Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalவிண்ணகத்தில் அவன் திருவடியை அடைந்து அவனோடு கலந்துவிட்டபின் எப்படி சேவையாற்ற முடியும்?

விண்ணகத்தில் அவன் திருவடியை அடைந்து அவனோடு கலந்துவிட்டபின் எப்படி சேவையாற்ற முடியும்?

ராமன் பிறக்கும்போதுதான் அனுமனுக்கும் பிறப்பு நிகழ்கிறது. ராமன் பிறக்கக் காரணமான புத்திர காமேஷ்டி யாகப்பிரசாதத்தை தசரத பத்தினிகள் உண்ணும் முன்பே, அது கருடனால் கொண்டு வரப்படும் சமயம் அதன் ஒரு திவலை கீழே சிந்திட, அது திருப்பதி ஏழுமலையின் ஒரு மலையில் தவம் செய்தபடி இருந்த அனுமனின் தாயான அஞ்சனையின் உதட்டில் படுகிறது. அவளும் என்னவோ ஏதோவென நாவினால் அதைச் சுவைக்கப்போய் புத்திரப் பிராப்தி அவளுக்கும் ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் புத்திரப் பிராப்திக்காகத்தான் அஞ்சனை அந்த மலையில், வாயுவை கும்பகத்தில் நிறுத்தி தவம் செய்தபடி இருந்தாள். அவள் விருப்பத்தை பின் வாயுவானவன் சிவசக்தி ஸ்கலிதத்தோடு போய் அவளுக்குள் புகவும் அஞ்சனை கருவுற்றாள். அதற்குக் காரணமான வாயுவும் அனுமனின் தந்தை என்றானான்.

இப்படிப் பிறந்த அனுமன் எவ்வாறெல்லாம் குறும்புகள் செய்து வளர்ந்தான்- வரசித்திகள் பெற்றான் என்பதை எல்லாம்தான் முன்பு பார்த்தோம். இறுதியாக காட்டுக்குச் சென்ற ராமன் மீண்டும் நாடு திரும்பி அயோத்தி அரசனாக முடிசூட்டிக்கொண்ட நிலையில், அனுமனை தன் மார்போடு அணைத்து தன்னையே பரிசாக அனுமனுக்கு அளிக்கிறான்.

இறுதியாக ராமவதாரம் முடிந்து ராமன் வானுலகு செல்லும்போது தன்னை உற்ற அனைவர்க்கும் மோட்சகதி கிடைக்கச் செய்கிறான்.

ஆனால் மூன்று பேர் மட்டும் ராமனுடன் மோட்சகதிக்கு இலக்காக மறுத்துவிடுகின்றனர்.

அவர்கள்தான் ஜாம்பவான், விபீஷணன், அனுமன் ஆகியோர்.

இவர்கள் மறுத்ததற்கு ஒரே ஒரு காரணம் தான்.

விண்ணுலகில் ராமபிரானுக்கு கோவில்கள் இல்லை. அங்கே ராமநாமத்தை ஜெபிக்கும் அவசியமோ நாம ஸ்மரணைக்கான தேவையோ இல்லை. அவசியமும் தேவையும் பக்திபுரிவதற்கு எதற்கென்று கேட்கலாம். அவர்கள் மூவரின் நோக்கமும் பூவுலகில் ராமநாமத்தை எப்போதும் ஜெபித்துக்கொண்டு, மானுடர்கள் உய்ய வழிகாட்டவேண்டும் என்பதுதான். சேவையில் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்வதே உயர்ந்த மானுட தேவலட்சணமாகும். விண்ணகத்தில் அதற்கு இடமேது?

விண்ணகத்தில் அவன் திருவடியை அடைந்து அவனோடு கலந்துவிட்டபின் எப்படி சேவையாற்ற முடியும்? உண்மையில் முக்தியை வேண்டுபவர்களைவிட இப்படி சேவையாற்றுபவர்களையே உலகம் பெரிதும் கொண்டாடுகிறது.

அனுமனும், “நான் பூவுலகில் சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு, ராமநாம ஸ்மரணை என்னும் ஜீவசக்தியும் ஆன்ம சக்தியுமான இயக்கம் என்றும் தொடர்ந்தபடி இருக்க விரும்புகிறேன்’ என்கிறான். அதனாலேயே ராமபிரானும் அவனுக்கு அந்த வரத்தை அளிக்கிறார். இதனால் பூவுலகில் நித்ய சஞ்ஜீவியாக அதாவது பக்தி மூலிகையாக- அப்படியே நித்ய சிரஞ்சீவியாக- அதாவது அழிவேயில்லாதவனாக அனுமன் வாழ்ந்துவருகிறான்.

இமயத்தின் ஒரு பாகத்தில் இன்றும் அவனது ராமநாம ஸ்மரணை ஒரு அழிவில்லாத தவமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − four =

Most Popular