விதுரன் திருதராஷ்டிரன் முடிவு
சூத முனிவர் சவுனகாதி முனிவர்களுக்கு மேலும் கூறலானார். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த விதுரர் அஸ்தினாபுரம் வரும் வழியில் மைத்ரேயரைச் சந்தித்து ஆத்ம தத்துவத்தைக் கேட்டு அறிந்து சிறந்த ஞானத்தைப் பெற்று ஸ்ரீகிருஷ்ணன் மீது நிர்மலமான பக்தியும், அமைதியும் பெற்றார். நீண்ட நாட்களாய் பிரிந்திருந்த சிறிய தகப்பனார் விதுரரைக் கண்ட யுதிஷ்டிரர் அன்புக் கண்ணீர் பெருக்கினார். பிறகு விதுரருக்குப் போஜனம் செய்வித்து யோகக்ஷேமங்களை விசாரித்தார். அப்போது விதுரர் தருமனுக்கு எல்லாவற்றையும் கூறினார். ஆனால், யதுகுலத்துக்கு நேர்ந்த கஷ்டத்தை மட்டும் கூறவில்லை. பிறகு தனது தமையனாருக்கு ஞானமார்க்கம் பற்றி எடுத்துக் கூறியவராக காலம் கடத்தி வருகையில் மரணகாலம் நெருங்குவதை அறிந்து தமையனிடம் பின்வருமாறு கூறினார்.
“காலதேவனின் சக்தியை வெல்ல முடியாதல்லவா? விரைவிலேயே வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும். அதற்காக இந்த வயதில் பிறரை அண்டி வாழ வேண்டும். எவர்களுக்காகப் பல கொடிய செயல்களைச் செய்தீரோ அவர்கள் வீட்டிலேயே வாழலாமா? வீட்டைக் காக்கும் நாய்க்கு சோறிடுவதைப் போல பீமன் உமக்கு அன்னம் இடுகிறான். எவ்வளவுதான் உயிர்மீது ஆசை வைத்தாலும் சரீரம் காலக்கிரமத்தில் அழியும். எவன் ஆசைகளை விட்டுப் பற்றின்றி வைராக்கிய மனதுடன், வீட்டை விட்டு வெளியேறி யாரும் அறியாமல் சரீரத்தை விடுகிறானோ அவனே தீரபுருஷன். எவன் ஸ்ரீஹரியின் சரணங்களையே தியானித்து வீட்டை விட்டுத் துறவியாக புறப்பட்டுச் செல்கிறானோ அவனே உத்தமன். எனவே உடனே யாருக்கும் தெரிவிக்காமல் வடக்கு திக்கில் செல்லுங்கள்” என்றார். உடனே திருதராஷ்டிரன், காந்தாரி பின் தொடர விதுரர் வழிகாட்ட வீட்டைத் துறந்து, இமயமலைக்குச் சென்று விட்டார்.
தருமர் வழக்கப்படி பெற்றோர்களை வணங்க வந்தவர், மாளிகையில் யாரும் இல்லாதது பற்றி சஞ்ஜயரைக் கேட்க, அவரும் தன்னை ஏமாற்றிவிட்டு அவர்கள் எங்கு சென்றார்களோ தெரியவில்லை என்றார். அப்போது அங்கே வந்த நாரத முனிவர் வீணாக வருந்த வேண்டாம்; எல்லாம் பகவான் கட்டளைப்படியே நடக்கும். பஞ்சபூத சரீரத்தினால் ஆன எவரையும் காப்பாற்ற முடியாது என்று கூறி திருதராஷ்டிரர் குடும்பத்துடன் இமயமலை சென்றதைக் கூறினார். தருமன் மனம் தெளிந்து சோகத்தை விட்டார்.
சில நாட்கள் கழிந்த பின் தருமர், உற்றார் உறவினர் க்ஷேம லாபங்களை அறிந்து வர அருச்சுனனைத் துவாரகைக்கு அனுப்பினார். அஸ்தினாபுரத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. பல மாதங்களிலும் அருச்சுனன் திரும்பி வராததால் பீமசேனனைத் துவாரகைக்குச் சென்று வருமாறு கூறினார். மேலும் நாரதர் கூறியபடி பகவான் தனது லீலாவதாரமான சரீரத்தை விட்டு விடும் காலம் வந்து விட்டதோ என்று கவலையுற்றான். அவ்வமயம் துவாரகையிலிருந்து திரும்பி வந்த அருச்சுனன் யுதிஷ்டிரரை வணங்கிக் கண்ணீர் மல்க நிற்பது கண்டுபயந்தார். எல்லோரும் நலந்தானே என்று விசாரித்தார். அப்போது அருச்சுனன் நா தழுதழுக்க, ஸ்ரீ ஹரி உற்ற பந்துவாக இருந்தும் என்னை வஞ்சித்து விட்டார். என்னுடைய தேஜஸ் வீர்யம் எல்லாம் அபகரிக்கப் பட்டு விட்டது. நான் சக்தி அற்றவன் ஆகிவிட்டேன். அவருடன் வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது. துவாரகா நகரமே சூன்யமாகி விட்டது. நமக்குக் கோவிந்தனுடைய நாமஸ்மரணமே தான் துணை. அதுவே நமது துன்பங்களை நீக்கக் கூடியது என்று ஆற்றாமையுடன் கூறினான். பின்னர் கீதோபதேசங்களை நினைவு கூர்ந்து ஞானம் பெற்றான். குணாதீத நிலையைப் பெற்ற அவன் ஜீவன் முக்தனானான். குந்தியும் அவன் சொற்களைக் கேட்டு சம்சார சூழலிலிருந்து விடுபட்டாள்.
சக்கரவர்த்தியாகிய தருமபுத்திரன், குணசாலியும் வணக்கமுடையவனுமாகிய பேரனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து மதுரா நகரில் சூரசேன நாட்டிற்கு வஜ்ரனை அரசனாக்கினார். பின்னர் அகங்கார, மமகாரங்களை விட்டு மோகமின்றி எல்லாப் பந்தங்களையும் துறந்து வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அரண்மனையை விட்டு வெளியேறினார். சகோதரர்களும் மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். திரவுபதியும் வாசுதேவனையே சரணாக அடைந்து, ஏகாந்தபக்தியில் ஈடுபட்டு அவரையே அடைந்தார். இவ்வாறு பகவானுடைய பிரியமான பக்தர்களான பாண்டவர்களுடைய மகா பிரயாணத்தைப் பற்றி பாகவதம் கூறுகிறது.
தொடரும்…
ஓம் க்ரிஷ்ணாய நமஹ!
