Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalலக்ஷ்மி கடாட்சம் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

லக்ஷ்மி கடாட்சம் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

நம் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மைகள், துணிவு, செல்வம், தான்யம், சுகம் போகம், அறிவு, அழகு, பெருமை, அறம், நற்குடி, உடல்நலமுள்ள நீண்ட வாழ்வு ஆகிய 16 பேறுகளை பெறலாம். பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்புகிறார்கள்.

தேவர்கள் ஸ்ரீ தேவியை வணங்கி தாயே தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு லட்சுமி தேவி எந்த வீட்டில் காலையில் எவரும் தூங்காமல் எழுந்திருந்து என் பெயரை சொல்கிறார்களோ எங்கு காலை வேலைகளில் வீட்டு வாயிலில் சாணி தெளித்து கோலம் போட்டுத் தீபம் ஏற்றி வைக்கின்றனரோ, எங்கு ஆச்சாரம் கடைபிடிக்கப்படுகிறதோ, எங்கு தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும் தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அந்த இடங்களில் எல்லாம் இருப்பேன் என்றாள்.

யாரிடம் லட்சுமி தங்கமாட்டாள்?

கலகம் செய்பவர், குரோதமாகப் பேசுபவர், பொய் சொல்பவர், சந்தியா காலத்தில் சாப்பாடு பவர், முடி, கரி, எலும்பு இவைகளைக் காலால் மிதிப் பவர், கால் அலம்பாமல் வீட்டுக்குள் வருகிறவர், தாய், தந்தைக்கு பணிவிடை செய்யாதவர், ஸ்வகர்மாவை விட்டவர், நகத்தைப் பல்லால் கடிப்பவர் ஆகியோர்களிடம் லட்சுமி தங்கமாட்டாள்.

லட்சுமி என்றால் சகல செல்வங்கள் வரும் வழி என்று பொருள். அதாவது அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதெல்லாம் லட்சுமியே. இவற்றைப் பெற்றுள்ள பாக்கியசாலியே லட்சுமி கடாட்சம் உள்ளவன் என்றழைக்கப்படுவான். மகாலட்சுமி தன் கடைக்கண்களை காட்டினாள் என்றால் இவ்வுலகில் எல்லாவகை செல்வங்களும் நமக்கு வந்துசேரும். அதற்கு நாம் அவளை அனுதினமும் மனமுருகி பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும்.

ஆனால் லட்சுமி நிலையற்றவள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். லட்சுமி எங்கும் நிரந்தரமாக தங்கி இருக்கமாட்டாள். அவள் எப்போதும் நிரந்தரமாக இருக்க என்ன செய்வது? இந்திரன் கேட்ட இக்கேள்விக்கு லட்சுமியே பதில் சொல்லுகிறாள்.

சத்தியம், தானம், விரதம், தவம், பராக்கிரமம், தர்மம் இவற்றிலே நான் குடிகொண்டிருக்கிறேன். என்னை நான்காகப் பிரித்து வழிபடு. அதனால் நான் உன்னைவிட்டு நீங்காமல் இருப்பேன் இந்திரன் இதைக்கேட்டு அனைத்தையும் தாங்கும் பூமியிலும், மக்களுக்கு உயிர் கொடுத்து வாழவைக்கும் நீரிலும், யாகம் முதலியவைகளுக்கு ஆதாரமாகியுள்ள அக்னியிலும், உண்மை பேசும் மனிதரிடமும் லட்சுமி தேவியை அவள் அனுமதியுடன் நான்கு பாகமாக்கி நிலைபெறச் செய்தான்.

வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். மஞ்சள் பூசியும் நீராட வேண்டும். பெண்கள் கிழிந்து தைத்த, நைந்துபோன ஆடைகளை உடுத்தக்கூடாது. நல்ல ஆடைகளை சுத்தமாக துவைத்து உலர்த்தி கட்டிக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளைத் திட்டுவது, உறவினர்களை ஏசுவது, அக்கம் பக்கத்து வீட்டார்களுடன் சண்டை செய்வது, கணவனை வசைமாரிப்பொழிவது போன்ற அமங்கலமான வார்த்தைப் பிரயோகங்கள் லட்சுமியின் வரவை தடைப்படுத்தும் காரணிகளாகும். பெண்கள் எப்போதும் வீட்டில் மங்களகரமான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் தினசரி விளக்குவைத்த பிறகு தலைவாருதல், பேன்பார்த்தல், நகம் வெட்டுதல், ஊசி நூல்களால் பழைய துணிகளை தைத்தல் போன்ற செயல்கள் கூடாது.

தினசரி சுவாமி சுலோகங்கள் பாராயணம் செய்தல், வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு பூஜை செய்தல், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவருதல் ஆகியவை லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

விசேஷ தினங்களில் நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலைப்பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், புஷ்பம், ரவிக்கைத்துண்டு, ரூபாய் தட்சணை வைத்துக்கொடுக்க வேண்டும். இவ்வாறாகச் செய்து வந்தால் நம் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 18 =

Most Popular