எப்போது பக்குவம் அடைய முடியும்?

29

எப்போது பக்குவம் அடைய முடியும்?

நமது சைவத்தை நாம் மதம் என்று சொல்லுவதில்லை சமயம் என்று சொல்லுகிறோம்
‘சமயம்’ என்ற சொல்லிற்கு சமைதல், சமைத்தல் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். ‘பெண் சமைந்தாள்’ என்று சொல்லுகிறோம். என்ன பொருள்? இல்லற வாழ்க்கைக்கு பெண் பக்குவப்பட்டு விட்டாள் என்பது பொருள்.

சோறு சமைத்து ஆகிவிட்டது என்று சொல்லுகிறோம். என்ன பொருள்? அரிசியை நாம் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையிலே பக்குவப்படுத்தி விட்டோம், சோறு ஆக்கிவிட்டோம் என்பது பொருள். சைவமும் அதைத்தான் செய்கிறது பக்குவப் படுத்துகிறது அரிசியை சோறு ஆக்கியது போல சைவம் எதை என்னவாக ஆக்குகிறது? சீவனை சிவன் ஆக்குகிறது நாம் மெய்ஞானமான பதி ஞானத்தைப் பெறுவதற்கு நம்மை நெறிப் படுத்துகிறது பக்குவப்படுத்துகிறது வழிப்படுத்துகிறது ஆற்றுப் படுத்துகிறது.
சரி பக்குவம் என்றால் என்ன? உணர்த்தியதை உணர்த்தியவாறு அதாவது உள்ளதை உள்ளவாறு உணர்தல் பக்குவமடைதல் எனப்படும். சரி இந்த பக்குவம் அடைதல் என்பதற்கு எளிய வழி உண்டா? உண்டு, முக்கரணங்களும் ஒருங்கிணைந்து ஒன்றாக செயல்பட்டால் நாம் பக்குவம் அடையலாம்.

வாய் சொல்லுவதை மனம் ஏற்பதில்லை நாம் அனைவருமே “இறை இன்பமே உயர்ந்தது” என்று சொல்லுகிறோம். ஆனால் அப்படி சொல்வது போல நாம் நடக்கிறோமா என்று எண்ணிப் பார்ப்போமே நமது வாய் சொல்லுவதை மனம் ஏற்றுக் கொள்கிறதா? ஒரு சித்தாந்த வகுப்பில் கலந்து கொண்டு வருகிறோம் திருவாசகம் முற்றோதலில் கலந்து கொண்டு வருகிறோம்.

வீட்டிற்கு வந்ததும் என்ன செய்கிறோம்? சிறிது நேரத்திலேயே டிவி முன்னாடி அமர்ந்து விடுகிறோம் இது எதைக் காட்டுகிறது? உண்மையில் “இறை இன்பமே பேரின்பம்” என்று நாம் சொன்னதை நமது மனம் ஏற்று இருக்குமேயானால் சிறிய இன்பத்திற்காக நாம் ஏன் டிவி முன் அமர வேண்டும்? ஒரே செயலை செய்து கொண்டே இருந்தால் ஒரு சலிப்பு தோன்றாதா, எனவேதான் ஒரு மாறுதலுக்காக டிவி முன் அமர்கிறோம் என்று நாம் பதில் அளிக்கிறோம் என்ன பொருள்?

எப்பொழுது நமக்கு சலிப்பு ஏற்படும் என்று சிந்தித்துப் பார்ப்போமே உலக இன்பம் தான் ஒரு சலிப்பை ஏற்படுத்தும் இறை இன்பமும் கூட சலிப்பை ஏற்படுத்துகிறது என்று நாம் நினைப்போமேயானால் நாம் அந்த இன்பத்தை ஓர் உலக இன்பமாகத்தான் கருதுகிறோம் என்பது தெளிவாகிறது இறை இன்பத்தை முழுமையாக உணரவில்லை என்பது தெளிவாகிறது, என்ன தெரிகிறது?

முக்கரணங்களும் ஒன்றாக செயல்படவில்லை என்பது தெரிகிறது நாம் இன்னமும் உதட்டளவில் சொல்லிக் கொண்டிருக்கிறோமே ஒழிய அதனை “உள”ப்பூர்வமாக இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஒருவேளை சித்தாந்த வகுப்பு முடித்து வந்த பிறகு சிறிது நேரத்திலேயே நாம் அதுகுறித்த நூல்களைப் படித்து நமக்கு எழும் ஐயப்பாடுகளை தெளிந்து கொள்வதற்கு முழு முயற்சி எடுப்போமேயானால் அது பக்குவம் அடைவதற்கு நாம் செய்யும் முயற்சி எனப்படும் ஒருவேளை அந்த நூலை படிக்க முடியவில்லை என்றால் சித்தாந்தம் அறிந்தவர்களோடு பேசி அந்த ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுதல் என்பது நாம் பக்குவமடைய எடுத்துக்கொள்ளும் முன் முயற்சி எனப்படும்.

மொத்தத்தில் இப்பொழுது நம்முடைய நிலை என்ன? நமது வாய் “இறை இன்பமே உயர்ந்தது” என்று சொல்லுகிறது. ஆனால் மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை இதை மனம் ஏற்றுக் கொண்டு விட்டால் நமது செயல் தானாகவே அவ்வாறு அமையும் இப்படி முக்கரணங்களும் ஒன்றுபட்டால் அதுவே பக்குவ நிலை அந்த நிலையில் இறைவன் நமக்கு கண்டிப்பாக மெய்ஞானத்தை வழங்குவார் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

முக்கரணங்களையும் ஒருங்கிணைப்போம் பக்குவம் பெறுவோம்.
வாழ்வில் வளமுடனும் நலமுடனும் இருப்போம்.