பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்?
ஒருமுறை திருமதி தர்கட் ஷீர்டியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார். மதியஉணவு தயாராகி பதார்த்தங்கள் எல்லாம் பரிமாறப்படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்குவந்து குரைக்கத் தொடங்கியது. திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்துண்டை விட்டெறியவும், அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக்கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது. பிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது சாயிபாபா அவளிடம், “அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவுபெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக. இது உன்னை நன்னிலையில் வைக்கும். இம்மசூதியில் அமர்ந்துகொண்டு பொய் பேசவே மாட்டேன். என்னிடம் இவ்விதமாக இரக்கங்கொள்வாய்.
முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்து, பின் நீ உண்பாயாக. இதை நன்றாகக் கவனித்துக்கொள்”, என்று கூறினார். முதலில் அவளால் அதன் பொருளை உணர இயலவில்லை. எனவே அவள், “எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்? நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்”, எனக் கூறினாள். இதற்கு பாபா, “அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான் மனப்பூர்வமாகத் திருப்தியடைந்தேன். நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன். உணவு வேலைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும். இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும். நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன். எனவே த்வைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப்போல் எனக்குச் சேவை செய்”, என்று கூறினார். இவ்வமிர்தத்தினை நிகர் மொழிகளைக் கேட்டு அவள் உருகி, அவளது கண்கள் பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது.
லக்ஷ்மிபாய் ஷிண்டே ஒரு நல்ல வசதியுள்ள பெண்மணி. இரவும் பகலும் அவள் மசூதியில் வேலை செய்தாள். பகத் மஹல்ஷாபதி, தாத்யா, லக்ஷ்மிபாய் இவர்களைத் தவிர வேறு எவரும் இரவில் மசூதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருநாள் மாலை பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்துகொண்டிருக்கும்போது லஷ்மிபாய் வந்து வணங்கினாள். பாபா அவளிடம், “ஓ! லக்ஷ்மி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்” என்றார். அதற்கு அவள், “பாபா சிறிதுநேரம் பொறுங்கள். நான் ரொட்டியுடன் வருகிறேன்” என்று கூறிக்கொண்டு சென்றாள். பிறகு ரொட்டி, காய்கறிகளுடன் அவள் திரும்பினாள். அவற்றை பாபாவின்முன் வைத்தாள். அவர் அதை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.
அதற்கு லக்ஷ்மி, “பாபா! இது என்ன? உங்களுக்காக நான் அவசரமாக ஓடி எனது சொந்தக் கைகளால் ரொட்டி தயாரித்தேன். நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துகொள்ளாமல் நாயிடம் தூக்கி எறிகிறீர்களே! வீணாக எனக்குத் தொல்லை கொடுத்தீர்கள்?” என்றாள்.
அதற்கு பாபா, “ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய். நாயின் பசியைத் தணிப்பது என் பசியைத் தணிப்பது போன்றதேயாம். நாய்க்கும் ஒரு ஆத்மா இருக்கிறது. ஜந்துக்கள் வெவ்வேறாயிருப்பினும், சில பேசினும், சில ஊமையாயிருப்பினும் அவைகள் யாவற்றுமுடைய பசியும் ஒன்றேயாம். பசியாய் இருப்போர்ர்க்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்துகொள்வாயாக. இதை ஒரு ஆதார நீதியாகக் கருது” என்று பதிலளித்தார். இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான். ஆனால், ஒரு மிகப்பெரும் ஆன்மிக உண்மையை பாபா அதன்மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார்.
ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி !
சர்வதேச உணவு தினம் இன்று !
RELATED ARTICLES
