம சக்தியாகி, தன் மன்னனுக்கும், நாட்டிற்க்கும், வெற்றி தேடி தருவதோடு, வீர சுவர்கமும் அடையமுடியும் என்பது, அக்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை…
பலியானவர்களுக்கு, நடுகற்கள் நட்டு, அவர்களை தெய்வமாக வழிபடுவதும் நடந்திருக்கிறது. இன்றைக்கும் பல கிராம தேவதைகளின் கதைகளை கேட்டால், அவர்கள் அந்த ஊருக்கு எதோ மிகப்பெரிய தியாகம் செய்து, அதன் விளைவால் உயிர் நீற்று, அதனால் தெய்வம் ஆனவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.
அப்படி ஏதோ ஒரு நோக்கத்துக்காக தனது இன்னுயிரை தந்தவன் சிலையை நீங்க திருவானைக்காவில் காணலாம்…தமிழகத்தில் பல கோவில்களில் இது போன்ற சிலைகள் உள்ளன்…அவை அனைத்தும் யாரோ எங்கேயோ தேசத்துக்காக அரசனுக்காக நவகண்டம் ஆனவர்கள் தான்..
இந்த சம்பவங்களை நீங்களும் அறிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்க…இப்படிபட்ட உன்னதமானவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என …ஏதோ ஒரு சிலை தானே என ஒதுங்கி போகாமல் அவர்களுக்காக ஒரு நொடி அந்த சிலை முன் நின்று வணக்கம் செலுத்துங்கள்..ஒரு வேளை அவர்கள் உங்கள் மூதாதையர்களாக கூட இருக்கலாம்….