ஆமருவியப்பன் பெருமாள் கோயில் – வரலாறு!

76

ஆமருவியப்பன் பெருமாள் கோயில் – வரலாறு!

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகிலுள்ள தேரழுந்தூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கோயில் ஸ்ரீ தேவாதிராஜன் ஆமருவியப்பன் பெருமாள் கோயில். இங்கு தேவாதிராஜன் மூலவராகவும் ஆமருவியப்பன் உற்சவராகவும் காட்சி தருகின்றனர். செங்கமலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

உற்சவங்கள்

மன்னன் கோஹத்தி சாபம் நீங்கப்பெற்ற நிகழ்வை ஒட்டி, இப்போதும் வருடத்தில் 2 நாட்கள் தை அமாவாசை தினத்திலும், புரட்டாசி கடைசி சனிக் கிழமையும் மூலவர் பெருமாளுக்கு ஆயிரம் குடம் வெண்ணை உற்சவம் நடைபெறுகிறது. மேலும் இந்த கோவிலில் பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் தேர் திருவிழா, பிரம்மோற்சவம், கார்த்திகை உற்சவம், பகல்பத்து, ராப்பத்து உற்சவம், தெப் போற்சவம், தாயாருக்கு தனியாக பிரம்மோற்சவம், பவித்ரோத்சவம் ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடை பெறுகின்றன.

கருட விமானம்

இந்த கோயிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். 107 திவ்ய தேசங்களிலும் சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார்.

மேலும் சுவாமிக்கு வலது புறத்தில் பிரகலாதன் இத்தலத்தில் மட்டுமே உள்ளார். உக்கிரமாக காட்சியளித்த சுவாமியிடம் பிரகலாதன், சாந்த சொரூ பியாக, கண்ணன் உருவில் காட்சிதர வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக்கொண்டு சுவாமி கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். மேலும் இத்தலம் மார்க்கண்டேயன் தவம் செய்த தலமாகும்.

ராஜ பதவி:

இக்கோயிலில் திருமண வரம் வேண்டுவோர், புத்திர பாக்கியம் வேண்டுவோர் வெண்ணெய் மற்றும் எண்ணை தந்து வழிபட, தோஷங்கள் நீங்கப்பெற்று, வேண்டிய வரம் பெறுவர். இத்தலத்தில் வேண்டுவோர்க்கு ராஜபதவி கிடைப்பதுடன், ராஜபதவியை பெற ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அத்தடைகளும் நீங்கும். இக்கோயிலின் தல விருட்சம் பலாமரம் ஆகும்.

தல தீர்த்தம்:

இக்கோயிலின் முன்பு தரிஷ புஷ்கரணி உள்ளது. தரிஷம் என்றால் அமாவாசை. அமாவாசையன்று உருவானதால் இது தரிஷ் புஷ்கரணி எனப்படுகிறது. மேலும் கஜேந்திர புஷ்கரணி என்ற தீர்த்தமும் உள்ளது.

கம்பர் சிலை:

கவி சக்கரவர்த்தி கம்பர் தேரழுந்தூரில் தான் பிறந்தார். இதனால் இக்கோவிலில் கம்பருக்கு புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த சிலை சேதமானதால் 1972-ல் அமைக்கப்பட்ட புதிய சிலையும் அதன் அருகிலேயே உள்ளது. இக்கோவிலின் எதிரில் சிவாலயமான வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளதும் சிறப்பம் சமாகும்.

அகத்திய முனிவருக்கு சைவ கோவிலில் தான் சிலைகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் அகத்தி யருக்கு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் எதிரே தனிக்கோவிலில் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

அரசனின் ஆணவத்தை அடக்கிய கிருஷ்ணர்:

தேவாதிராஜப் பெருமாள் இங்கு நின்ற கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். காவிரித் தாய் பெருமாளை மண்டியிட்டு சேவித்துக் கொண்டிருக்கிறாள். கம்பரின் அவதார தலம் இது. கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்குதான் பாடினார். கம்பருக்கும், அவர் மனையாளுக்கும், கோவிலுக்குள் சிலை எழுப்பியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வாராலும், மணவாள மாமுனிகளாலும் மங்களா சாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேசம் இது.

இங்கு யோக நரசிம்மர், வாசுவேதர், விஷ்வக்சேனர், தேசிகர், ராமபிரான், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.இங்குத் தருமதேவதை, உபரிசரவசு, கருடன், காவிரி, அகத்தியர் ஆகியோர் பெருமாளை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். இங்குப் பெருமாள் ருக்குமணி, சத்திய பாமாவுடனும் பசுங்கன்றுடனும் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீ கிருஷ்ணனாகத் காட்சி தருகிறார். கண்ணபிரானால் மேய்க்கப்பட்டிருந்த பசுக்களை ஒருசமயம் நான்முகன் கவர்ந்து சென்றான். அதை அறிந்த கண்ணபிரான் மாயையால் வேறு பசுக்களைப் படைத்தார். பிரமன் தன் தவற்றை உணர்ந்து வேண்டப் பெருமாள் ஆமருவியப்பன் என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் எழுந்தருளினார்.

ஒரு தடவை இப்பகுதி அரசன் 999 குடத்தில் வெண்ணை வைத்து ஒரு குடத்தை காலியாக வைத்து கிருஷ்ணரை ஏமாற்றினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த கிருஷ்ணர், ஒரு குடத்தில் வெண்ணையும் 999 குடங்கள் காலியாகவும் செய்து, அந்த அரசனின் ஆணவத்தை அடக்கினார். இத்தகையை சிறப்புடைய இந்த தலத்தில் விதிப்படி பூஜைகள் செய்தால் எல்லா கஷ்டங்களும் தூள்-தூளாகிவிடும். மேல் அதிகாரிகள் அராஜகத்துடன் நடந்து கொண்டால், இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால் பலன் உண்டாகும். காணாமல் போனவர்கள் வீடு திருப்பவும், தொலைந்து போன பெ£ருட்கள் மீண்டும் கிடைக்கவும் இத்தல வழிபாடு உதவுகிறது.

தல வரலாறு

ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். இத்தலத்தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்த தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களை காப்பாற்ற அந்த தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.

பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய அரசனுக்கு கோஹத்தி தோஷம் உண்டாகவே, மன்னன் சுவாமிக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணை சமர்ப்பித்து முறையிட்டு, பிரார்த்தனை செய்து, கோஹத்தி சாபம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு.