அத்யாத்ம ராமாயணம் — யுத்த காண்டம்

348

‘பார்வதி, இனி நான் வானரப்படை யுத்தத்திற்கு எப்படி தயாரானது என்று சொல்லப் போகிறேன், கேள்:”

ஹனுமான் இலங்கையில் நடந்ததைக் கூறியதும் மிக்க மகிழ்ச்சியடைந்தார் ராமர்.

ஹா ஹா, ஹனுமான் எப்படிப்பட்ட ஒரு சுத்த வீரன். சிறந்த பக்தன். அறிவாளி. வினய சம்பன்னன். நூறு யோஜனை அகலத்துக்கும் மேலான கடலைத் தாண்டி, ஒருவனாகவே பல அரக்கர்களையும் ராவணனின் மந்திரிகளையும், அவன் மகனையும் கொன்றவன், சீதையிடம் பவ்யமாக அவளுக்கு பயம் ஏற்படாதவாறு அவள் மனநிலை தெரிந்து அவளுக்கு தன்னை உண்மையிலேயே ராம தூதன் தான் என்று காட்டிக்கொண்டு அவளுக்கு தக்க ஆறுதல் கூறியதிலும் ஒரு தூதுவனாக ராவணனுக்கு நன்மையை அறிவுறுத்தியதிலும் தனது கடமையில் துளியும் தவறாமல் பணி செய்வதிலும், செய்த காரியத்தின் பயனை, பலனை குறைந்த வார்த்தையில் நிறைவாக எடுத்துரைப்பதிலும் அவனுக்கு அவனே ஈடு. உவமையாக எவரையும் காட்ட முடியாது என்று அவர் மனதில் தோன்றியது.

பரமாத்மாவாக இருந்தாலும் பாரில் மனிதனாக அவதரித்ததால் ”கடலைக் கடப்பது எப்படி? சீதையை எவ்வாறு மீட்பது ” போன்ற கவலைகளைக் காட்டிக்கொண்டார் ராமர்.

”ஹனுமா, கடலைக் கடந்துவிட்டபோதும் நமக்கு இலங்கையின் அமைப்பு தெரியாதே. பார்த்த நீ விவரமாக சொல். முற்றுகையை திட்ட மிட உதவும். ”

”சுவாமி, நான் பார்த்ததைக் கவனமாக சொல்கிறேன். இலங்கை திரிகூட மலை சிகரத்தில் இருக்கிற ஒரு தேவலோகம். பொன்னாலான சுவர்கள் கொண்ட கோட்டை. மாட மாளிகைகள். தூய நீர் கொண்ட ஆழமான விசாலமான அகழிகள்.

பல பல பூக்கள் சொறியும் பரந்த நந்தவனங்கள். தெள்ளிய நீரோடும் வாவிகள். இலங்கையின் மேற்கு வாயிலில் ஆயிரக்கணக்கான யானைப் படைகள், வடக்கே எண்ணற்ற குதிரைப்படையினர், காலாட்படை வீரர்கள் எங்குமே.

இதைப்போலவே கிழக்கு தெற்கு வாயில்களிலும் கோடானுகோடி ராக்ஷச வீரர்கள் இரவும் பகலும் காவல். நகரத்தின் மத்தியில் பலவித அஸ்த்ர பயிற்சிகளில் அனுபவம் கொண்ட, யானை, குதிரை, தேர்,மற்றும் காலாட்படை வீரர்கள்.

நிறைய ரகசிய வழிகள், எங்கும் போர்க்கால படைக்கான உபகரணங்கள். இவ்வளவு இருந்தும் ராவணனின் படைவீரர்களில் நான்கில் ஒரு பங்கை நான் உங்கள் பெயர் சொல்லியதில் கிடைத்த பலத்தினால் கொன்று தீர்த்தேன்.

