ஆனைமலை மாசாணி அம்மன் வரலாறு!

132
ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் வரலாறு!

ஆனைமலை மாசாணி அம்மன் வரலாறு!

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த மாசாணி அம்மன் கோயில் வரலாறு பற்றி காண்போம்.

ஆலயத்தின் வரலாறு:

சாதாரணமாக எல்லா அம்மன் ஆலயங்களிலும் அம்மன் அமர்ந்த கோலத்திலோ இருந்த கோலத்திலோ நிமிர்ந்து நின்ற கோலத்திலோ பார்த்து இருப்பீர்கள் .ஆனால் மாசாணியம்மன் மட்டும் 17 அடி நீளத்தில் படுத்து கிடப்பார். இந்த அம்மனுக்கு மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டு. 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் ஒற்றை ரூபாய் காயின் உடன் படுத்து கிடக்கும் அழகே மாசாணி அம்மனின் தனிச்சிறப்பு.

புராணக் கதை:

ராமாயண காலத்தில் கௌசிக மன்னர் ஆக இருந்து ரிஷியாக மாறிய விசுவாமித்திரர் தவம் செய்து பல வரங்களைப் பெற்றவர். தன் உடலையே திரியாக்கி எரித்து காயத்ரி மந்திரத்தை போதித்தவர். இத்தகைய தவசீலர் ராஜரிஷி என்ற பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்ற பெயருடன் விளங்கினார்.இவர் ஒரு முறை கனக மலையில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது தாடகை என்ற இராட்சசி அவரது தவத்திற்கு இடையூறு செய்தாள். தாடகை விரதம் இருந்து பல வரங்களையும் படைபலத்தையும் பெற்றவள். மேலும் ராவணனிடம் இருந்தும் பல சக்திகளைப் பெற்றவள்.

இறுதியாக விசுவாமித்திரர் தாடகையை அழிக்க தசரதனின் மகன்கள் ராமர் லட்சுமணனை அழைத்துக் கொண்டு வந்து அவளை அழிக்க வேண்டி கூறுகிறார். ராமர் அவளை பெண் என்று யோசித்தாலும்‌ அவள் சகலமும் நிறைந்தவள் அவள் பெண்ணே அல்ல அவள் ஒரு ராட்சசி என்று கூறி அவளை வதம் செய்யுமாறு கூறுகிறார். அவ்வாறு வதம் செய்வதற்கு முன்புஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஈஸ்வரியை நோக்கி தவம் செய்கிறார். ஈஸ்வரியும் ராமச்சந்திரமூர்த்தி முன் தோன்றி தாடகையை எவ்வாறு வதம் செய்ய வேண்டும் என்று சில சூட்சுமங்களை கூறுகிறார்.

மாசாணி அம்மன் தோன்றியது எப்படி?

அதாவது முதலில் தன்னை ஒரு மண்ணால் ஈஸ்வரி போல் உருவாக்கி அந்த மண்ணினால் செய்யப்பட்ட விக்கிரகத்தை அழித்துவிட்டு பிறகு தாடகையை வதம் செய்யுமாறு கூறுகிறார். அதேபோல் ராமச்சந்திர மூர்த்தியையும் ஈஸ்வரியை மண்ணால் உருவாக்கி பூஜை செய்து தாடகையை வதம் செய்யச் சென்று விடுகிறார் .அந்த நேரத்தில் மண்ணால் செய்த ஈஸ்வரியை அழிக்க மறந்துவிடுகிறார். தாடகையை வதம் செய்தபின் ஞாபகம் வந்து அதை அழிக்க முற்படும்போது ஈஸ்வரி தோன்றி அதை அழிக்க வேண்டாம் அது அங்கேயே இருக்கட்டும் என்று கூறுகிறார் அவ்வாறு உருவானதுதான் மாசாணி அம்மன். இது ஒரு வரலாறு.

மாசாணி அம்மனைப் பற்றிய வேறு ஒரு வரலாறும் உண்டு:

ஆனை மலைக்கு அருகில் உள்ள அழகிய ஒரு கிராமத்தில் மனமொத்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசித்தனர் .அவ்வாறு வாழ்ந்து வந்த நேரத்தில் மனைவி கருவுற்றாள். கணவனும் மனைவியும் அன்பாக இருந்த காரணத்தால் மனைவி தாய் வீடு கூட செல்லாமல் பிரசவத்தை தன் கணவன் முன்னிலையே நடத்திக் கொள்ள விரும்பினாள். நாட்கள் செல்லச்செல்ல பிரசவ வலி அதிகமானது மனைவி படும் துயரத்தை தாங்கமுடியாத கணவன் வலி மிகுந்த நேரத்தில் அவளை சற்று ஆசுவாச படுத்தி விட்டு மருத்துவச்சியை அழைத்து வரக் கிளம்பினான்.

