யக்ஞவராக மூர்த்தி
சிறந்த ஞானியும், பகவத் குணங்களிலேயே ஆழந்திருப்பவருமான மைத்ரேயரை, விதுரர் கங்கத் துவாரத்திற்குச் சென்று வணங்கினார். அவரிடம் விதுரர், எதைச் செய்வதால் சாந்தியும், அகமும் உண்டாகுமோ அதைக் கூறியருளுமாறு வேண்டினார். புண்ணியகீர்த்தி வாய்ந்த ஸ்ரீ ஹரியினுடைய திவ்ய சரிதாம்ருத ஸாரத்தை வழங்குங்கள் என்றார். அப்போது மைத்ரேயர் விதுரரைப் புண்ணியவான் என்றும் பகவான் அருளைப் பெற்றவர் என்றும், அதனாலேயே உமக்கு ஞானோபதேசம் செய்யும்படி பகவான் எனக்கு ஆணையிட்டுள்ளார் என்றும் கூறினார். பகவானுடைய யோக மாயா சக்தியினால், உண்டாகிய விராட் சிருஷ்டியின் ரகசியங்களையும் பிரம்ம தேவரின் உற்பத்தியையும் அவரால் செய்யப்பட்ட சிருஷ்டி விசேஷங்களையும் கால சொரூபியாகிய பகவானின் மகிமைகளையும், காலத்தின் பிரிவுகளையும் ஸ்வாயம்பு மனுவின் பிறப்பையும் விரிவாக உரைத்தார்.
ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருட்கடாட்சத்தினாலும், இடைவிடாத பத்தி யோகத்தினாலும் துயரங்கள் மெள்ள மெள்ள விலகிவிடுகின்றன. பின்னர் மைத்ரேயர் விதுரர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்ம புத்திரர் ஸ்வாயம்பு மனுவின் சரித்திரத்தைக் கூறுகிறார்:
ஸ்வாயம்பு மனு, தன் மனைவியாகிய சமரூபையுடன் பிரம்ம தேவரை வணங்கி என்ன செய்ய வேண்டுமென்று கேட்க, அவர் தர்மநீதி தவறாமல் மக்களைப் பாதுகாத்து வருவாயாக. இது தனக்குச் செய்யும் பணிவிடை. மேலும் யக்ஞங்களால் ஸ்ரீ ஹரியை ஆராதிப்பதால் பகவான் ஹிருஷிகேசர் சந்தோஷமடைகிறார் என்றார். அப்போது ஸ்வாயம்புமனு, தனக்கும் பிரஜைகளுக்கும் தங்குவதற்கு இடம் இல்லை. பூமி கடலில் மூழ்கிக் கிடக்கிறது. அதனை உயரக் கொண்டு வருவது எப்படி என்று கேட்டார்.
அதுகேட்ட பிரம்மன் பகவானைத் தியானிக்க அவருடைய மூக்குத் துவாரத்திலிருந்து கட்டை விரல் அளவு பன்றிக்குட்டி தோன்றி குதித்து, அடுத்த கனமே யானை அளவு வளர்ந்து விட்டது. இது என்ன அதிசயப் பிராணி என்று பிரம்மன் யோசிக்க, மலை போன்ற சரீரத்துடன் வராக வடிவில் பகவான் கர்ஜிக்க ரிஷிகள் மகிழ்ந்தனர்.
உடனே அந்த வராக ரூபி கடலில் குதித்து, பாதாளம் வரை சென்று, அங்கே மறைந்து கிடந்த பூமியைத் தன்னிரு கொம்புகளால் தூக்கி எடுத்துக் கொண்டு வெளிக்கிளம்பினார். அதைக் கண்ட திதியின் மகன் ஹிரண்யாக்ஷன் கதாயுதத்துடன் பகவானை நோக்கி ஓடிவந்தான். அந்த அசுரனை வராக ரூபியான விஷ்ணு விளையாட்டாகவே கொன்றார். அப்போது ரிஷிகளால் துதி செய்யப்பட்ட பகவான் பூமியை நீரில் மிதக்கச் செய்துவிட்டு மறைந்தார். (இது வராக அவதாரம்)
தொடரும்…
ஓம் க்ரிஷ்ணாய நமஹ!