இலங்கை நகரத்தை எரித்தேன். மாட மாளிகைகளை அழித்தேன். ஆயுத, சாலை, ரகசிய வழிகளை .நாசம் செய்தேன். ஐயனே, தங்கள் பார்வை ஒன்று பட்ட மாத்திரத்திலேயே இலங்கை சாம்பல் பொடியாகும். பிரபு, நாம் எல்லா வானரவீரர்களுடனும் கடற்கரை நோக்கி செல்வோம்”

ஆஞ்சநேயன் இவ்வாறு சொன்னதும் ராமர் ”சுக்ரீவா புறப்பட ஆயத்தம் செய். அனைத்து வீரர்களுக்கும் ஆணையிடு. இப்போது ”விஜயா” என்கிற முகூர்த்த வேளை. இப்போது புறப்பட்டால் வெற்றியோடு திரும்புவோம். என் வலது கண் துடிக்கிறது.. இது நல்ல அறிகுறி.

வானர வீரர்களின் முன்பும் பின்பும் இரு பக்கங்களிலும் சேனாதிபதிகள் காவல் புரிய நான் ஹனுமான் தோளில் அமர்ந்து முன்னே செல்வேன். அங்கதன் தோளில் லக்ஷ்மணன் தொடர்வான் .

சுக்ரீவா, நீ என்னோடு வா. கஜன், கவாக்ஷன், மைந்தன், த்விதன், நளன் , நீலன், சுஷேணன், ஜாம்பவான், மற்ற எண்ணற்ற வீரர்கள் சேனையின் இடை இடையே பலமாக இருப்பார்கள்” என ராமர் கட்டளையிட்டார்.

(நான் சிறிது காலம் முன்பு ராமேஸ்வரம் சென்றபோது பிரம்மாண்டமான ராமேஸ்வரர் ஆலயத்தில் 27 கிணறுகளில் புண்ய தீர்த்த ஸ்நானம் செய்தேன். அங்கு அந்த தீர்த்த கிணறுகளின் பெயர்கள் இந்த வானர வீரர்கள் பெயர்களோடு இருப்பதை கவனித்தேன்.)

படை தென் திசை நோக்கி நகர்ந்தது. கடல் போன்ற அந்த பெரிய வானர சைன்யத்தில் ஆஞ்சநேயர் – அங்கதன் தோள்களில் சென்ற ராம லக்ஷ்மணர்கள் அகன்று பரந்த ஆகாயத்தில் எண்ணற்ற நக்ஷத்திர கூட்டத்தில்இரவும் பகலும் மாறி மாறி சுடர்விடும் சூரிய சந்திரர்கள் போல தோன்றினார்கள்.

வானர சைன்யம் மலய , ஸஹ்யாத்ரி பர்வதங்களையும் அடர்ந்த காடுகளையும் தாண்டிச்சென்று கடைசியில் ஓ வென்ற பேரிரைச்சலோடு காட்சியளித்த கடலின் கரையை அடைந்தார்கள்.

”பார்வதி தேவி, படைகள் இங்கேயே தங்கட்டும். கடலைக்கடக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்” என்று அப்போது வீரர்களுக்கு ராமர் கட்டளையிட்டார்” என்று பரமேஸ்வரன் சொன்னவுடன் உமைக்கு கவலை வந்துவிட்டது. இனி ராமர் ” அவ்வளவு பெரிய வானர சேனையை எப்படி கடலைக் கடக்க வைப்பார்?” என்று.

”பரமேஸ்வரி, தானே யாவுமான பரம்பொருள் ஸ்ரீ ராமனின் உண்மை அவதார தத்தவத்தை அறிந்து கொண்டால் எவரையும் துக்கம் துன்பம் பயம் எதுவுமே அணுகாது.

துயரம், மகிழ்ச்சி, அச்சம், சினம், பேராசை, மயக்கம், எல்லாமே அஞ்ஞானத்தின் சின்னங்கள். உடல் பற்று கொண்டவர்களை மட்டுமே இவை பாதிக்கும்.

சிதாத்மாவுக்கு அல்ல. ஆழ்ந்த அமைதி பெற்ற மனம் அஷ்டாங்க யோகத்தின் கடைசி கட்டமான சமாதி நிலை பெறும்.

அந்நிலையில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டறக் கலக்கும். எஞ்சி நிற்பது பேரானந்தம் ஒன்றே. ஸ்ரீ ராமன் பரமாத்மா, புண்ய புராண புருஷன். சுகமே உருவானவன்.