ஆனால் அதே சமயம் மனைவியை தனியாக விட்டு செல்வதற்கும் அவனுக்கு பயம். இவன் தனியாக சென்று மருத்துவச்சியை அழைத்து வருவது என்றால் மனைவியை தனியாக விட முடியாது. அடர்ந்த காடு வனவிலங்குகள் அதிகம். அருகில் மனிதர்கள் யாரும் இல்லையே என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தான்.அதை புரிந்துகொண்ட அவன் மனைவி இரண்டு கல் தொலைவில் உள்ள என் தாயார் வீட்டிற்கு நாம் செல்வோம். அங்கு ஒரு மருத்துவச்சி இருக்கிறார். அவர் முக்காலமும் உணர்ந்தவர். தெய்வ சிந்தனையும் நற்பண்புகளும் ஞானத்தால் நடப்பதை அறியும் திறனும் பெற்றவர். நன்கு மருத்துவம் செய்வார். அவரிடம் செல்வோம். கஷ்டப்பட்டு நான் தங்களுடன் நடந்து வருகிறேன் என்று கூறினாள்.

பிரசவ வேதனையும் வலியும் தாங்க முடியாத நிலையை எட்டியதால் வேறு வழி இன்றி தாய் வீடு நோக்கி பயணமானார்கள். மெதுவாக நடந்து நடந்து ஒரு மைல் தூரம் வந்து சேர்ந்துவிட்டார்கள். அதற்கு மேல் அவளால் ஒரு அடி கூடஎடுத்து வைக்க முடியவில்லை. சற்று தூரத்தில் பார்த்தால் விளக்கு ஒளி தெரிந்தது. அச்சமயம் கணவனிடம் என்னால் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. தாங்கள் சென்று அந்த விளக்கு வெளிச்சத்தில் மனிதர்கள் இருப்பார்கள்.அங்கு மருத்துவச்சியும் இருப்பார்கள் .தயவு செய்து அழைத்து வாருங்கள். நான் எங்கும் போகமாட்டேன். இங்கேயே அமர்ந்து இருக்கிறேன் என்று உறுதிபட கூறினாள்.கணவன் வேறு வழியின்றி அவளை அங்கு அமர வைத்து விட்டு வெளியே விளக்கு வெளிச்சத்தை நோக்கி சென்றான்.

மிகுந்த மனவருத்தத்துடன் வேறு வழியின்றி வெளிச்சத்தை நோக்கி சென்று மருத்துவச்சியின் வீட்டுக்கதவை தட்டினான். அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்ல அவளும் மருத்துவ சாதனங்களையும் உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு அந்த ஊர் தலையாரி இன்னும் சில முக்கியஸ்தர்களை அழைத்துக்கொண்டு மனைவி இருந்த இடத்திற்கு அனைவரும் வந்தார்கள். அங்கு வந்து பார்த்த பொழுது மனைவியை காணவில்லை. இது என்ன இறைவா சோதனை மனவேதனை என்று அனைவரும் வருநதிக் கொண்டிருந்தார்கள் .அப்பொழுது மருத்துவச்சி ஆஹா நான் கண்ட கனவு பலித்துவிட்டது என் கனவு நிஜம் ஆகிவிட்டதே என்று யோசிக்கத் தொடங்கினாள். அப்பொழுது அவர்கள் அங்கு கண்ட காட்சி மயிர்க்கூச்செறிய வைத்தது. ரத்தம் உறைய வைத்தது.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அவனது மனைவியும் புதிதாகப் பிறந்த குழந்தையும் இறந்து கிடந்ததை கண்டு கதறி உடனே அந்த மருத்துவச்சியிடம் அம்மா தாங்கள் கண்ட கனவு பலித்து விட்டது என்று கூறுகிறீர்களே தாங்கள் என்ன கனவு கண்டீர்கள். என்ன நடந்தது என்று சற்று விளக்கமாக கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
உடனே அவர் கூறலானார். நீ மனைவியை விட்டு வந்தவுடன் ஒரு பெரிய கருத்த உருவம் ஒன்று இவளை நோக்கி கையை நீட்டிக் கொண்டு வந்தது .அது கண்டு அவள் பயந்து எழ முடியாமல் எழுந்து ஓட ஆரம்பித்தாள்.

ஆனால் ஒரு அளவுக்கு மேல் ஓட முடியாமல் என்னை விட்டு விடு விட்டு விடு என்று அந்த கரிய உருவத்திடம் கெஞ்சினாள் .ஆனால் அந்த கோர உருவமும் விடாமல் அவளைத் துரத்தியது. அந்த நேரம் அவளுடைய போறாத காலம் அவள் அங்கிருந்து மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து உயிர் நீத்தாள்.

அதே நேரத்தில் அவள் உடலிலிருந்து உயிர் பிரிந்து வானளாவி ஒரு பயங்கர ஜோதி ரூபமாய் கோடி சூரிய பிரகாசமாகத் தோன்றி நீண்ட உருவாமாய் திறந்த வாயுடனும் கைகளில் வேலுடனும் ஆயுதங்களுடனும் அந்த கரிய கொடிய உருவத்தை நோக்கி வந்து அவனுடைய மார்பைப் பிளந்து அந்த பெண்ணின் காலடியில் போட்டு விடுகிறது. இதுவே தான் கண்ட கனவு என்று அந்த மருத்துவ மூதாட்டி அவள் கணவனிடம் கூறினாள்.

மேலும் அவள் சாதாரண பெண்ணல்ல. வானில் தேவலோகத்திலிருந்து மண்ணில் உதித்த பெண் அவள். அவள் பக்தர்களை மனிதர்களை இரட்சிக்க வேண்டி உருவான தெய்வாம்சம் பொருந்திய பெண்ணவள் என்றும் மற்றும் காமதேனுவினால் இடைப்பட்ட சாணத்தில் கால்வைத்து இறக்காமல் இருந்திருந்தால் வேறு ஒரு ரூபத்தில் அவள் இறந்திருப்பாள். மாட்டுச்சாணத்தில் கால் வைத்து வழுக்கி விழுந்து இறந்தததனால் மாசாணி என்று பெயர் பெற்றார்.

மேலும் இவள் மானிடப்பிறவி அல்ல தெய்வப்பிறவி. ஆனாலும் இந்த அரக்கனை அழிக்க வேண்டி உருவானவள் என்பதனாலும் இந்த தெய்வாம்சம் பொருந்திய அம்மனை அரக்கன் காலடியில் உள்ள இந்த அம்மனுக்கு ஒரு கோயில் கட்டி பூஜித்து வழிபாடு செய்ய வேண்டும். மாட்டு சாணத்தில் கால்வைத்து விழுந்ததால் மாசாணி என்றும்இன்று முதல் அவளுக்கு பெயரும் விளங்கும் என்று அங்கிருந்த மக்கள் கூறினார்கள் .அதுவே மாசாணி அம்மன் என்ற பெயர் வரலாயிற்று.

பலன்கள்:

இந்த அம்மனை தொழுபவர்களுக்கு பில்லி சூனியம் மாதவிடாய்க் கோளாறு பேய் பிசாசு முதலிய பிடித்திருப்பவர்கள் ஒருமுறை மாசாணியம்மன் கோயில் சென்று வணங்கிவிட்டு வந்தால் அத்தனை பீடைகளும் நோய்களும் துன்பங்களும் நீங்கும் என்றும் மாசாணி அம்மன் வரலாறு கூறுகிறது .மேலும் பொன் பொருள் நகை போன்றவற்றை திருடிச் சென்றோ இல்லை பணம் வாங்கிக்கொண்டு இல்லை என்று கூறுபவர்களுக்கோ பழிதீர்க்க அங்கு மிளகாய் அரைத்து வைக்கும் நிகழ்ச்சியும் உண்டு.

அங்கு உள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயை அரைத்து வைத்து மூன்று மாதம் வரை காத்திருந்தால் எடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கொண்டுவந்து குடுத்து விடுவார்கள். இல்லை துரோகம் செய்தவர்கள் வந்து மன்னிப்பு கேட்டு விடுவார்கள். அவ்வாறு கேட்கவில்லை என்றால் அவர்கள் உடல் மிளகாய் தேய்த்தது போல் எரியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறே அவர்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு மீண்டும் பாலபிஷேகம் இளநீர் போன்றவற்றை செய்து அம்மனை குளிர்ச்சி செய்ய வேண்டும்.